“தமிழை
மறந்துடாத… தாத்தாவை மறந்துடாத…” தான் இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தொகுத்து, நடிக்கவும்
செய்த தலைமுறைகள் படத்தின் இறுதிக் காட்சியில் அவர் பேசின வசனம்.
பாலு
மகேந்திரா சார்!
1989ல்
தாராசுரம், கோவிந்தசாமி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்னாவது படித்துக்கொண்டிருக்கும்போது
எங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை. டி.வி. அதிசயம்! ஊரில் சில பணக்காரர்கள் வீட்டில்
அதை வைத்திருப்பார்கள். சனி ஞாயிறுகளில் கூட்டம் கூடும். வயசாளிகள், பெரியவர்கள், வீட்டுப்
பெண்கள், இளந்தாரிகள், என வயசு பேதமிருக்காது. டி.வி. ரசிகர்களில் சிறுவர்கள் கூட்டம்
தொலைக்காட்சி முதலாளிக்கு எப்போதுமே தொந்தரவாகத்தான் இருக்கும். பேசிக்கொண்டே இருப்பார்கள்.
புழுதி நாற்றமடிக்கும். மேல் சட்டை அணிந்திருக்கமாட்டார்கள். படம் முடிந்து விளக்கு
போடுகையில்தான் தெரியும், ஒன்றிரண்டு பேர் கோட்டுவாய் ஒழுகத் தூங்கியிருப்பார்கள்.
இப்படி எங்களை டி.வி. பார்க்க, உள்ளே அனுமதி மறுக்க அவர்களுக்கு அநேகக் காரணங்கள்.
இருந்தாலும் தளராமல் வீடு விட்டு வீடு கூட்டத்தில் கடைசி ஆளாகப் பேசாமல் நிற்பேன்.
வாரா
வாரம் சனிக்கிழமை மாலை தூர்தர்ஷனில் இந்திப் படம் போடுவார்கள். ஒட்டகம் மார்க் சிகைக்காய்த்
தூளுக்கு கும்பகோணம் ஏஜெண்டாக இருந்த ஒருவர் வீட்டு டி.வியில்தான் பின்னாளில் கூட்ட
நெரிசல் இல்லாமல் இந்திப் படங்கள் பார்க்க முடிந்தது. சித்திதான் (அம்மாவுடன் பிறந்த
தங்கை) அழைத்துப் போவார். இந்தியோ, தமிழோ, தான் பார்த்த படங்களின் கதையைச் சொல்லிக்கொண்டே
இருப்பார் சித்தி. தாத்தா, ஆத்தா, மாமா, அத்தை, சித்தி என இருந்த கூட்டுக் குடும்பத்தில்
பெற்றோரைப் பிரிந்திருந்த எனக்கு அந்த நினைவு வராமல் பாத்துக்கொண்டவர் சித்தி.
கும்பகோணம்
அரசு கல்லூரியில் முதுகலைப் பயின்று வந்த சித்திக்கும் எனக்குமான சனிக்கிழமைகள் இப்படி
அமையும். உதாரணத்திற்கு “Peacock” என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கைப் பிழையில்லாமல்
சொன்னால்தான் அன்றைய ஹிந்திப் படம். புத்தகத்தைப் பார்த்துவிட்டு நேரமெடுத்துக்கொள்ளாமல்
உடனே ஸ்பெல்லிங் சொல்வேன். சித்தியும் உடனடியாக வெரிகுட் சொல்லிவிட்டு சுவர்க்கடிகாரத்தைப்
பார்ப்பார். ஐந்தரையை நெருங்கிக்கொண்டிருக்கும்
நேரம். மிச்சத்தை நாளைக்குப் பார்க்கலாம் எனக் கழிந்த ஹிந்திப் படங்களின் சனிக்கிழமை
மாலைகள், நினைவுகள். டி.வி. எங்களை ஈர்த்தது. தூர்தர்ஷனில் ஞாயிறு மாலை தமிழ்ப்படம்
ஓடும். அப்படி ஒரு ஞாயிறு மாலை, சித்தி சொல்லி தாராசுரம், ராஜ ராஜன் தெருவிலிருந்து
உடையார் வீடு பஸ் ஸ்டாப்பிங் தாண்டி ஒரு வீட்டில் நான் பார்த்ததுதான் பாலு மகேந்திராவின்
வீடு. பாட்டு இல்லை. டான்ஸ் இல்லை. ரொம்பவும் விரும்பும் மந்திர தந்திர மாயாஜாலக் காட்சிகள்
இல்லை. ராமாயணத் தொடரில் வந்த அம்புகளோ, போர்க்களக் காட்சிகளோ எதுவும் இல்லை. என்றாலும்
‘வீடு’ பிடித்திருந்தது. மனசுக்கு நெருக்கமாகவும் இருந்தது. தாராசுரம் மெயின் ரோட்டிலிருந்து
அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டு ராஜ ராஜன் தெருவில் நாங்கள் குடிபெயர்ந்தது; புது வீடு
கட்டுவதற்குள் தற்காலிகக் குடிசைக்குள் வாழ்ந்தது; காற்றடிக் காலத்தில் வளையும் பனைமரம்
எங்கள் குடிசை மேல் விழுமோ என்றெண்ணித் தூக்கம் வராமல் தவித்தது; கற்களால் ஆன ஒரு வீட்டைக்
கட்ட நடந்த போராட்டங்கள்; என பாலு மகேந்திராவின் வீட்டோடு என் வீட்டைத் தொடர்புபடுத்திப்பார்க்கக்
காரணங்கள் ஏராளம். ‘வீடு’ கதையை என்னை சொல்லச் சொல்லி சித்தி கேட்டுக்கொண்டிருந்தது
இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது.
“இன்னதெல்லாம்
நல்லது. இதுவெல்லாம் கெட்டது. நீ பார்த்த 'வீடு'தான் நல்ல சினிமா… நம் வாழ்க்கையைப் பிரதிபலித்திருக்கிறது
பார்த்தாயா…” என சித்தி சொன்னதுதான் எனக்கான முதல் சினிமாப் பாடம்.
திரைப்படக்
கல்லூரியில் சேர்ந்த புதிதில் மூன்றாம் பிறை டி.வி.டி.யைத் தேடித் தேடி வாங்கியது போன்ற
நடவடிக்கைகளைச் சித்தி ஏதும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தன் பின்னணி எனக்கும் சித்திக்கும்
பாலு மகேந்திராவுக்கும் மட்டுமே தெரியும்.
‘கர்ண
மோட்சம்’ டி.வி.டி.யாக வந்தவுடன் நானும் நண்பன் கீர்த்தியும் பாலு மகேந்திராவைச் சந்தித்துக்
கொடுக்க அவர் அலுவலகம் சென்றிருந்தோம். தேநீர் கொடுத்து உபசரித்தவர் நாங்கள் கொடுத்த
டி.வி.டியைப் பெற்றுக்கொண்டு, கதைச் சுருக்கத்தைக் கேட்டபின் ஒரு வெள்ளைக் குறுஞ்சீட்டைக்
கிழித்து, அதில் என் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்டு அந்த டி.வி.டி. உறைக்குள்ளே
வைத்துக்கொண்டார். எங்கள் எதிர்காலம் பற்றி விசாரித்தார். நான் உதவி இயக்குநராக வாய்ப்பு
தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னென். என்னிடமிருந்து அதை அவர் எதிர்பார்க்கவில்லை போல.
சில நிமிடங்கள் மௌனமாயிருந்தார். நான் பதைத்துப் போய் கீர்த்தியைப் பார்த்தேன். அவன்
என்னைப் பார்க்காதது போன்ற பாவ்லாவுடன் தொடர்ந்து மௌனமாயிருக்கும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“You’re a professional film maker… Already you’ve chosen that film making is
you’re profession… You’ve proven that with your short film… Then why you want
to be assisting someone else..?” என இன்றுவரை விடை காண முடியாத அந்தக் கேள்வியைச்
சற்றுக் கோபமாகவே எங்களிடம் கேட்டார். குருவின் முன் சரணாகதி அடைந்த சீடர்களாக நாங்கள்
மௌனித்திருந்தோம். எங்களின் இயலாமையை உணர்ந்த அவர் தன் பேச்சை மாற்றும் விதமாக, “என்ன
படம் பாத்தீங்க..?” என்றார். சற்றே நம்பிக்கை வந்தவனாக, “‘பருத்தி வீரன்’ சார்… எனக்கு
ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றேன். மீண்டும் அமைதி. “ஏம்பா… அந்தக் கதை நடக்கிற ஊர்ல,
அன்பா, தணிவா, பேச ஒரு ஆள் கூட இல்லையா… ஏம்பா எல்லாருமே இவ்வளோ கோவக்காரங்களா இருக்காங்க”
எனச் சொன்னவர் இறுதியாக எங்களை வாழ்த்திவிட்டுக் குறும்படத்தைப் பார்த்துவிட்டுத் தொலைபேசியில்
அழைப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தார். நான் ரொம்பவும் எதிர்பார்த்திருந்த அந்த அழைப்பு
வரவேயில்லை.
அதன்
பிறகு மக்கள் தொலைக்காட்சியின் பத்து நிமிடக் கதைகளில் சிறந்த பத்துக் குறும்படங்களில்
கர்ண மோட்சமும் ஒன்றாக வந்தது. அதை அவர்தான் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்கள். அந்த
பத்துப் படங்கள் பற்றின தொலைக்காட்சி நிகழ்வில் கர்ண மோட்சத்தை நிரம்பப் பாராட்டினார்.
நானும் கீர்த்தியும் கொண்டு போய்க் கொடுத்த டி.வி.டி. பற்றின நினைவு அவரிடம் இல்லை.
புதிதாகப் பார்த்ததாகத்தான் பேசினார். பத்து குறும்படங்களின் இயக்குநர்களுக்கும் அந்நிகழ்வில்
கலந்துகொண்ட நிழல் பத்திரிகை ஆசிரியர் திருநாவுக்கரசிடம் தன் செலவில் ஓராண்டுக்கு நிழல்
இதழ் அனுப்பி வைக்கச் சொன்னார்.
‘கர்ண
மோட்சம்’ திரையிடப்படும் இடமெல்லாம் அவரே உடனிருப்பது போலத்தான் இருக்கும். மௌனத்தின்
இசையைக் கற்றுக்கொடுத்தவரல்லவா அவர்!
‘பாலு
மகேந்திராவை ஒருமுறையேணும் சந்தித்துப் பேசிவிட வேண்டும்’ என ஊருக்குப் போகும்போதெல்லாம்
சொல்லிக்கொண்டிருப்பார் அண்ணன் மணி.செந்தில். அழியாத கோலங்களின் தீவிர ரசிகர். அந்தப்
படத்தைப் பார்க்கச் சொல்லிச் சொல்லிக்கொண்டே இருப்பார். இன்றுவரை அழியாத கோலங்களைப்
பார்க்கவில்லை. அவரும் பாலு மகேந்திராவைப் பார்த்தாரா தெரியவில்லை. இன்று
(13.02.2014) அவரிடம் அதுபற்றிக் கேட்க எனக்குத் திராணியுமில்லை.
பாலு
மகேந்திரா சார்..! ஒரு தீர்க்கதரிசி. தான் கற்ற சினிமாவைத் தான் நேசித்த சினிமாவுக்காக
மட்டுமே பயன்படுத்திக்கொண்ட சமரசமில்லாக் கலைஞன். ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ் சட்டை, தொப்பி,
கழுத்தில் கர்ச்சீஃப், கையில் ஒரு சிறிய தோல் பை, எனத் தனக்கிருந்த பொதுப்பிம்பத்தை
களைந்துவிட்டுக் கடைசி காலத்தில் தன் தலைமுறைகள் படத்தில் ஒரு நடிகனாகவும் சேதி சொல்லிவிட்டுப்
போய்விட்டார்.
“தமிழை
மறந்துடாத…
தாத்தாவை
மறந்துடாத!”
அய்யன்
பாலு மகேந்திராவுக்குப் புகழஞ்சலிகள்!
- ச.முரளி மனோகர்.


