சர்ரட் சர்ரட், எனத் தன் இழைப்புள்ளியால், கண்டியூர் மகாலிங்கம் ஆசாரியின் உறவினர் தாராசுரத்தில் எங்கள் புதிய வீட்டுக் கதவை இழைத்துக் கொண்டிருந்தபோது பார்த்துக் கொண்டேயிருப்பேன். தாடியும் மீசையுமாக இருபத்தைந்து வயசில் இருந்திருப்பார். மினி டேப் ரெக்கார்டரில் தி.மு.க. கூட்டங்களில் பேசிய கலைஞரின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டும், இடையிடையே அலுப்பு தட்டாமலிருக்கத் தன் உதவியாளரிடம் அதைச் சிலாகித்துப் பேசிக்கொண்டும் இருப்பார். புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடு அது. ராஜராஜன் நகரில் ஒன்னாம் நம்பர் ப்ளாட். ரெண்டாம் வகுப்பிலிருந்தேன். வீட்டுக்கு எதிரே மிட்டாய்கடை தனபால் வீட்டிலிருந்து கடலை மிட்டாய், குலோப் ஜாமூன்களை ஆவி குறையும் முன் அதனதன் வார்ப்புகளில் வார்க்கும் வாசனை வந்துகொண்டே இருக்கும்.
களிமண்ணைக் காலால் மிதித்து வார்த்துக் கட்டிக்கொண்டிருந்த வீடு. மேலே ரயில் ஓடுகள். பக்கத்தில் ஒதியமரம். சொனைப் பூச்சி, வீட்டுக்குள்ளும் சாப்பாட்டுக்குள்ளும் ஏறிப் பயமுறுத்தும். தாத்தா மண்ணெண்ணெய் ஊற்றிய பந்தமேற்றி அவற்றைக் கருக்கிவிட்டுப் பின் எங்களைப் பார்த்துச் சிரிப்பார். மற்றபடி, மின்னிணைப்பு, மின் விளக்கு இல்லாத, அந்த வீட்டின் பெரியவர்கள் உறங்கிவிட்ட, நடுநிசியில் கனவிலும் நனவிலும் ஏராளமாய் என்னை மொய்த்திருந்த மொசுக்கட்டைகள்.
அப்பா, குடவாசல் பக்கத்தில் அடவங்குடிக்கு அருகில் கண்டியூர். வெட்டாறுச் சுழித்துக்கொண்டோடும். ஆற்றில் குளித்துக் கரையேறுகையில் மூன்று முறை ஆற்றுத் தண்ணீரைக் கையால் மோந்து வாயில் ஊற்றுவார்கள்! கோடையில் வெட்டாற்று மணலில் ஊற்றுப் பரித்துப் பித்தளை, செம்பு குடங்களில் குடிநீர் கொண்டு வருவார்கள். ஊற்று நீரைக் கோதி அள்ள எல்லோர் வீட்டிலும் 'ஊத்துப்பட்டை' என்ற பித்தளை உபகரணம் இருக்கும். முத்துச் சிப்பியின் ஓட்டில் ஒரு பாகத்தை ஒத்திருக்கும் அதன் வடிவம்.
ஆடி பதினெட்டுக்குச் சப்பரம் இழுப்போம். ஊரே கூடி ஒன்று மாபெரியதாயும் பிள்ளைகள் நாங்கள் சின்னச் சின்னதாயும். பக்கத்து வீட்டு மாரியம்மாள் மகன் பிரபாகரன்தான் லீடர். கணேசன் பெரியப்பா வீட்டிலிருந்து செல்வ குமாரும் முருகானந்தமும் உடன் இருப்பார்கள். திருவிழாக் காலங்களில் கண்டியூர் முருகன் கோயில் ஒளி விளக்குகளால் மின்னும். வீட்டிற்கு சற்று தொலைவிலிருந்த புளிய மரத்தின் உச்சியிலிருந்து ரேடியோ (அப்போது எங்களுக்கு அது ரேடியோதான்) ஒலிக்கும்.
"ஒலி ஒளி ஏற்பாட்டைத் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கிக் கொண்டிருப்பது, முருகேசன், பரகதாபாத்" என சுருட்டை முடித் தலையர் ஒருவர் முருகன் கோயில் வாசலிலிருந்து மைக்கில் சொல்வது தொலைவில் உள்ள புளியமரத்துக் குழலிலிருந்து ஊரே கேட்கும்படி ஒலிபரப்பாவதை வியந்து பார்த்துக்கொண்டே இருப்போம்.
கேப்டன் பிரபாகரன் படம் குடவாசலில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்து, எல்லாரும் போகலாம் என அழைத்தார் பக்கத்து வீட்டு மாரியம்மா அத்தை. அப்போதெல்லாம் குடவாசலுக்குப் போவதென்றால் பெரும்பாடு. கும்பகோணத்திலிருந்து 56 என்ற எண் கொண்ட பேருந்து அடவங்குடி வரை வரும். அடவங்குடியிலிருந்து வெண்ணாற்றங்கரை ஒட்டி காட்டுக்குள் நடந்தால் கண்டியூர்.
தம்பி பிரபாகரனை மாரியம்மாள் அத்தை இடுப்பில் சுமந்து நடக்க, உடன் நாங்களும் நடந்து சென்றோம், கேப்டனைப் பார்க்க.
தியேட்டரில் கூட்டம் அலைமொதியது. அடித்துப்பிடித்து ஒண்ணே முக்கால் ரூபாய் டிக்கட்டில் எட்டு பேருக்குமாக வாங்கியபின் உள்ளே போனால் உட்கார இடமில்லை. திரைக்கு முன்னால் முன் வரிசை இருக்கைக்கும் முன்னால் தரையில் அமர்ந்து படம் பார்த்தோம். 'தீ' என எழுதப்பட்டு, வரிசையாக முன்னால் தொங்கிக்கொண்டிருந்தன சிவப்பு நிறத்தில் இரும்பு வாளிகள்.
ஆவி போனவர்களாக வேர்வையில் நனைந்த ஆடைகளுடன் நடந்தே வீடு திரும்பினோம். வழியில் மாரியம்மா பரோட்டா வாங்கி எங்கள் அனைவருக்கும் சாப்பிடக் கொடுத்தார். பின் மீண்டும் நடை தொடர்கையி உறக்கம் வந்தது மட்டும்தான் நினைவு. விழித்துப் பார்க்கையில் வீட்டில் இருந்தோம்.
அப்போதெல்லாம் ஆற்றுக்கும் மணமுண்டு. கண்டியூர் போனால் போதும் பசுமை வாசம் வீசும். பின்னாட்களில் கரை புரண்டோடிய காவிரியின் நாலாம் படித்துறையிலும், மெலட்டூர் வெண்ணாற்றிலும் அந்த வாசனை எனக்குக் கிடைக்கவேயில்லை.
அதிகாலைச் சூரிய வெளிச்சத்தின் தை மாசப் பனித்துளி தாவரமெங்கும் மினுங்கும். சத்தமில்லாமல் வருடும் எங்கள் கால்களில் ஒட்டிக்கொள்ளும் பனிக்குமிழ்கள். இடையே சிணுங்கிச் சுருங்கிக்கொள்ளும் தொட்டாற்சிணுங்கிகள்.
அப்பெரும் பசுமையும் வளமையும் கொண்டிருந்த கண்டியூருக்கும் வந்தது ஒ.என்.ஜி.சி. திடீரெனத் தார்ச் சாலைகள் அமைத்தார்கள். ஏதேதோ எந்திரங்களைச் சுமந்தபடி புழுதி கிளப்பிக்கொண்டு நூற்றுக்கணக்கில் லாரிகள் கடந்து செல்வதை வியந்து பார்த்துக்கொண்டிருந்தோம். 'இனி நம்ம ஊருக்கு நிறைய பஸ் விடுவான். நல்ல காலம் வந்திருச்சு', என ஊர்ப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.
அந்த தொட்டாற்சிணுங்கிகளின் மடல்கள் புழுதிக்குள் தம்மை இறுக்கிக் கொண்டதன் வலி அவர்களுக்கும் எங்களுக்கும் அப்போது தெரிந்திருக்கவும் புரிந்திருக்கவும் இல்லை.
எதேச்சையாக, சில மாதங்களுக்கு முன் கண்டியூர் நினைவுகளை பேசிக்கொண்டிருக்கையில் அந்த அதிர்ச்சித் தகவலை ஆத்தா சொன்னார்.
"மாரியம்மா புத்து நோய் வந்து போய்ட்டாப்பா". தலையில் இடி இறங்கியது போலிருந்தது. இன்றைய நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களின் அவசியம் புரிந்தது.
அண்மையில் அறிமுகமான ஒரு சாலையோர பிரியாணி கடைக்குச் சென்றிருந்தேன். பார்சல் கட்டியபடியே தன் செல்பேசியின் யூடியூபில் யாரோ ஒருவரின் உக்கிரமான தமிழ்ப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான், செந்தில்.
"டேய் பார்சலை முடிச்சுட்டு ஃபோனைப் பார்றா..." எனக் கூட்டத்தில் எனக்குப் பின்னாலிருந்து வந்த குரலை அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மெள்ள அவன் செல்ஃபோனை எட்டிப் பார்த்தேன். கதிராமங்கலத்திலிருந்து அவர் பேசிக்கொண்டிருந்தார்!