https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Wednesday, March 5, 2014

நாலு பேரை ஈர்த்த விசை




எதிர்பாரா விதமாக இன்று மதியத்திற்கு மேல் கிடைத்த விடுப்பை கிராவிட்டி (Gravity) படம் பார்க்கப் பயன்படுத்திக்கொள்ள அலுவலக நண்பர்கள் திட்டமிட்டார்கள். 3-Dயில், அதுவும் திரையரங்கில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து வெகு நாட்கள் ஆனதாலும் கிராவிட்டி பற்றிக் கேள்விப்பட்டவை, இணையத்தில் படித்தவை, நினைவுக்கு வந்ததாலும் எனக்கும் படம் பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்ட்து. உதவி படத்தொகுப்பாளர் - சத்தீஷ், உதவி இயக்குநர் - பாலா, தயாரிப்பு மேலாளர் - சரவணன் சாருடன் எனக்கும் ஒரு டிக்கெட் சொன்னேன்.

மாலை 4.20 மணிக்கு சத்யம் எஸ்கேப்பில் ஒரே ஒரு ஷோதான் ஓடிக்கொண்டிருக்கிறது கிராவிட்டி. சில தினங்களுக்கு முன் ஏழு ஆஸ்கர்களை வாரிக் கொண்டதால் புதிதாக வேறு கிராக்கி வந்திருக்கும் போல. இணையத்தில் ஹவுஸ் ஃபுல் காட்டியது. எங்கள் ஆர்வத்தையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்ட நண்பரும் அலுவலக நிர்வாகியுமான யோகேஷ் மிதுன், தனக்கு சத்யம் திரையரங்கில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நான்கு டிக்கெட்டுகள் புக் செய்து கொடுத்தார்.

சத்யம் எஸ்கேப் மல்டிப்ளக்ஸ் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் டூ வீலர் பார்க்கிங் கட்டணம் மணிக்கணக்கில் போடுவார்கள். எப்படியும் ஒரு வண்டிக்கு அறுபது ரூபாய்க்கு மேல் ஆகிவிடும் எனக் கணக்கிட்டு சாமர்த்தியமாக சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நானும் புரொடக்ஷன் மேனஜர் சரவணன் சாரும் நடந்தே எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குச் சென்றோம். முன்னதாக வந்திருந்த சத்தீஷும், பாலாவும் புக் செய்திருந்த டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார்கள். திரையரங்கிற்குள் நுழையும் முன் எங்கள் நால்வரையும் ஏற இறங்கப் பார்த்தபடி ஒரு ஆள் 3D கண்ணாடிகளைக் கொடுத்தார். “டேமேஜ் ஆனா பே பண்ணணும் சார்” என வார்னிங் வேறு.

கிராவிட்டி எதிர்பார்த்தது போலவே புது அனுபவமாக இருந்தது. படம் பற்றின எனது தனிப்பட்ட அனுபவத்தை ஒரு காட்சியை வைத்துச் சொல்லலாம். வின்வெளியில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சாந்த்ரா புல்லக்கிற்கு அவர் வைத்திருக்கும் ஆக்ஸிஜனின் சதவீதம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து கடைசியில் தீர்ந்தே போய்விடும். ஜார்ஜ் க்ளூனேயின் வழிகாட்டலில் ஆக்ஸிஜனுடன் உள்ள வேறொரு விண்கலத்தைக் கண்டுபிடித்து, போராடி ஒரு வழியாக அதன் ஏர் லாக் செக்ஷனின் கதவைத் திறந்து உள்ளே வந்துவிடுவார் புல்லக். அதுவரை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருந்த சாந்த்ரா புல்லக் சட்டெனக் கிடைத்த ஆக்ஸிஜனால் கடுமையாக மூச்சு வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆவார். தன் உடலோடு பொருத்தியிருந்த ஹெல்மெட், விண்வெளிப் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள், அனைத்தையும் கழட்டிப் போடுவார். கிராவிட்டி இல்லாததால் அவை அங்கங்கே மிதந்து போய்க்கொண்டிருக்கும். குறைந்தபட்ச உடைகளுடன் காற்றாட சற்றே சோம்பல் முறிப்பார். 

சாந்த்ராவின் தற்காலிக நிம்மதியைக் குலைக்கும் விதமாக விதி தீ வடிவில் வரும். விண்கலத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்துக்கொண்டதாக மானிட்டர் அலறும். சாந்த்ரா புல்லக் பரபரப்புடன் எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்கு மிதந்து மிதந்து விரைவார். அங்குள்ள fire extinguisher-ஐப் பயன்படுத்தித் தீயை அணைக்க முயல அது மேலும் மேலும் தீவிரமடையும். விண்வெளியில் தன்னந்தனியாக, நிராயுதபாணியாக, இப்படி ஒரு பெண் வின்கலத்தில் மாட்டிக்கொண்டு போராடுவது என்னைப் பதைபதைக்க வைத்தது. தீ படுவேகமாகப் பரவி வர நிலைமையைப் புரிந்துகொண்ட சாந்த்ரா மீண்டும் முன்பிருந்த கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து, தீப்பிடித்த பகுதிகளை தான் இருக்கும் பகுதியிலிருந்து ஒவ்வொன்றாகக் கழட்டிவிட பட்டன்களைத் தேடி தேடி அழுத்துவார். “ஏம்மா... ஏற்கனவே கொழுந்து விட்டு எரியுது... மொதல்ல அத விட்டு வெளியே போம்மா... நீ வேற ஸ்பேஸ் டிரஸ்ஸு, ஹெல்மெட்டுன்னு, எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு உக்காந்துனுக்கிற... அதெல்லாம் வேற காத்துல மிதந்துனு போச்சு... இருக்கா எரிஞ்சிடுச்சான்னு தெரில... சாதாரணமா ஒரு பேண்ட் சட்டை போடவே ரெண்டு நிமிஷம் ஆவும்... நீ அவ்வளோ வெய்ட்டையும் எடுத்து மாட்டிகினு, ஜிப்பெல்லாம் போட்டுட்டுக் கதவைத் திறந்துட்டுப் போவணும். நெருப்பு வருதும்மா யம்மா... எரியுதும்மா... மொத ஸ்பேஸ் டிரஸ்ஸைத் தேடி எடுத்துப் போட்டுட்டுக் கிளம்பும்மா... அங்க வேற எதனா வண்டி நிக்கும்... புடிச்சி ஊர் போய்ச் சேந்துடலாம்... போம்மா...” இப்படியாக சாந்த்ரா அந்த தீப்பிடித்த விண்கலத்திலிருந்து வெளியேறும் வரை மனசு கிடந்து தவியாய்த் தவித்தது. நல்லவேளையாக வேறு யாரோ வைத்திருந்த ஸ்பேஸ் டிரஸ்ஸை மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார். 

உதாரணத்திற்குதான் இந்தக் காட்சியைச் சொன்னேன். மற்றபடி, படம் முழுக்கவுமே நம்மை இருக்கை முனையில்தான் அமர வைக்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியில் கிராவிட்டியை விவரித்து எழுத ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் சுருக்கமாக, ‘இன்னைக்கு எங்க ஆஃபீஸ்லருந்து நாங்க நாலு பேர் கிளம்பிப் போய் ஒரு படம் பாத்துட்டு வந்தோம்...’ என்ற அளவில் மட்டும் இந்தப் பதிவு. 

படம் முடிந்து வெளியேறுகையில் “பாத்துக்கப்பா... நாங்க ஒன்னும் டேமேஜ் பண்ணிடல...” என மனசில் நினைத்துக்கொண்டே அந்த 3D கண்ணாடியைப் பொறுப்புடன் ஒப்படைத்தோம். 

நானும் சரவணன் சாரும் எக்ஸ்பிரஸ் அவென்யூவீலிருந்து வெளியேறி, டிராஃபிக்குக்கிடையே சாலையைக் கடந்து, சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் உள்ள வண்டியை எடுக்க நடக்க ஆரம்பித்தோம். எங்களைப் போல வேறு சிலரும் சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் வண்டி எடுக்கப் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். ஏழெட்டு நிமிட நடையில் எங்களுக்கிடையேயான பேச்சு இப்படிப் போனது.

“இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தமிழ்ப் படத்துக்கு விடற மாதிரி இடைவேளைல்லாம் விடக் கூடாது சார்... இண்டர்வெல்லுக்கப்புறம் flow பிரேக் ஆகுது...” என என் ஆதங்கத்தை சரவணன் சாரிடம் வெளிப்படுத்தினேன்.

அதை ஆமோதித்தவர் சிறிது நேர யோசனைக்குப் பின், “படம் பிகினிங்லாம் கொஞ்சம் ஸ்லோதாம்மா... த்தா இங்கிலீஷ் படம்னா மட்டும் ஸ்லோவா இருந்தாலும் மூடினு பாக்கறானுங்க... தமிழ்ல கொஞ்சம் ஸ்லோவானாலும் லபோதிபோன்னு கத்துவானுங்க...” என அவர் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

“நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனா, ஆடியன்ஸ் இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் பிரிப்பேராதான் வர்றாங்க... தமிழ்ல அப்படி இல்லேல்ல சார்... மாஸ் ஆடியன்ஸ்... எல்லாரையும் திருப்திபடுத்த வேண்டியிருக்கு... கிராவிட்டி இங்க மட்டுந்தான ஓடுது... அதுவும் ஒரே ஒரு ஷோ... இதே படம் உதயத்துலயும், தேவி கருமாரிலயும் நாலு ஷோ ஓட்ட முடியுமா சொல்லுங்க...”

மீண்டும் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும்விதமாகத் தலையசைத்தபடி நடந்தார். ஒயிட்ஸ் ரோடின் மாலை நேர டிராஃபிக்கில் வாகனங்கள் இரைச்சலுடன் எங்களைக் கடந்துகொண்டிருந்தன. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். 

“ஒரு பத்து நாள் கொடுத்திருப்பானா சார், ஜார்ஜ் க்ளூனே இந்தப் படத்துக்கு கால்ஷீட்டு..?”

திடீரென இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவர், சமாளித்தபடி, “பத்து நாள் எதுக்கு... ரெண்டே நாள்ல முடிச்சிருப்பானுங்கம்மா... புளூ மேட் போட்டு ரூமுக்குள்ளயே சுத்த வச்சி எடுத்திருக்கப் போறானுங்க... இதுக்கு இன்னாத்துக்கு பத்து நாள்..!” எனத் தனக்கே உரிய அலட்சியத்துடன் சொன்னார்.

அதற்குள் சத்யம் பார்க்கிங்கை அடைந்திருந்தோம்.

அருகில் வந்த சரவணன் சார், “கயிறைத் தாண்டி குறுக்குல போவாத... வண்டியை இங்க விட்டுட்டு அங்க போய் படம் பாத்துட்டு வர்றோம்னு கண்டுபிடிச்சிடப் போறானுங்க... வா... அப்படி சுத்தியே போவோம்...” என எச்சரித்தார். அவர் சொல்படியே சுத்திக்கொண்டு போய் வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் திரும்பினோம்.

Thursday, February 13, 2014

உன் நினைவில் என் கனாவே..!




“தமிழை மறந்துடாத… தாத்தாவை மறந்துடாத…” தான் இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தொகுத்து, நடிக்கவும் செய்த தலைமுறைகள் படத்தின் இறுதிக் காட்சியில் அவர் பேசின வசனம். 

பாலு மகேந்திரா சார்!

1989ல் தாராசுரம், கோவிந்தசாமி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்னாவது படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை. டி.வி. அதிசயம்! ஊரில் சில பணக்காரர்கள் வீட்டில் அதை வைத்திருப்பார்கள். சனி ஞாயிறுகளில் கூட்டம் கூடும். வயசாளிகள், பெரியவர்கள், வீட்டுப் பெண்கள், இளந்தாரிகள், என வயசு பேதமிருக்காது. டி.வி. ரசிகர்களில் சிறுவர்கள் கூட்டம் தொலைக்காட்சி முதலாளிக்கு எப்போதுமே தொந்தரவாகத்தான் இருக்கும். பேசிக்கொண்டே இருப்பார்கள். புழுதி நாற்றமடிக்கும். மேல் சட்டை அணிந்திருக்கமாட்டார்கள். படம் முடிந்து விளக்கு போடுகையில்தான் தெரியும், ஒன்றிரண்டு பேர் கோட்டுவாய் ஒழுகத் தூங்கியிருப்பார்கள். இப்படி எங்களை டி.வி. பார்க்க, உள்ளே அனுமதி மறுக்க அவர்களுக்கு அநேகக் காரணங்கள். இருந்தாலும் தளராமல் வீடு விட்டு வீடு கூட்டத்தில் கடைசி ஆளாகப் பேசாமல் நிற்பேன். 

வாரா வாரம் சனிக்கிழமை மாலை தூர்தர்ஷனில் இந்திப் படம் போடுவார்கள். ஒட்டகம் மார்க் சிகைக்காய்த் தூளுக்கு கும்பகோணம் ஏஜெண்டாக இருந்த ஒருவர் வீட்டு டி.வியில்தான் பின்னாளில் கூட்ட நெரிசல் இல்லாமல் இந்திப் படங்கள் பார்க்க முடிந்தது. சித்திதான் (அம்மாவுடன் பிறந்த தங்கை) அழைத்துப் போவார். இந்தியோ, தமிழோ, தான் பார்த்த படங்களின் கதையைச் சொல்லிக்கொண்டே இருப்பார் சித்தி. தாத்தா, ஆத்தா, மாமா, அத்தை, சித்தி என இருந்த கூட்டுக் குடும்பத்தில் பெற்றோரைப் பிரிந்திருந்த எனக்கு அந்த நினைவு வராமல் பாத்துக்கொண்டவர் சித்தி.

கும்பகோணம் அரசு கல்லூரியில் முதுகலைப் பயின்று வந்த சித்திக்கும் எனக்குமான சனிக்கிழமைகள் இப்படி அமையும். உதாரணத்திற்கு “Peacock” என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கைப் பிழையில்லாமல் சொன்னால்தான் அன்றைய ஹிந்திப் படம். புத்தகத்தைப் பார்த்துவிட்டு நேரமெடுத்துக்கொள்ளாமல் உடனே ஸ்பெல்லிங் சொல்வேன். சித்தியும் உடனடியாக வெரிகுட் சொல்லிவிட்டு சுவர்க்கடிகாரத்தைப் பார்ப்பார். ஐந்தரையை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம். மிச்சத்தை நாளைக்குப் பார்க்கலாம் எனக் கழிந்த ஹிந்திப் படங்களின் சனிக்கிழமை மாலைகள், நினைவுகள். டி.வி. எங்களை ஈர்த்தது. தூர்தர்ஷனில் ஞாயிறு மாலை தமிழ்ப்படம் ஓடும். அப்படி ஒரு ஞாயிறு மாலை, சித்தி சொல்லி தாராசுரம், ராஜ ராஜன் தெருவிலிருந்து உடையார் வீடு பஸ் ஸ்டாப்பிங் தாண்டி ஒரு வீட்டில் நான் பார்த்ததுதான் பாலு மகேந்திராவின் வீடு. பாட்டு இல்லை. டான்ஸ் இல்லை. ரொம்பவும் விரும்பும் மந்திர தந்திர மாயாஜாலக் காட்சிகள் இல்லை. ராமாயணத் தொடரில் வந்த அம்புகளோ, போர்க்களக் காட்சிகளோ எதுவும் இல்லை. என்றாலும் ‘வீடு’ பிடித்திருந்தது. மனசுக்கு நெருக்கமாகவும் இருந்தது. தாராசுரம் மெயின் ரோட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டு ராஜ ராஜன் தெருவில் நாங்கள் குடிபெயர்ந்தது; புது வீடு கட்டுவதற்குள் தற்காலிகக் குடிசைக்குள் வாழ்ந்தது; காற்றடிக் காலத்தில் வளையும் பனைமரம் எங்கள் குடிசை மேல் விழுமோ என்றெண்ணித் தூக்கம் வராமல் தவித்தது; கற்களால் ஆன ஒரு வீட்டைக் கட்ட நடந்த போராட்டங்கள்; என பாலு மகேந்திராவின் வீட்டோடு என் வீட்டைத் தொடர்புபடுத்திப்பார்க்கக் காரணங்கள் ஏராளம். ‘வீடு’ கதையை என்னை சொல்லச் சொல்லி சித்தி கேட்டுக்கொண்டிருந்தது இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது.

“இன்னதெல்லாம் நல்லது. இதுவெல்லாம் கெட்டது. நீ பார்த்த 'வீடு'தான் நல்ல சினிமா… நம் வாழ்க்கையைப் பிரதிபலித்திருக்கிறது பார்த்தாயா…” என சித்தி சொன்னதுதான் எனக்கான முதல் சினிமாப் பாடம். 

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த புதிதில் மூன்றாம் பிறை டி.வி.டி.யைத் தேடித் தேடி வாங்கியது போன்ற நடவடிக்கைகளைச் சித்தி ஏதும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தன் பின்னணி எனக்கும் சித்திக்கும் பாலு மகேந்திராவுக்கும் மட்டுமே தெரியும். 

‘கர்ண மோட்சம்’ டி.வி.டி.யாக வந்தவுடன் நானும் நண்பன் கீர்த்தியும் பாலு மகேந்திராவைச் சந்தித்துக் கொடுக்க அவர் அலுவலகம் சென்றிருந்தோம். தேநீர் கொடுத்து உபசரித்தவர் நாங்கள் கொடுத்த டி.வி.டியைப் பெற்றுக்கொண்டு, கதைச் சுருக்கத்தைக் கேட்டபின் ஒரு வெள்ளைக் குறுஞ்சீட்டைக் கிழித்து, அதில் என் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்டு அந்த டி.வி.டி. உறைக்குள்ளே வைத்துக்கொண்டார். எங்கள் எதிர்காலம் பற்றி விசாரித்தார். நான் உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னென். என்னிடமிருந்து அதை அவர் எதிர்பார்க்கவில்லை போல. சில நிமிடங்கள் மௌனமாயிருந்தார். நான் பதைத்துப் போய் கீர்த்தியைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்காதது போன்ற பாவ்லாவுடன் தொடர்ந்து மௌனமாயிருக்கும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். “You’re a professional film maker… Already you’ve chosen that film making is you’re profession… You’ve proven that with your short film… Then why you want to be assisting someone else..?” என இன்றுவரை விடை காண முடியாத அந்தக் கேள்வியைச் சற்றுக் கோபமாகவே எங்களிடம் கேட்டார். குருவின் முன் சரணாகதி அடைந்த சீடர்களாக நாங்கள் மௌனித்திருந்தோம். எங்களின் இயலாமையை உணர்ந்த அவர் தன் பேச்சை மாற்றும் விதமாக, “என்ன படம் பாத்தீங்க..?” என்றார். சற்றே நம்பிக்கை வந்தவனாக, “‘பருத்தி வீரன்’ சார்… எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றேன். மீண்டும் அமைதி. “ஏம்பா… அந்தக் கதை நடக்கிற ஊர்ல, அன்பா, தணிவா, பேச ஒரு ஆள் கூட இல்லையா… ஏம்பா எல்லாருமே இவ்வளோ கோவக்காரங்களா இருக்காங்க” எனச் சொன்னவர் இறுதியாக எங்களை வாழ்த்திவிட்டுக் குறும்படத்தைப் பார்த்துவிட்டுத் தொலைபேசியில் அழைப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தார். நான் ரொம்பவும் எதிர்பார்த்திருந்த அந்த அழைப்பு வரவேயில்லை.

அதன் பிறகு மக்கள் தொலைக்காட்சியின் பத்து நிமிடக் கதைகளில் சிறந்த பத்துக் குறும்படங்களில் கர்ண மோட்சமும் ஒன்றாக வந்தது. அதை அவர்தான் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்கள். அந்த பத்துப் படங்கள் பற்றின தொலைக்காட்சி நிகழ்வில் கர்ண மோட்சத்தை நிரம்பப் பாராட்டினார். நானும் கீர்த்தியும் கொண்டு போய்க் கொடுத்த டி.வி.டி. பற்றின நினைவு அவரிடம் இல்லை. புதிதாகப் பார்த்ததாகத்தான் பேசினார். பத்து குறும்படங்களின் இயக்குநர்களுக்கும் அந்நிகழ்வில் கலந்துகொண்ட நிழல் பத்திரிகை ஆசிரியர் திருநாவுக்கரசிடம் தன் செலவில் ஓராண்டுக்கு நிழல் இதழ் அனுப்பி வைக்கச் சொன்னார். 

‘கர்ண மோட்சம்’ திரையிடப்படும் இடமெல்லாம் அவரே உடனிருப்பது போலத்தான் இருக்கும். மௌனத்தின் இசையைக் கற்றுக்கொடுத்தவரல்லவா அவர்!

‘பாலு மகேந்திராவை ஒருமுறையேணும் சந்தித்துப் பேசிவிட வேண்டும்’ என ஊருக்குப் போகும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார் அண்ணன் மணி.செந்தில். அழியாத கோலங்களின் தீவிர ரசிகர். அந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லிச் சொல்லிக்கொண்டே இருப்பார். இன்றுவரை அழியாத கோலங்களைப் பார்க்கவில்லை. அவரும் பாலு மகேந்திராவைப் பார்த்தாரா தெரியவில்லை. இன்று (13.02.2014) அவரிடம் அதுபற்றிக் கேட்க எனக்குத் திராணியுமில்லை. 
பாலு மகேந்திரா சார்..! ஒரு தீர்க்கதரிசி. தான் கற்ற சினிமாவைத் தான் நேசித்த சினிமாவுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்ட சமரசமில்லாக் கலைஞன். ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ் சட்டை, தொப்பி, கழுத்தில் கர்ச்சீஃப், கையில் ஒரு சிறிய தோல் பை, எனத் தனக்கிருந்த பொதுப்பிம்பத்தை களைந்துவிட்டுக் கடைசி காலத்தில் தன் தலைமுறைகள் படத்தில் ஒரு நடிகனாகவும் சேதி சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

“தமிழை மறந்துடாத…
தாத்தாவை மறந்துடாத!”
 அய்யன் பாலு மகேந்திராவுக்குப் புகழஞ்சலிகள்!


-    ச.முரளி மனோகர்.





Share