https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Wednesday, September 1, 2010

காற்றில் உறைந்த புன்னகை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படக்கல்லூரியில் நான் செய்தாக வேண்டிய ஆவணப்பட வேலைக்காக முதன் முதலில் அவரை சந்தித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லி நியூ புக் லேண்ட்ஸில் அவர் எழுதியிருந்த ஜெமினி கேண்டீன் என்ற சிறிய ஒரு புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கி வாசித்திருந்தேன். புத்தகத்தில் இருந்த முகவரியும் தொலைபேசி எண்களும் அவரைச் சந்திக்க உதவின. திருவல்லிக்கேணியில் ஒரு நாள் மாலை அவர் இல்லத்தில் வைத்து சந்திப்பு நிகழ்ந்தது. ஒரு குழந்தையைப் போல வெள்ளை மனதுடன் இருந்த அவர் அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் மிக எளிமையானவராக இருந்தார். அறை நிரம்ப புத்தகங்களாக இருந்தன. எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் முதுமையிலும் ஆழ்ந்த நினைவாற்றல் கொண்டிருந்தார். ஏ.என்.எஸ். மணியன். முழுப்பெயர் ஏ.என். சுப்ரமணியன். ஜெமினி ஸ்டுடியோ இருந்தபோது கேண்டீன் ஊழியராக சுமார் 18 ஆண்டுகள் வேலை செய்தவர். ஜெமினி அதிபரும் இயக்குநருமான எஸ். எஸ். வாசனிடம் விசுவாசம் மிக்கவர். தான் வசித்துவரும் வீட்டுக்கு ஜெமினி இல்லம் எனப் பெயர் வைக்கும் அளவுக்கானது அவர் விசுவாசம். ஜெமினி கேண்டீன் ஏ.என்.எஸ். மணியனை அவரது பழுத்த நினைவுகளை மையமாகக் கொண்டு 2004ம் ஆண்டில் திரைப்படக் கல்லூரி படிப்புக்காக அக்காலம் என்ற ஆவணப்படத்தை இயக்கினேன். இப்படித்தான் எனக்கும் அவருக்குமான உறவு தொடங்கி நீடித்தது.
நேற்றிரவு (31.08.10) அலுவலகப் பணிகள் முடிந்து வீடு திரும்புகையில் என் செல்பேசியில் அந்த அழைப்பு வந்தது. மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினேன். மறுமுனையில், “நீங்க முரளி மனோகர்தானே?” என ஆண் குரல் கேட்டது. நான், “ஆமா… நீங்க..?” என்றதும், “ஒரு நிமிஷம் சார்..” என்றது. சிறிது நேரத்தில் இன்னொரு குரல். அவரும் என்னை நீங்கதானா எனக் கேட்டுக்கொண்டபின் பேசத் தொடங்கினார். “நான் ஏ.என்.எஸ். மணியனோட சன் பேசறேன் சார்” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு தொடர்ந்தார். “இன்னைக்கு மத்தியானம் அப்பா இறந்துட்டார் சார்… அதான் உங்களுக்கு தகவல் சொல்ல ஃபோன் பண்ணேன்…” அவர் சொல்வது கேட்டு அதிர்ந்து என்ன எதிர்வினை செய்வதெனத் தெரியாமல் நின்றுகொண்டிருக்க வாகனங்கள் இரைச்சலுடன் என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தன. தொடர்ந்து அவர், “அப்பா உங்க மேல ரொம்ப பிரியம் வச்சிருந்தார் இல்லியா… அதான் அவர் டைரிலருந்து உங்க நம்பரைத் தேடி ஃபோன் பண்ணேன்… நாளைக்கு காலைல 8 மணி வாக்குல கிரிமேஷன்… திருவல்லிக்கேணி நமச்சிவாயம் தெரு வீட்டிலதான் வச்சிருக்கோம்… உங்களுக்கு வீடு நினைவிருக்கில்ல…” என அவர் கேட்கவும் தெரியும் சார் என்று சொல்லிவிட்டு எப்படி இறந்தார் என விசாரித்தேன். இரண்டு புதிய புத்தகங்கள் எழுதி அதை வெளியிடும் முயற்சியில் இருந்ததாகவும் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த வேலை பரபரப்பில் வீட்டிலேயே தவறி விழுந்துவிட்டதாகவும் பின்னர் இன்று மதியம் சிறுநீரகம் செயலிழந்து மருத்துவமனையில்தான் இறந்ததாகவும் சொன்னார்.
அக்காலம் ஆவணப்படத்திற்காக நான் அவருடன் இணைந்து வேலை செய்த நாட்களை யோசித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். திரைப்படக் கல்லூரி வகுப்பு நேரம் முடிந்த மாலை நேரங்களில் ஒரு வாரம் தொடர்ந்து அவர் வீட்டிற்குச் சென்று ஆவணப் படத்திற்காக அவரைப் பேட்டி எடுத்தேன். ஜெமினி கேண்டீன் என்ற அவர் புத்தகத்தை அடிப்படையாக வைத்து நான் கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்தேன். மேலதிகமான தகவல்கள் அவரிடம் நேரில் பேசும்போது எனக்குக் கிடைத்தன. அவர் வீட்டிலும், திரைப்படக் கல்லூரியிலும் வைத்து இரண்டு நாட்களில் அக்காலம் ஆவணப்படத்தைப் படம் பிடித்தோம்.
வீட்டில் படப்பிடிப்பு நடந்த நாளன்று அவரே தன் கையால் எங்களுக்கெல்லாம் உணவு பரிமாறினார். பயிலகத்தில் படப்பிடிப்பு நடக்கையில் மிகச் சாதாரணமாக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவைச் சாப்பிட்டார்.
அக்காலம் ஆவணப்படத்தை உருவாக்குதில் நாங்கள் எதிர்கொண்ட முக்கியமான சிக்கல்களில் ஒன்று திரைப்படக்கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த கால அளவு. ஐந்து நிமிடங்கள்தான் ஒரு ஆவணப்படத்திற்கான வேடிக்கையான கால வரையறை. அக்காலத்தின் முக்கியத்துவத்தையும் அதை நாங்கள் செய்த விதத்தையும் பார்த்து எங்கள் குழுவுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தார்கள். பதினைந்து நிமிடங்களுக்கு நாங்கள் அக்காலத்தை உருவாக்கினோம். குறுந்தகடைக் கொண்டுபோய் ஏ.என்.எஸ் மணியன் அவர்களிடம் கொடுத்த நாளை என்னால் மறக்க முடியாது. பயிலகத்தில் அக்காலத்திற்கு கிடைத்த விதிவிலக்கு குறித்து சொன்னேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். முதுமையிலும் தனக்குக் கிடைத்த சிறிய ஒரு அங்கீகாரத்தால் அவர் மனநிறைவுடன் இருந்ததை என்னால் அன்று அருகிலிருந்து உணர முடிந்தது. அக்காலம் ஆவணப்படத்தை பார்த்த அவரின் மகன்கள், பேரன் பேத்திகள் என அனைவரும் தங்கள் சந்தோஷத்தை என்னுடன் தொலைபேசியில் அன்றிரவு பகிர்ந்துகொண்டார்கள். இறுதியாகப் பேசிய ஏ.என்.எஸ்., “எல்லாருக்கும் உன் படம் பிடிச்சிருக்கப்பா… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை… உனக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நான் ஏதாவது கொடுக்கணும்… உன் வேலையெல்லாம் முடிச்சிட்டு வா… நானே என் கையால ஏதாவது பட்சணம் பண்ணித் தர்றேன்…” என்றார் நெகிழ்வாக.

அதன்பிறகு என்னைத் தன் குடும்ப உறுப்பினர்போலவே பாவித்தார். வாரம் ஒருமுறைத் தவறாமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். என் படிப்பு குறித்து விசாரிப்பார். மூன்றாம் ஆண்டு இறுதியில் அக்காலம் ஆவணப்படத்திற்கு பயிலகத்தில் முதல் மதிப்பெண் வழங்கப்பட்ட தகவலை அவருக்கு தொலைபேசியில் தெரிவித்தேன். மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ என அவர் எழுதிய ஒரு புத்தகத்தின் வெளியீட்டு விழா திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடந்தது. விழாவுக்கு முன்பாக அக்காலம் படத்தை திரையிட ஏற்பாடு. ஜெயகாந்தன் உள்ளிட்ட பெரியவர்கள் கலந்துகொண்ட விழாவில் நான் இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. விழாவில் பேசிய அனைவரும் ஏ.என்.எஸ் அவர்களையும் அவரது புதிய புத்தகத்தையும் பேசிவிட்டு அக்காலத்தை பாராட்டியும் என்னை வாழ்த்தியும் பேசினார்கள். விழாவின் இடையில் திடீரென என்னை மேடைக்கு அழைத்த ஏ.என்.எஸ். எல்லோரிடமும் என்னை அறிமுகம் செய்து ஜெயகாந்தன் கையால் பொன்னாடை போர்த்த வைத்து மகிழ்ந்தார். நான் இயக்கிய ஒரு படத்திற்காக எனக்குக் கிடைத்த முதல் கௌரவமும் பாராட்டும் அதுதான்.
எழுத்தின் மீதும் சினிமா மீதும் அவருக்கு இருந்த தீராத பற்று இறுதிவரை குறைந்ததாகத் தெரியவில்லை. எப்போதும் வாசித்துக்கொண்டே இருப்பார். ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், திருப்பூர் கிருஷ்ணன், உள்ளிட்ட எழுத்தாளர்கள் பலர் அவருக்கு நெருங்கிய நண்பர்கள். ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென தான் ஒரு நாவல் எழுத வேண்டும் என்றும் தற்போது அதற்கான வேலைகளில்தான் நேரம் செலவிடுவதாகவும் என்னிடம் சொன்னார். ஒருவேளை தன் இறுதி நாட்களில் எழுதிய இரண்டு புத்தகங்களில் ஒன்றாக அந்த நாவல் இருக்கலாம். சில வருடங்களாக ஏதாவதொன்றைச் செய்துவிட வேண்டும் என்ற தனியாத வேட்கை அவரிடம் இருந்ததை என்னால் உணர முடிந்தது. இளம் வயதிலிருந்து கடுமையாக உழைத்து வெற்றிகரமான ஒரு மூத்த குடும்பத் தலைவனாக இருந்தாலும் முதுமையின் தனிமையில் தான் ஒரு படைப்பாளனாக எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தேடல் இருந்தது. எண்பதைக் கடந்த வயதிலும் அதற்காக அவர் தன்னை தயார்படுத்திக்கொண்ட உழைப்பும் சுறுசுறுப்பும் உத்வேகமும் என்னை வியக்க வைத்தவை. அதே நேரம் தற்கால சினிமாவில் அவருக்கு அவ்வளவாக உடன்பாடில்லை என்பதையும் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். திரையரங்கத்திற்கு சென்று நெடுநாள் ஆகிவிட்டதாகவும் தொலைக்காட்சிகளில் பார்க்க நேரும் புதிய படங்கள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படி இல்லை என்றும் ஆதங்கப்படுவார். திரையரங்கம் சென்று சினிமா பார்க்க ஆகும் செலவு குறித்த பயமும் அவரிடமிருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்பு குறைந்திருந்தது. தொடர்ந்த வேலைகள், பயணங்கள் என அதற்கான காரணங்களை யோசித்தாலும் மனசில் ஒரு சிறிய உறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. வீட்டின் பரண் மேலிருந்த ஒரு அட்டைப் பெட்டியிலிருந்து அவர் கையெழுத்திட்டு அனுப்பியிருந்த ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ புத்தகத்தை தேடி எடுத்தேன். மீண்டும் ஒரு முறை வாசிக்க மேசையில் இருக்கிறது.
யாருமே எதிர்பார்த்திராத அவரின் மறைவு மிகுந்த வேதனையளித்தாலும் தான் வாழ்ந்த காலத்தின் சாட்சியாக இருந்த சுத்தமான ஒரு மனிதனை ஆவணப்படுத்தியதில் சின்ன நிறைவு இருக்கிறது. தன் பல்வரிசை தெரிய சற்றே கோணலாக எப்போதும் ஏ.என்.எஸ். சிரிக்கும் ஒரு சிரிப்பு நினைவுக்கு வருகிறது. காற்றில் உறைந்த புன்னகையாக அது என் கண் முன்னால் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
- ச. முரளி மனோகர்

Share