விளக்குகள் அணைக்கப்பட்ட இருட்டறையில் படம் ஓடத் தொடங்கியது. காட்சிக் கவிதையாக விரிந்த படத்தை இயக்குநர்கள் அவ்வப்போது சிலாகித்தும் பாராட்டிப் பேசியபடியும் இருந்தார்கள். இடையில் நொறுக்குத் தீனியும் காபி கோப்பைகளும் சுமந்தவர்களாக அலுவலக உதவியாளர்கள் குறுக்கும் மறுக்குமாக சென்று வந்தார்கள். காட்சிகளின் ஊடாக நேரும் ஆழ்ந்த மௌனங்களின் போது அருகிலிருந்து முறுக்கு மெல்லும் சத்தம் சன்னமாகக் கேட்டபடி இருந்தது. தமிழ் சினிமா இயக்குநர் ஒருவரின் அலுவலக அறை பற்றி முன்பின் எந்த பரிச்சயமும் இல்லாததால் பரான் போன்ற படங்கள் பார்க்க அது அசௌகரியமான சூழல்தான். என்றாலும், படத்தின் கதாப்பாத்திரங்களும் காட்சிப்படுத்தலும் பூரண கவனத்தைக் கோரின. லத்தீஃப் என்ற கதாபாத்திரம் பரானின் மேல் காதல்வயப்பட்டு பனி படர்ந்த ஓரிடத்தில் தனிமையில் நடந்து வருவது போன்ற ஒரு மாண்டாஜ் படத்தில் வந்தது. உடனே அங்கிருந்தவர்களில் ஒருவர் ‘தேவதையைக் கண்டேன்... காதலில் விழுந்தேன்...’ என உரத்துப் பாடி குறிப்பிட்ட காட்சியின் பின்னணியோடு தான் ஒன்றியிருந்த விதத்தை வெளிப்படுத்தி புளகாங்கிதம் அடைந்தார். மற்றவர்களும் அவரின் புலமையைப் பாராட்டினார்கள். இதற்கு எனது ரீயாக்ஷன் என்ன என்பதிலும் அவர்களுக்கு அக்கறை இருந்தது. போலியான புன்னகை தவிர என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழியேதும் இருக்கவில்லை.
பை சைக்கிள் தீவ்ஸ், பதேர் பாஞ்சாலி போன்ற சிலபஸ் திரைப்படங்களைத் தவிர நவீன உலக சினிமாவை, அதிலும் குறிப்பாக ஈரானியத் திரைப்படங்களை பார்க்கத் தொடங்கிய முழுமுதல் சந்தர்ப்பம் அது என்பதால் அதன் முக்கியத்துவம் கருதி விரிவாகச் சொல்ல வேண்டியதாகிறது.
பரானின் சினிமா அனுபவத்தை சிந்தாமல் சிதறாமல் என்னுள் தாங்கியபடி அந்த சினிமா அலுவலகத்திலிருந்து சைக்கிளில் வீடு திரும்பியது நன்றாக நினைவிருக்கிறது. இரவு ஒன்பது மணியாகியும் சாலைகளில் வாகன நெருக்கடி இருந்தது. சில்லென காற்று வீச சற்றைக்கெல்லாம் பொத்துக் கொண்டது போல மழை கொட்டத் தொடங்கியது. வாகன ஓட்டிகள் மழைக்கு ஒதுங்கியபடி இருக்க நிதானமாக நனைந்தபடி சைக்கிளில் சென்றது மறக்க முடியாதது.
பிறகு, மஜித் மஜிதியின் மற்ற படங்கள், மக்மல்பஃப் குடும்பத்தினரின் படங்கள், அப்பாஸ் கெய்ரோஸ்தமி, என ஈரானியப் படங்களைத் தேடிச் செல்லத் தொடங்கினேன். 2005-ம் ஆண்டு கோவா திரைப்பட விழாவில் பியூட்டிஃபுல் சிட்டி என்ற ஒரு படம் பார்க்க நேர்ந்தது. புதிய தலைமுறை ஈரானிய இயக்குநரான அஸ்கார் ஃபர்ஹாடி பியூட்டிஃபுல் சிட்டியை இயக்கியிருந்தார். அந்த ஆண்டுக்கான சிறந்த படத்திற்காக தங்க மயில் விருதையும் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருதையும் அஸ்கார் ஃபர்ஹாடியின் பியூட்டிஃபுல் சிட்டி தட்டிச் சென்றது. திரையிடலின் போதே பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்றிருந்ததால் விருதுகள் பெற்றதில் யாருக்கும் ஆச்சர்யம் ஏற்படவில்லை. ஃபர்ஹாடி பழக எளிமையானவராகத் தெரிந்ததால் திரையிடல்களுக்கு இடையே அவருடன் பியூட்டிஃபுல் சிட்டி பற்றி விவாதிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆங்கிலத்தில் பேசவும் புரிந்துகொள்ளவும் ரொம்பவும் சிரமப்பட்டார். எனது அறைகுறை ஆங்கிலம் பற்றி அவரிடம் கூச்சப்படத் தேவையில்லை என்ற தைரியத்தில் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். திரைப்பட விழா நாட்களில் மண்டோவி ஆற்றங்கரையிலும் அவ்வப்போது வீதிகளிலும் தனியாக அவர் உலவிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நிறைவு விழாவில் விருதுகள் பெற்ற பின்னும்கூட எந்த மாற்றத்தையும் அவரிடம் காண முடியவில்லை. புறப்படும் முன் ஒரு துண்டுக் காகிதத்தில் தன் மின்னஞ்சல் முகவரி எழுதித் தந்துவிட்டுச் சென்றார். இடைப்பட்ட நாட்களில் ஒன்றிரண்டு மின்னஞ்சல் விசாரிப்புகளோடு ஃபர்ஹாடியை மறந்திருந்த எனக்கு இந்த 14-வது கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் அவர் எழுதி இயக்கிய ‘எல்லியைப் பற்றி (About Elly)’ படம் கண்ட பின் அவரின் மீதான கவனமும் ஈர்ப்பும் கூடியது என்றே சொல்ல வேண்டும்.
அஸ்கார் ஃபர்ஹாடி ஈரானின் இஸ்ஃபஹானில் 1972-ம் ஆண்டு பிறந்தவர். பள்ளி நாட்களிலிருந்தே எழுத்து, நாடகம், சினிமா, என ஆர்வம் கொண்டிருந்தவர், பின்னால் டெஹ்ரான் பல்கலைக் கழகத்திலிருந்து நாடகக் கலைக்கான இளங்கலைப் பட்டமும் டர்பியாட் பல்கலைக் கழகத்திலிருந்து நாடக இயக்குநருக்கான முதுகலைப் பட்டமும் பெற்றார். மாணவப் பருவத்தில் நாடகங்கள் எழுதி இயக்கியதும் நேஷனல் ரேடியோ மற்றும் தொலைக்காட்சிக்கென நாடகங்கள் இயக்கியதும் பின்னாளில் ஃபர்ஹாடிக்கு அவர் வளர்ச்சியில் பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன. இஸ்ஃபஹானில் உள்ள ஈரானிய இளம் சினிமா இயக்கத்திற்காக (Iraninan Young Cinema Society) 8mm, 16mm படச் சுருள்களில் குறும்படங்கள் இயக்கினார். தொடர்ந்து நாடகங்கள், திரைக்கதைகள் என இயங்கி வந்தார். ஃபர்ஹாடி இயக்கத்தில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சித் தொடர் ஈரானில் பெரும் வரவேற்பைப் பெறவும் முழுநீளத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஃபர்ஹாடி இயக்கத்தில் டான்ஸிங் இன் தி டஸ்ட் என்ற அவரது முதல் திரைப்படம் 2003-ம் ஆண்டு வெளியாகி மாஸ்கோ திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த படத்திற்கான விமர்சகர்களின் விருதும் பெற்றது. இதே படம் தொடர்ந்து பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு போதிய வெளிச்சம் கிடைத்தாலும் 2004-ல் அவர் இயக்கிய தி பியூட்டிஃபுல் சிட்டி திரைப்படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.
தி பியூட்டிஃபுல் சிட்டி, வார்சா திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதையும், இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான தங்க மயில் விருதையும் பெற்றதுடன் ஃபாஜிர் உள்ளிட்ட பல முக்கியத் திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் வென்றது. தொடர்ந்து ஃபர்ஹாடி இயக்கிய ஃபயர்வொர்க்ஸ் வெட்னஸ்டே 2006-ம் ஆண்டு வெளியாகி சிக்காகோ திரைப்பட விழா, கேரளத் திரைப்பட விழா உள்ளிட்ட பல முக்கிய திரைப்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றது. ஃபயர்வொர்க்ஸ் வெட்னஸ்டே, டான்ஸிங் இன் தி டஸ்ட் படங்களைத் தேடிப் பார்ப்பதற்குள் 2009-ம் ஆண்டில் ஃபர்ஹாடி இயக்கத்தில் வந்திருக்கிற, நான் கண்டு வியந்த திரைப்படம்தான் ‘எல்லியைப் பற்றி (about elly)’. ‘எல்லியைப் பற்றி’, ஃபர்ஹாடியின் நான்காவது திரைப்படம். நல்ல வேளையாக இந்த தடவை கேரளத் திரைப்பட விழாவைக் காண்பதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்ததால் ‘எல்லியைப் பற்றி’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களைக் காண முடிந்தது.
ஒரு நீண்ட குகைப் பாதைக்குள் கார்களின் ஜன்னல் வழியே தலையை எட்டிப் பார்த்தபடி அவர்கள் ஆனந்தக் கூக்குரல் எழுப்பிச் செல்கிறார்கள். டெஹ்ரான் மாகாணத்திலிருந்து மூன்று குடும்பங்கள் தங்களின் வார இறுதி நாட்களைக் கொண்டாட ஈரானின் வடக்கு பிரதேசத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். அண்மையில் தன் மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்ற அஹமத் ஜெர்மனியிலிருந்து வந்து அவர்களுடன் பயணத்தில் இருக்கிறான். நான்கு ஆண்கள், நான்கு பெண்கள், மூன்று குழந்தைகள், ஆகிய பதினோரு பேரும் மூன்று நாள் விடுமுறையைக் கொண்டாட மேற்கொள்ளும் உற்சாகப் பயணம். இடையே இன்னும் ஒரு நபர் அவர்களுடன் வர இருப்பதால் ஓரிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு இளைப்பாறுகிறார்கள். அமீரின் மனைவி செபிடெ, பயணத்தின் ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்து வருகிறாள். மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் செபிடெ அஹமத்தையும் மற்றவர்களையும் கிண்டல் செய்தபடி இருக்கிறாள். சிரிப்பும் குதூகலமும் அந்த இடம் முழுக்க நிறம்பி இருக்க அஹமத் தனிமைப் பட்டவனாகவும் அவ்வப்போது தன்னைத் தானே தனிமையில் இருந்து விடுவித்துக்கொள்ளும் முயற்சியாக அவர்களின் கிண்டல் கேலிகளில் பங்கேற்பவனாகவும் இருக்கிறான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்து செர்கிறாள் எல்லி. சாந்தமும் கருணையும் நிறைந்த முகம் மென் சோகக் கவிதை போல இருக்கிறது.
இருபது வயது மதிக்கத்தக்க எல்லி ஒரு நர்சரி பள்ளியின் டீச்சர். செபிடே, அமீர் தம்பதியரின் குழந்தைக்கு வகுப்பெடுப்பவள். குழந்தையின் படிப்புகுறித்து விசாரிக்கச் செல்லும்போது ஏற்பட்டது செபிடே-எல்லி நட்பு. ஒரு சில சந்திப்புகளிலேயே தங்களின் வாழ்க்கையைப் பற்றி பேசியிருந்ததால் அவர்கள் இருவருக்கும் மற்றவரைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். செபிடே எல்லியை அஹமத் உள்ளிட்ட அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாள். அனைவரும் தங்கள் கேலி கிண்டல்களைத் தொடர்ந்தபடி இருக்க எல்லி மெல்லிய புன்னகையுடன் அதிகம் ஆர்வம் காட்டாதவளாகவும் குழப்பத்துடனும் காணப்படுகிறாள். அவர்கள் அனைவரும் உற்சாகம் குறையாதவர்களாக அங்கிருந்து புறப்பட்டு செபிடே சொல்லி வைத்திருந்த ஒரு விடுதிக்கு வருகிறார்கள். விடுமுறை தினம் என்பதால் பதிவு செய்திருந்த விடுதியை அதிக வாடகைக்கு வேறு நபர்களுக்குக் கொடுத்தது தெரியவர குடும்பத்தில் மற்றவர்கள் செபிடேயின் அரைகுறைத் திட்டமிடல் குறித்து விமர்சிக்கிறார்கள். செபிடே அதைப் பொருட்படுத்தாமல் வேறு விடுதிகள் கிடைக்குமா என விசாரிக்கிறாள்.
தொடர்ந்த தேடலின் பின் ஓரிடத்தில், “நாங்கள் நெடுந்தூரம் வந்துவிட்டோம். எங்களில் ஒரு புதுமணத் தம்பதியர் இருக்கிறார்கள் அவர்களுக்கு மட்டும் அறை கிடைத்தால் போதும். நாங்கள் எங்கள் கார்களிலேயேகூட உறங்கிக் கொள்கிறோம்” என செபிடே கேட்கிறாள். அவளின் கணவன் அமீரும் மற்ற பெண்களும் செபிடே பேசியதை வியப்புடன் பார்க்க அஹமத் புரிந்தவனாக நிற்கிறான். செபிடே பேசியதன் பலனாக கடற்கரையை ஒட்டி பயன்பாட்டில் இல்லாத ஒரு பாழடைந்த விடுதி அவர்களுக்கு கிடைக்கிறது. சிலர் அங்கே தங்குவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவும், அங்கே தங்க விருப்பம் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கிடையேயான பெரும்பாண்மைக் கருத்துக்காக வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். அதிகம்பேர், வேறு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, தூசி படிந்த அறைகளைச் சுத்தம் செய்துவிட்டு இங்கேயே தங்கலாம் என்று சொல்ல அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆளும் பேருமாக பைகளையும் கொண்டு வந்த பொருட்களையும் கார்களிலிருந்து கொண்டு வந்து உள்ளே வைக்கிறார்கள். எல்லி, அந்த பெண்களுடன் சேர்ந்துகொண்டு வேலைகளைப் பகிர்ந்து விடுதியைச் சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். குழந்தைகள் கடற்கரையைக் கண்டு உற்சாகமாக விளையாடச் செல்கிறார்கள். விடுதிக் காப்பாளரான பெண் அங்குள்ள ஒரு சிறுவனிடம் சாவிக் கொத்தை கொடுத்தனுப்புகிறாள்.
அது ஒரு தனிமையான விடுதி. அக்கம் பக்கத்தில் ஆள் அரவமற்று துருப்பிடித்த கதவுகளுடன் கடற்காற்று மட்டும் வந்து செல்லும் இடம். எப்போதும் அலைகளின் சத்தமும் குளிர்ந்த காற்றுமான பிரதேசம். தொலைபேசி வசதி கிடையாது. அலை பேசிக்கும் சிக்னல்கள் இல்லை.
எல்லியின் அடக்கம், அழகு, பொறுப்பு போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட செபிடேவுக்கு எப்படியாவது அவளை அஹமதிற்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதே நோக்கம். எனவேதான் அவளைச் சரிகட்டி இந்த உல்லாசப் பயணத்தில் பங்கெடுக்க வைத்திருப்பாள். செபிடேவைப் பொறுத்தவரை அஹமதிற்கும் எல்லிக்கும் நல்ல பொருத்தம் என்பது தீர்க்கமான எண்ணம். தனது திட்டத்தை ஏற்கனவே அஹமதிடமும் தன் கணவன் அமீர் உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும் சொல்லி இருப்பாள். அஹமத் முதலில் மறுப்பு தெரிவித்தபோது அனைவரும் அவனை வற்புறுத்தி ஒத்துக்கொள்ள வைத்திருப்பார்கள். எல்லியை முதன் முதலாக நேரில் பார்த்தபிறகு அவளை அவனுக்கு பிடிக்கவே செய்திருக்கிறது என்றாலும் அதிகம் ஆர்வம் காட்ட மாட்டான். விடுதிக் காப்பாளரிடமிருந்து சாவியை பெற அஹமத், எல்லி, இருவரையும்தான் புது மணத் தம்பதிகள் என பொய் சொல்லியிருப்பாள் செபிடெ. மற்றவர்களும் பின்னால் தம்பதிகளாக ஆகப் போகிறவர்கள்தானே என அதை பெரிசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
செபிடேவிடம் மார்க்கெட்டிலிருந்து தேவையான பொருட்களை வாங்கிவரச் சொல்கிறார்கள். செபிடே வேண்டுமென்றே தனக்கு வேறு வேலைகள் இருப்பதாகவும் அஹமத்தையும் எல்லியையும் அனுப்பும்படிச் சொல்ல மற்றவர்கள் அதைப் புரிந்துகொண்டு அவர்கள் இருவரையுமே போய் வரச் சொல்கிறார்கள். அஹமத் கார் சாவியை வாங்கிக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர எல்லி தயக்கத்துடன் முன் கதவைத் திறந்து கொண்டு அமர்கிறாள். இருவரும் அதிகம் பேசிக் கொள்ளாமல் பொருட்களை வாங்கிக் கொண்டு காரில் அமரும்போது எல்லிக்கு அலைபேசியில் அழைப்பு வருகிறது. தன் அம்மா அழைப்பதாகச் சொல்லிவிட்டு பேசத் தொடங்குகிறாள். தன் தோழிகளுடன் வந்திருப்பதாகவும் யாராவது போன் செய்தால் வெளியே சென்றிருக்கிறேன் என்பதைத் தவிர வேறு ஏதும் சொல்ல வேண்டாம் என்றும் சொல்கிறாள். மேலும், கவலைப்பட வேண்டாம் தான் நாளை வந்துவிடுவதாகவும் உடம்பைப் பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லி வைக்கிறாள். சொல்லிக் கொள்ளாமல் பள்ளியிலிருந்து திடீரென வந்துவிட்டதால் அம்மா கவலைப் படுவதாக அஹமதிடம் சொல்கிறாள். அம்மா ஒரு இதய நோயாளி என்றும் சொல்ல அஹமத் மௌனமாகக் கேட்டுக்கொள்கிறான். தொடர்ந்து இன்னொரு அழைப்பு வரவும் எண்களைப் பார்த்துவிட்டு தொடர்பைத் துண்டிக்கிறாள். பரவாயில்லை பேசுங்கள் என்கிறான் அஹமத். ‘இல்லை... இது எனக்குத் தெரிந்த எண்தான். பிறகு பேசிக்கொள்கிறேன்’ என்கிறாள். மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளாமல் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு விடுதிக்கு வந்து சேர்கிறார்கள். ஜோடியாக அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்து நல்ல பொருத்தம் என அங்கிருக்கிற பெண்கள் பேசி சிரிக்கிறார்கள்.
அன்று மாலை இருட்டத் தொடங்கும் வேளையில் விடுதிக் காப்பாளர் அங்கு வந்து புதுமணத் தம்பதியருக்காக என்று சொல்லி புதுப் படுக்கையும் கம்பளியும் மற்றவர்களுக்கு சாதாரணமான படுக்கை விரிப்புகளையும் தந்துவிட்டுச் செல்கிறாள். மெல்லிய பனிப் பொழிவு இருக்க ஆண்கள் அனைவரும் விடுதிக்கு வெளியே தீ மூட்டி ஹூக்கா பிடிக்கிறார்கள். பெண்கள் இரவு உணவு தயாரிக்கும் மும்முரத்தில் இருக்கிறார்கள். புகைத்தது போதும் என்று சொல்லி சிரித்துக்கொண்டே அவர்களிடமிருந்து ஹூக்காவைப் பிடுங்கிச் செல்கிறாள் செபிடே.
இரவு உணவுக்குப் பிறகு வார்த்தைகளை உதடசைக்காமல் சைகையில் செய்து புரிய வைத்து விளையாடுகிறார்கள். எல்லி சமையல்கட்டில் இருக்கும் போது அஹமதையும் எல்லியையும் இணைத்து கேலி பேசவும் அது எல்லியின் காதுகளில் விழுகிறது. எல்லி சலனமின்றி நிற்கிறாள். சத்தமாகச் சொல்லாதீர்கள் அவள் காதில் விழுந்து கோபிக்கப் போகிறாள் என்று ஒரு பெண் சொல்கிறாள். எல்லி எதுவும் கேட்காதவள் போல வந்து அவர்களுடன் கலந்துகொள்கிறாள்.
மறுநாள் ஆண்கள் அனைவரும் வலைகட்டி கைப்பந்து விளையாடுகிறார்கள். செபிடேவும் எல்லியும் உடன் அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் விளையாடுகிறார்கள். சிறுவர்கள், கடற்கரை மணலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். செபிடே அன்றைக்குத் தேவையான பொருட்களை வாங்க மார்க்கெட் செல்லவேண்டி இருப்பதால் விளையாட்டை முடித்துக்கொண்டு விலகிச் செல்கிறாள். அவளைத் தொடர்ந்து வருகிற எல்லி தான் ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று செபிடேவிடம் தெரிவிக்கிறாள். “ஊருக்கா... இப்படி வந்துவிட்டு ஒரு நாள் கூட இல்லாமல் திரும்பிச் செல்லவா உன்னைக் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன். இரு.. நாளைக்குப் போகலாம்” என்கிறாள் செபிடே. “அம்மா தனியாக இருக்கிறார்கள். நான் உடனடியாகச் செல்ல வேண்டும்”, என மேலும் சொல்லவும் செபிடே முடியவே முடியாது என மறுக்கிறாள். அவர்களின் உரையாடலைக் கவனிக்கிற மற்ற பெண்களில் ஒருத்தி, “எல்லி அவசியம் போக வேண்டுமென்றால் தடுக்க வேண்டாம் செபிடே... போகட்டும்...” என்கிறாள்.
செபிடே அதை மறுத்துச் சொல்ல முயற்சித்தும் பின் வேண்டாமென விட்டுவிட்டு அங்கிருந்து நகர்கிறாள். காரில் ஏறும் முன்பாக அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த கைப்பந்து செபிடேவின் அருகில் வந்து விழுகிறது. அவள் சிரித்துக் கொண்டே பந்தை எடுத்துத் தன் காலால் உதைத்து தள்ளிவிட்டுச் செல்கிறாள். எல்லி செபிடேவிடமிருந்து கிடைக்காத விடையை எதிர்பார்த்தவளாகவே நிற்கிறாள்.
கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில் ஒருத்தி ஓடி வந்து தன் பட்டம் பறக்கவில்லை என்று எல்லியிடம் சொல்கிறாள். சிறுமியோடு சென்று பட்டத்தை வாங்கி இங்குமங்குமாக ஓடி பறக்கச் செய்கிறாள். அது உயரே சென்று கடற்காற்றில் பறக்கத் தொடங்குகிறது. சிறுமியிடம் தனக்கு வேலையிருப்பதாகச் சொல்லி நூலைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறாள்.
ஆண்கள் அனைவரும் உற்சாகமாக கைப்பந்து விளையாடிக் கொண்டிருக்க அவர்களில் ஒருவனின் சிறிய வயதுடைய மகன் அழுதபடி அங்கே ஓடி வருகிறான். விளையாடிக் கொண்டிருந்தவர்கள் “என்ன... ஏன் அழுகிறாய்..” என விசாரித்தும் சொல்ல முடியாமல் அழுகிறான். சற்று நேரத்தில் அவனைவிட வயதில் பெரியவளான பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுமி ஓடி வந்து கடற்கரையோரமாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுவன் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறாள். அவர்கள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு அவன் விளையாடிக் கொண்டிருந்த இடம் நோக்கி ஓடுகிறார்கள். அலைகளில் சிக்கிய சிறுவனின் தகப்பன் பதற்றத்துடன் கடலில் இறங்கி அவன் பெயர் சொல்லி கத்துகிறான். மற்றவர்களும் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்குள் சென்று தேடுகிறார்கள். விடுதியிலிருந்த மற்ற பெண்கள் சத்தம் கேட்டு ஓடி வர கரையில் நின்று கொண்டிருந்த அமீர் அவர்களை கடல் நோக்கிச் செல்லவிடாமல் தடுக்கிறான். அழுகையும், கூக்குரலுமாக அந்த இடமே கலவரமாகிறது. விடுதிக் காப்பாளர் வீட்டு சிறுவனும் அங்கே ஓடி வந்து கடலில் குதித்து தன் பங்குக்கு காணாமல் போன சிறுவனைத் தேடுகிறான். நீண்ட நேரம் தேடி அலைகளுக்கிடையே மூர்ச்சையான நிலையில் அவனைக் கண்டுபிடித்துக் கரைக்கு கொண்டு வருகிறார்கள். முதலுதவிகள் செய்து விடுதியில் கொண்டு வந்து படுக்க வைக்கிறார்கள். அலையில் சிக்கிய சிறுவனின் பெற்றோர் சற்றே ஆசுவாசமடைய அப்போதுதான் அவர்களுக்கு அது உறைக்கிறது. ‘எல்லி எங்கே..’ மீண்டும் அவர்களுக்கிடையே பதற்றம் தோன்றுகிறது. சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் பட்டம் விட்டுக் கொண்டிருந்த சிறுமியிடம் விசாரிக்கிறார்கள். அவள், அலையில் சிக்கிய சிறுவனைக் காப்பாற்ற எல்லியும் கடலுக்குப் போனதாகச் சொல்லவும் மீண்டும் ஆண்கள் அனைவரும் கலவரத்துடன் கடலுக்கு ஓடுகிறார்கள். பெண்கள் செய்வதறியாமல் திகைத்தவர்களாக அவர்களின் பின்னே ஓடுகிறார்கள். அஹமத் மீண்டும் கடலுக்குள் இறங்கி நீந்தி எல்லியைத் தேடுகிறான். கடைத்தெருவுக்குச் சென்றிருந்த செபிடே காரில் வந்து சேர நடந்ததைக் கேள்விப்பட்டு கலவரமாகி அவளும் கொந்தளிக்கும் அலைகளில் இறங்கித் தேடுகிறாள். எல்லி... எல்லி... என அவள் எழுப்பும் சத்தம் அலைகளின் பேரிரைச்சலில் கரைந்து போகிறது. சிலர் போலீஸ்காரர்களை அழைத்து வருகிறார்கள். சிறுவர்கள் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் ஒரு மோட்டார் படகில் கடலுக்குள் சிறிது தூரம் சென்று தேடிவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இன்னும் சற்று தூரம் போய்ப் பார்த்துவிட்டு வரலாமே என அஹமத் அவர்களிடம் கெஞ்சுகிறான். இதற்குமேல் வாய்ப்பில்லை என அவர்கள் கைவிரித்துவிட்டுச் செல்கிறார்கள்.
இருட்டும்வரைத் தேடிக் களைத்து நம்பிக்கையிழந்தவர்களாக அனைவரும் கடலை வெறித்துப் பார்த்தபடி ஆங்காங்கே நிற்கிறார்கள். உடலளவிலும் மனதளவிலும் சோர்வடந்தைவளாக செபிடே தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறாள். தாங்கள் வந்த கார்களை கடலைப் பார்த்தவாறு கரையோரம் நிறுத்தி முகப்பு விளக்குகளை எரியவிட்டிருப்பார்கள். காவல் துறையினர், காணாமல் போனவரின் பெயர், வயது போன்ற விவரங்களைக் கேட்க, அமீர் செபிடேவை அழைத்து சொல்லச் சொல்கிறான். கத்திக் கத்தி வறண்ட தொண்டையில் தழுதழுக்கும் மெல்லிய குரலில் செபிடே தனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறாள்.
சூன்யமான அமைதி ஆட்கொண்ட விடுதியில் அன்றிரவு முழுவதும் உரக்கம் தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒருவன் எல்லியைப் பற்றி சிறுவர்களிடம் விசாரிக்க அவள் தன்னைக் காப்பாற்ற வந்ததாக சொல்கிறான் கடலில் மூழ்கிய சிறுவன். உயிர் பிழைத்த மகனுக்காக சந்தோஷப்படுவதா இல்லை அவனைக் காப்பாற்றப் போய் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்றுகூடத் தெரியாமல் போன எல்லிக்காக வருந்துவதா எனப் புரியாத குழப்பம் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது.
காலையில் கடற்காற்றின் சத்தம் கேட்டு அயற்சியில் உறங்கிப் போனவர்கள் ஒவ்வொருவராக எழுந்து மீண்டும் கடற்கரைக்கு வந்து பார்க்கிறார்கள். செபிடே தொண்டை கட்டிப் போய் மிகுந்த சோர்வுடன் காணப்படுகிறாள். இதற்கு மேலும் அவள் உயிருடன் இருப்பாளா என நம்பிக்கை குறைந்தவர்களாக அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். “அவள் அப்போதே ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.. செபிடேதான் கட்டாயப் படுத்தி இருக்க வைத்துவிட்டாள்”, என்று பெண்களில் ஒருத்தி சொல்லி வைக்கவும் செபிடே வருந்துகிறாள். “ஒருவேளை அவள் நாம் கட்டாயப் படுத்துகிறோம் என்பதற்காக சொல்லிக்காமல் கூட ஊருக்குப் போயிருக்கலாம் இல்லையா” என்று இன்னொரு பெண் கேட்கவும் அனைவர் முகத்திலும் சட்டென ஒரு நம்பிக்கைக் கீற்று ஒளிர்கிறது. செபிடேவிடம் வருகிற அமீர், “எல்லி அதுபோலச் சொல்லிக்கொள்ளாமல் போகிற பெண்ணா..?” என்கிறான். செபிடே மௌனமாக இருக்கவும் விடுதிக்குள்ளிருந்து ஓடி வருகிற ஒரு பெண் “எல்லியின் பையைக் கூட காணவில்லை... அவள் ஊருக்குத்தான் போயிருக்க வேண்டும்... நான் எல்லா இடத்திலும் தேடிவிட்டேன்” என்கிறாள். கடவுளே அவள் ஊருக்கே போயிருக்க வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை ஆகிறது. தயங்கித் தயங்கி, “அவள் போய்விடுவாளோ என பயந்து பையை நான்தான் மறைத்து வைத்தேன்.” என்கிறாள் செபிடே குரலில் உயிரே இல்லாமல். சிறிது நேரத்திலேயே அவர்களின் நம்பிக்கை மீண்டும் உடைகிறது. இருந்தாலும் பையைப் பற்றிக் கவலைப்படாமல் போயிருக்கலாமே என்ற அளவில் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை ஊட்டிக் கொள்கிறார்கள்.
எல்லியின் வீட்டுத் தொலைபேசி எண் இருந்தால் கேட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்து செபிடேவிடம் கேட்கிறார்கள். செபிடே தனக்குத் தெரியாது என்கிறாள். இதனால் அமீருக்கும் செபிடேவுக்கும் சண்டை வருகிறது. எல்லியைப் பற்றி எதுவுமே அறியாமல் ஏன் அழைத்தாய் எனக் கேட்டபடி செபிடேவை அமீர் அடித்துக் கீழே தள்ள உடன் இருப்பவர்கள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்கிறார்கள். அஹமது தான் எல்லியுடன் சென்றபோது அவள் வீட்டிலிருந்து அவள் செல்பேசிக்கு அழைப்பு வந்ததாகச் சொல்கிறான். செல்போன் கிடைத்தால் அவள் வீட்டு எண்ணைக் கண்டுபிடித்து விசாரிக்கலாம் என்ற யோசனை வர செபிடேவிடம் எல்லியின் பையை எடுத்துத் தரச்சொல்லி தேடுகிறார்கள். செல்பேசி பையில் இல்லாதது கண்டு மீண்டும் அவள் ஊருக்குத்தான் போயிருப்பாள் என நினைத்துக்கொள்கிறார்கள். சற்று நேரத்தில் அமீர் போலீஸ்காரர்களின் கேள்விகளுக்கு பயந்து தான்தான் எல்லியின் செல்போனை எடுத்து வைத்திருந்ததாகச் சொல்கிறான். அவனிடமிருந்து செல்பேசியை வாங்கிக் கொண்டு புறப்படுகிறான் அஹமத். அவனுடன் செபிடேவும் சேர்ந்துகொள்கிறாள். காரில் செல்லும்போது அஹமதிடம் அவள் ஒரு உண்மையைச் சொல்கிறாள். அதைக் கேட்கிற அஹமத் அதிர்ச்சியடைகிறான். எல்லி ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு நிச்சயமானவள் என்றும் அவளுக்கு அது பிடிக்கவில்லையாதலால்தான் இந்தப் பயணத்திற்கு வருவதன் மூலம் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று அவள் சம்மதித்ததாகச் சொல்கிறாள். அப்படியானால் இரண்டாவதாக அவளுக்கு வந்த செல்பேசி அழைப்பை அவள் ஏன் துண்டித்தாள் என்பது அஹமதிற்கு புரிய வருகிறது. அது எல்லிக்கு நிச்சயிக்கப்பட்டவனிடமிருந்து வந்த அழைப்பு. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு எல்லி விபத்தில் சிக்கியிருப்பதாகச் சொல்லி அவனை வரவழைக்கிறார்கள். வந்தவன் எல்லியின் முழு பெயர் தெரியுமா என செபிடேவிடம் கேட்க அவள் வாயடைத்து நிற்கிறாள். அவன் பதற்றமடைந்து தன் எல்லிக்கு நேர்ந்தது பற்றிய உண்மையான தகவலைக் கேட்கவும் அவர்கள் எல்லியின் வீட்டைத் தொடர்புகொள்வதற்காக விடுதிக் காப்பாளர் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே உள்ள தொலைபேசியைத் தொடர்பு கொள்ளச் செல்லும்போது ‘புதுமணத் தம்பதியருக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம்’ என்ற விடுதிக் காப்பாளரின் புலம்பலை அவன் கேட்க நேரிடுகிறது.
கடற்கரை விடுதிக்கு வரும் அவன் புரிந்துகொண்டவனாக அஹமதை கடுமையாகத் தாக்குகிறான். அவர்கள் அனைவரும் அவனை ஒருவாறாகச் சமாதானப் படுத்தவும் அவன் எல்லியின் தோழியான செபிடேவிடம் சில வார்த்தைகள் தனியாகப் பேச வேண்டும் என்கிறான். வந்திருப்பவனின் மூர்க்கம் கண்டு அஞ்சியும் அதே நேரம் வேறு வழி இல்லாததாலும் சம்மதிப்பார்கள். செபிடேவும் எதற்கும் துணிந்தவளாகவே அவனை எதிர்கொள்வாள். இதற்கிடையே சிறுவர் சிறுமியரிடம் வரும் நபர் கேட்கும் கேள்விகளுக்கு இப்படித்தான் பதில் சொல்ல வேண்டும் என பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். சிறுவரில் ஒருவன் எல்லி அஹமது சித்தப்பாவின் மனைவியாகப் போகிறவள் என்று நீங்கள்தானே சொன்னீர்கள் எனக் கேட்டுத் தொலைப்பான். இப்படியெல்லாம் பேசக் கூடாது வருபவன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்... அதுவே போதும் என மிரட்டி வைத்திருப்பார்கள்.
நீண்ட தயக்கத்திற்கு பிறகு அவர்கள் அனுமதியுடன் செபிடேவைத் தனி அறையில் சந்தித்துப் பேசுகிறான்.
“எல்லி எனக்கு நிச்சயமானவள் என்பது உங்களுக்குத் தெரியுமா?”
“தெரியும்..”
“தெரிந்தும் இது போல ஒரு பயணத்திற்கு நீங்கள் அழைத்தீர்களா...”
நீண்ட நேரம் யோசித்துவிட்டு, “ஆம்..” என்கிறாள் செபிடே...
“அவள் உங்களுடன் வர ஒத்துக்கொண்டாளா...?”
“ஆமாம்... அவள் சம்மதித்துதான் எங்களுடன் வந்தாள்”
அவர்கள் பேசிக் கொண்டிருந்த விடுதி அறைக்கு வெளியே அனைவரும் பதற்றத்துடன் காத்திருக்க கதவைத் திறந்துகொண்டு அவன் வெளியே வருகிறான். தொடர்ந்து செபிடேவும் வருகிறாள்.
போலீஸிடமிருந்து அன்று ஒரு பெண் உடலை அருகில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்திலிருந்து மீட்டதாகவும் அதை வந்து பார்க்கும்படியும் தகவல் வருகிறது.
எல்லிக்கு நிச்சயமானவனை பிணவறைக்கு அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். அங்கே நிச்சலனமான எல்லியின் முகத்தைப் பார்த்து அழுதபடியே அவன் திரும்பி வருகிறான். செபிடே, அமீர், அஹமது உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொண்டவர்களாக அவனருகில் வந்து தட்டிக்கொடுத்துத் தேற்றுகிறார்கள். மெல்ல அவனிடம் “எல்லியின் குடும்பத்தாருக்கு நீங்கள்தான் தகவல் சொல்ல வேண்டும்” என்கிறார்கள். “நான் சொல்ல மாட்டேன்... நீங்களே சொல்லிவிடுங்கள்..” எனச் சொல்லி விட்டு அவன் அங்கிருந்து அழுதுகொண்டே போய்விடுகிறான்.
கடற்கரையின் மணலில் சிக்கிய தங்களின் கார் ஒன்றை அவர்கள் மீண்டும் வெளியே கொண்டு வர முயற்சிப்பதுடன் படம் நிறைவடைகிறது.
அஸ்கார் பர்ஹாடியின் இந்தப்படம் கேரளத் திரைப்பட விழாவின் தொடர்ந்த சினிமா பார்வைகளுக்கிடையேயும் சிந்திக்க வைத்துக்கொண்டே இருந்தது. குறிப்பாக சாதரணமான ஒரு கதையை மிகவும் சாதரணமாக அவர் படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. படம் முழுவதும் கடற்கரையின் சத்தமும் மனிதர்களின் விதமான உரையாடல்களும் வருகிறதே தவிர பின்னணி இசை என்பது கிடையவே கிடையாது. ‘எல்லியைப் பற்றி’ - படத்தை அவர் படமாக்கிய விதம் நவீன சினிமா உலகில் மிகவும் புதுமையானது என்றே சொல்வேன்.
Mise-en-Scene என்று பழங்கால நாடக உருவாக்கத்தில் ஒன்றைச் சொல்வார்கள். அதாவது பார்வையாளர்களிடையே காட்சியின் நம்பகத் தன்மையைக் கூட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒளி அமைப்பு, ஒப்பனை, நடிகர்கள், அரங்க அமைப்பு ஆகிய நான்கும் முக்கியம். இதுவே பிரெஞ்சு சொல்லாடலான Mise-en-Scene-ன் முழுப் பொருள். சினிமா கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்பு இதில் கேமரா என்ற ஐந்தாவது புலன் சேர்ந்துகொண்டது. பிற்காலத்தில் அது சினிமாவுக்கும் பொருந்தி வந்தது. அஸ்கார் ஃபர்ஹாடியின் ‘எல்லியைப் பற்றி’ முழுக்க முழுக்க Mise-en-Scene காட்சி வகையறாக்களைக் கொண்டது. உண்மையில் மிகக் கடினமானதும் அதே நேரம் திறம்படச் செய்தால் நம்பகத் தன்மை கூடுதலானதுமான ஒரு உத்தி. ஃபர்ஹாடி இதில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் முக்கியமான சிறப்புகள் பல இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது ஃபர்ஹாடி அவரின் நடிகர்களை நடிக்க வைத்த விதம். செபிடே கதாப்பாத்திரத்தில் வரும் கொல்ஷிஃப்டே பராஹனி (Golshifteh Farahani) என்பவரைப் பற்றித் தனி கட்டுரை எழுதினால் தகும்.
ஒரு நல்ல இயக்குநர் என்பவர் தன்னுடன் பணியாற்றும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து அவருக்குத் தேவையான, அவர் திருப்தியடையக்கூடியவற்றைப் பெறுவதில்தான் தனித்தன்மை அடைகிறார். அந்த வகையில் ஃபர்ஹாடியின் படங்களில் பெரும்பாலும் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பல முக்கியத் திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றிருக்கிறார்கள். காட்சி ரூபமாக வெளிப்படும் அதே வேளையில் ஃபர்ஹாடியின் படங்களின் ஒலிப்பதிவும் மிக நேர்த்தியானது. ‘எல்லியைப் பற்றி’ திரைப்படத்தில் பின்னணி இசை என்பது பொட்டுக்கும் குறைவானதே. அவர்கள் மணலில் சிக்கிய தங்கள் காரை மீட்க முயற்சிக்கும் வேளையில்தான் முதலும் கடைசியுமாக மெல்லிய இசை ஒலிக்கத் தொடங்குகிறது. அது நமக்குள் ஏற்படுத்தும் சினிமா அனுபவம் என்பது வார்த்தையில் சொல்ல முடியாததாகிறது. படத் தொகுப்பு, ஒளிப்பதிவு போன்றவையும் ‘எல்லியைப் பற்றி’ படத்தில் நாம் உன்னிப்ப்பாகக் கவனிக்க வேண்டியவை.
இந்தப் படம் பெர்லின் திரைப்பட விழாவில் ஃபர்ஹாடிக்கு சிறந்த இயக்குநருக்கான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றுத் தந்திருப்பதில் எனக்கு ஆச்சர்யம் ஏதும் ஏற்படவில்லை. ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதையை அவரே எழுதியிருக்கிறார் என்பதோடு அதை முழுமையான நம்பகத்தன்மையோடு திரையில் கொண்டுவர என்ன சிரமங்களைச் சந்தித்திருப்பார் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கேரளத் திரைப்பட விழாவில்கூட சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றிருப்பதாக சென்னை திரும்பியபின் அறிந்துகொண்டேன்.
என்னைப் பொறுத்தவரையில் ஈரானியத் திரைப்படங்ளில் மிகவும் கவனத்திற்குரிய ஒரு இயக்குநராகி இருக்கிறார் ஃபர்ஹாடி. இவர் முன் வைக்கும் களமும் அதை கையாளும் முறையும் மிகப் புதிதானது. சினிமாவை இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லக்கூடியது என்றால் மிகையே இல்லை.
‘எல்லியைப் பற்றி’- அஸ்கார் பர்ஹாடி ஒரு நேர்காணலில் இப்படிச் சொல்லியிருக்கிறார்... “இந்தப் படத்தை என்னுடைய கோணத்திலிருந்து பார்வையாளர்கள் பார்ப்பதை நான் விரும்பவில்லை. சம்பவங்களின் ஊடாக அவர்களும் ஒரு ரகசிய கதாப்பாத்திரமாக நிற்க வேண்டும் என்பதை எண்ணியே திரைக்கதை அமைத்து இயக்கினேன்.” அவர் சொன்னதில் முழு வெற்றி அடைந்திருக்கிறார் என்பதை படம் பார்க்கும் போதும் அதைப் பற்றி எழுதும் இவ்வேளையிலும் நான் உணர்கிறேன். மேலும், ‘எல்லியைப் பற்றி’ உங்களுக்குள் எப்படித் தோன்றியது? என்ற கேள்விக்கு அவர் சொல்வது... “ ‘அலைகளுக்கிடையே சென்று மறைந்த தன் மனைவியின் உடலை எதிர்பார்த்து இருட்டும் வேளையில் தனியாக நிற்கும் ஒரு கணவன்’ என்ற பிம்பம்தான் மெல்ல வளர்ந்து வளர்ந்து இந்தப் படம் உருவாகக் காரணமானது என்று சொல்கிறார். சரிதான் அது போன்ற வேளைகளில் நம்மில் யாருக்காவது பின்னணி இசை கேட்குமா என்ன?
- ச. முரளி மனோகர்.
அருமையான பதிவு .... நன்றிகள் பல !
ReplyDeleteமிக்க நன்றி கிஷோர்!
ReplyDelete