
எதிர்பாரா விதமாக இன்று மதியத்திற்கு மேல்
கிடைத்த விடுப்பை கிராவிட்டி (Gravity) படம் பார்க்கப் பயன்படுத்திக்கொள்ள அலுவலக நண்பர்கள்
திட்டமிட்டார்கள். 3-Dயில், அதுவும் திரையரங்கில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து வெகு
நாட்கள் ஆனதாலும் கிராவிட்டி பற்றிக் கேள்விப்பட்டவை, இணையத்தில் படித்தவை, நினைவுக்கு
வந்ததாலும் எனக்கும் படம் பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்ட்து. உதவி படத்தொகுப்பாளர்
- சத்தீஷ், உதவி இயக்குநர் - பாலா, தயாரிப்பு மேலாளர் - சரவணன் சாருடன் எனக்கும் ஒரு
டிக்கெட் சொன்னேன்.
மாலை 4.20 மணிக்கு சத்யம் எஸ்கேப்பில்
ஒரே ஒரு ஷோதான் ஓடிக்கொண்டிருக்கிறது கிராவிட்டி. சில தினங்களுக்கு முன் ஏழு ஆஸ்கர்களை
வாரிக் கொண்டதால் புதிதாக வேறு கிராக்கி வந்திருக்கும் போல. இணையத்தில் ஹவுஸ் ஃபுல்
காட்டியது. எங்கள் ஆர்வத்தையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்ட நண்பரும் அலுவலக நிர்வாகியுமான
யோகேஷ் மிதுன், தனக்கு சத்யம் திரையரங்கில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நான்கு டிக்கெட்டுகள்
புக் செய்து கொடுத்தார்.
சத்யம் எஸ்கேப் மல்டிப்ளக்ஸ் உள்ள எக்ஸ்பிரஸ்
அவென்யூவில் டூ வீலர் பார்க்கிங் கட்டணம் மணிக்கணக்கில் போடுவார்கள். எப்படியும் ஒரு
வண்டிக்கு அறுபது ரூபாய்க்கு மேல் ஆகிவிடும் எனக் கணக்கிட்டு சாமர்த்தியமாக சத்யம்
தியேட்டர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நானும் புரொடக்ஷன் மேனஜர் சரவணன்
சாரும் நடந்தே எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குச் சென்றோம். முன்னதாக வந்திருந்த சத்தீஷும்,
பாலாவும் புக் செய்திருந்த டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார்கள். திரையரங்கிற்குள்
நுழையும் முன் எங்கள் நால்வரையும் ஏற இறங்கப் பார்த்தபடி ஒரு ஆள் 3D கண்ணாடிகளைக் கொடுத்தார்.
“டேமேஜ் ஆனா பே பண்ணணும் சார்” என வார்னிங் வேறு.
கிராவிட்டி எதிர்பார்த்தது போலவே புது
அனுபவமாக இருந்தது. படம் பற்றின எனது தனிப்பட்ட அனுபவத்தை ஒரு காட்சியை வைத்துச் சொல்லலாம்.
வின்வெளியில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சாந்த்ரா புல்லக்கிற்கு அவர் வைத்திருக்கும்
ஆக்ஸிஜனின் சதவீதம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து கடைசியில் தீர்ந்தே போய்விடும்.
ஜார்ஜ் க்ளூனேயின் வழிகாட்டலில் ஆக்ஸிஜனுடன் உள்ள வேறொரு விண்கலத்தைக் கண்டுபிடித்து,
போராடி ஒரு வழியாக அதன் ஏர் லாக் செக்ஷனின் கதவைத் திறந்து உள்ளே வந்துவிடுவார் புல்லக்.
அதுவரை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருந்த சாந்த்ரா புல்லக் சட்டெனக் கிடைத்த
ஆக்ஸிஜனால் கடுமையாக மூச்சு வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆவார். தன் உடலோடு
பொருத்தியிருந்த ஹெல்மெட், விண்வெளிப் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள், அனைத்தையும்
கழட்டிப் போடுவார். கிராவிட்டி இல்லாததால் அவை அங்கங்கே மிதந்து போய்க்கொண்டிருக்கும்.
குறைந்தபட்ச உடைகளுடன் காற்றாட சற்றே சோம்பல் முறிப்பார்.
சாந்த்ராவின் தற்காலிக நிம்மதியைக்
குலைக்கும் விதமாக விதி தீ வடிவில் வரும். விண்கலத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்துக்கொண்டதாக
மானிட்டர் அலறும். சாந்த்ரா புல்லக் பரபரப்புடன் எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்கு மிதந்து
மிதந்து விரைவார். அங்குள்ள fire extinguisher-ஐப் பயன்படுத்தித் தீயை அணைக்க முயல
அது மேலும் மேலும் தீவிரமடையும். விண்வெளியில் தன்னந்தனியாக, நிராயுதபாணியாக, இப்படி
ஒரு பெண் வின்கலத்தில் மாட்டிக்கொண்டு போராடுவது என்னைப் பதைபதைக்க வைத்தது. தீ படுவேகமாகப்
பரவி வர நிலைமையைப் புரிந்துகொண்ட சாந்த்ரா மீண்டும் முன்பிருந்த கட்டுப்பாட்டுப் பகுதிக்கு
வந்து, தீப்பிடித்த பகுதிகளை தான் இருக்கும் பகுதியிலிருந்து ஒவ்வொன்றாகக் கழட்டிவிட
பட்டன்களைத் தேடி தேடி அழுத்துவார். “ஏம்மா... ஏற்கனவே கொழுந்து விட்டு எரியுது...
மொதல்ல அத விட்டு வெளியே போம்மா... நீ வேற ஸ்பேஸ் டிரஸ்ஸு, ஹெல்மெட்டுன்னு, எல்லாத்தையும்
கழட்டிப் போட்டுட்டு உக்காந்துனுக்கிற... அதெல்லாம் வேற காத்துல மிதந்துனு போச்சு...
இருக்கா எரிஞ்சிடுச்சான்னு தெரில... சாதாரணமா ஒரு பேண்ட் சட்டை போடவே ரெண்டு நிமிஷம்
ஆவும்... நீ அவ்வளோ வெய்ட்டையும் எடுத்து மாட்டிகினு, ஜிப்பெல்லாம் போட்டுட்டுக் கதவைத்
திறந்துட்டுப் போவணும். நெருப்பு வருதும்மா யம்மா... எரியுதும்மா... மொத ஸ்பேஸ் டிரஸ்ஸைத்
தேடி எடுத்துப் போட்டுட்டுக் கிளம்பும்மா... அங்க வேற எதனா வண்டி நிக்கும்... புடிச்சி
ஊர் போய்ச் சேந்துடலாம்... போம்மா...” இப்படியாக சாந்த்ரா அந்த தீப்பிடித்த விண்கலத்திலிருந்து
வெளியேறும் வரை மனசு கிடந்து தவியாய்த் தவித்தது. நல்லவேளையாக வேறு யாரோ வைத்திருந்த
ஸ்பேஸ் டிரஸ்ஸை மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார்.
உதாரணத்திற்குதான் இந்தக் காட்சியைச் சொன்னேன்.
மற்றபடி, படம் முழுக்கவுமே நம்மை இருக்கை முனையில்தான் அமர வைக்கிறார்கள். தொழில்நுட்ப
ரீதியில் கிராவிட்டியை விவரித்து எழுத ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் சுருக்கமாக,
‘இன்னைக்கு எங்க ஆஃபீஸ்லருந்து நாங்க நாலு பேர் கிளம்பிப் போய் ஒரு படம் பாத்துட்டு
வந்தோம்...’ என்ற அளவில் மட்டும் இந்தப் பதிவு.
படம் முடிந்து வெளியேறுகையில் “பாத்துக்கப்பா...
நாங்க ஒன்னும் டேமேஜ் பண்ணிடல...” என மனசில் நினைத்துக்கொண்டே அந்த 3D கண்ணாடியைப்
பொறுப்புடன் ஒப்படைத்தோம்.
நானும் சரவணன் சாரும் எக்ஸ்பிரஸ் அவென்யூவீலிருந்து
வெளியேறி, டிராஃபிக்குக்கிடையே சாலையைக் கடந்து, சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் உள்ள
வண்டியை எடுக்க நடக்க ஆரம்பித்தோம். எங்களைப் போல வேறு சிலரும் சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில்
வண்டி எடுக்கப் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். ஏழெட்டு நிமிட நடையில் எங்களுக்கிடையேயான
பேச்சு இப்படிப் போனது.
“இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தமிழ்ப்
படத்துக்கு விடற மாதிரி இடைவேளைல்லாம் விடக் கூடாது சார்... இண்டர்வெல்லுக்கப்புறம்
flow பிரேக் ஆகுது...” என என் ஆதங்கத்தை சரவணன் சாரிடம் வெளிப்படுத்தினேன்.
அதை ஆமோதித்தவர் சிறிது நேர யோசனைக்குப்
பின், “படம் பிகினிங்லாம் கொஞ்சம் ஸ்லோதாம்மா... த்தா இங்கிலீஷ் படம்னா மட்டும் ஸ்லோவா
இருந்தாலும் மூடினு பாக்கறானுங்க... தமிழ்ல கொஞ்சம் ஸ்லோவானாலும் லபோதிபோன்னு கத்துவானுங்க...”
என அவர் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனா, ஆடியன்ஸ்
இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் பிரிப்பேராதான் வர்றாங்க... தமிழ்ல அப்படி இல்லேல்ல
சார்... மாஸ் ஆடியன்ஸ்... எல்லாரையும் திருப்திபடுத்த வேண்டியிருக்கு... கிராவிட்டி
இங்க மட்டுந்தான ஓடுது... அதுவும் ஒரே ஒரு ஷோ... இதே படம் உதயத்துலயும், தேவி கருமாரிலயும்
நாலு ஷோ ஓட்ட முடியுமா சொல்லுங்க...”
மீண்டும் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும்விதமாகத்
தலையசைத்தபடி நடந்தார். ஒயிட்ஸ் ரோடின் மாலை நேர டிராஃபிக்கில் வாகனங்கள் இரைச்சலுடன்
எங்களைக் கடந்துகொண்டிருந்தன. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.
“ஒரு பத்து நாள் கொடுத்திருப்பானா சார்,
ஜார்ஜ் க்ளூனே இந்தப் படத்துக்கு கால்ஷீட்டு..?”
திடீரென இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவர்,
சமாளித்தபடி, “பத்து நாள் எதுக்கு... ரெண்டே நாள்ல முடிச்சிருப்பானுங்கம்மா... புளூ
மேட் போட்டு ரூமுக்குள்ளயே சுத்த வச்சி எடுத்திருக்கப் போறானுங்க... இதுக்கு இன்னாத்துக்கு
பத்து நாள்..!” எனத் தனக்கே உரிய அலட்சியத்துடன் சொன்னார்.
அதற்குள் சத்யம் பார்க்கிங்கை அடைந்திருந்தோம்.


No comments:
Post a Comment