https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Thursday, February 25, 2010

இங்கொரு நட்சத்திரம் வேண்டும்...


Taare zameen par... இந்த வாசகத்தை நண்பர்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள்... ஆம்.. சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த உலக கவனத்தை இந்திய சினிமாவின் பக்கம் ஈர்த்திருக்கும் ஒரு எளிய ஹிந்தி சினிமாவின் பெயர்தான் அது.

முன்னதாக சிவாஜி, ஓம் ஷாந்தி ஓம் உள்ளிட்ட பல ஜகஜ்ஜால சினிமாக்கள் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளானாலும் ஆண்டின் இறுதியில் வந்த இந்த தாரே ஸமீன் பர் உலக சினிமா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருப்பது உண்மையில் நாம் பெருமை கொள்ள வேண்டிய ஒன்றுதான்.
அமீர்கான் தயாரித்து இயக்கியிருக்கிற இந்தப் படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்டது என்பது இதன் முதல் சிறப்பம்சம். படத்தில் கதாநாயகி இல்லை. அதைவிட, காதலை மையப் படுத்தியோ அல்லது பக்கவாட்டில் ஓரம் கட்டியோ கூட சொல்லாமல் விடுவதால் நடுநிலை சினிமாவுக்கும் ( middle cinema ) ஒரு படி மேலே சென்று இந்தப் படம் அதற்கான முத்திரையோடு தனித்துத் தெரிகிறது.

டைட்டில் கார்ட் தொடங்கும் போது இப்படத்தில் முக்கியப் பாத்திரமேற்று நடித்த சிறுவனின் பெயர்தான் முதலில் வருகிறது. அதன் பின்னரே சுமார் இருபது வருடங்களாக நடித்து இந்தியில் தனக்கெனத் தனி அடையாளம் பெற்ற அமீர்கானின் பெயர் வருகிறது. படத்திலும் இவர் இடைவேளையின் போதுதான் வருகிறார். ஹீரோயின் கிடையாது.. டூயட் கிடையாது... காமெடி டிராக் கிடையாது... வில்லன் கிடையாது.. கிளைமாக்ஸில் சண்டை (குறிப்பாக ரைஸ் மில்லிலோ அல்லது ஏதேனும் மலை, குவாரி, நிலக்கரி சுரங்கம் சார்ந்த பிரதேசங்களிலோ) கிடையாது... இன்னும் சொல்லிக் கொண்டே போக இந்தப் படத்தைப் பற்றிய சிறப்பம்சங்கள் ஏராளம். எல்லாவற்றிற்கும் மேலாக சந்தோஷமான ஒரு செய்தி என்னவென்றால் கடந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களிலும் இதுதான் முதலிடம். கிட்டதட்ட ஓர் ஈரானிய சினிமாவின் மெல்லிய மிகச் சாதாரண கதைக்களம்தான்இங்கொரு நட்சத்திரம் வேண்டும்படத்தின் மையம் என்றாலும் இது சென்றடைந்திருக்கும் விஸ்தாரமான பார்வையாளர்கள் உண்மையாகவே எதிர்கால சினிமாவின் மீது புது வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

சிவாஜி ஐம்பது, தசாவதாரம் நாப்பதுலேருந்து ஐம்பது, ரோபோ நூத்தி இருவது, மர்ம யோகி நூத்தி சொச்சம்... இப்படியாக கோடிகள் இங்கே வாரி இறைக்கப் பட்டுக் கொண்டிருக்க சத்தமே இல்லாமல் ஒரு சில கோடிகளில் தன் படத்தைத் தயாரித்ததோடு அல்லாமல் சிறந்த இயக்குநராகவும் அமீர்கான் இந்தப் படத்தில் தன்னை வெளிப் படுத்தியிருக்கிறார். ஒரு படைப்பாளனாக ஆகும் போது தனக்குள்ளிருக்கும் நடிகனுக்கான தேவை என்ன என்பதை உணர்ந்து மிகச் சரியான விகிதத்தில் - இடைவேளையின் போது கதாப்பாத்திரமேற்று வருவது - ஒரு நடிகனாகத் தன் பங்களிப்பை செலுத்திய விதம் அமீர்கானின் பக்குவப்பட்ட சினிமா நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.

இங்கே கமல்ஹாசன் போன்றோர் கூட இன்னமும், பத்து.. இருபது.. முப்பத்தஞ்சு என அவதாரங்கள் எடுக்க ஆளாய்ப் பறந்து தன்னை தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க அறிவு ஜீவியாகக் காட்டிக் கொள்ளத்தான் முற்படுகிறார்களே தவிர ஒரு எளிமையான சினிமா எடுக்கத் துணிச்சல் இல்லை. அந்த வகையில் அமீர்கானின் பக்குவம் இந்திய சினிமா வரலாற்றில் போற்றத் தக்கது.

கமல்ஹாசன் போன்றவர்கள் தான் இயக்குகிற படங்களில் கூட தனது கதாப்பாத்திரம் தனக்குப் பேர் ஈட்டித் தரும்படியானதாக இருக்க வேண்டும் என்றுதான் இன்னமும் எண்ணுகிறார்களே தவிர அமீர்கானின் தைரியமும் படைப்பின் மீதான அற்பணிப்பும் அவர்களுக்கு சாத்தியமாகவில்லை. சிவாஜியைத் தூக்கிப் போடுகிற வசூலை இந்த சாதாரண, முன் பற்கள் எடுப்பாகத் தெரிகிற, மூன்றாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் ஃபெயிலாகிற, ஒரு நடுத்தரக் குடும்பத்து பள்ளிச் சிறுவன் நடித்த படத்திற்கு மக்கள் அள்ளித் தந்திருக்கிறார்கள் என்றால் கோளாறு பார்வையாளர்களிடம் இல்லவே இல்லை என்பது தெளிவாகிறது.

இறுதியாக ஒரு முக்கியமான வித்தியாசத்தை ஷங்கர் மற்றும் இயக்குநர் அமீர்கான் ஆகியோருக்கு இடையே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
வித்தியாசம்: அந்நியன் அவதரிக்கும் போதும், எலும்புக்கூடு பரத நாட்டியம் ஆடும்போதும், பாடல் காட்சிகளின் போதும், சண்டைக் காட்சிகளில் நெருப்பெரிய அலேக்காக ஒரு ஐம்பது பேரை அந்தரத்தில் நிறுத்திஅஜக்போட்டு ஆடி கதா நாயகன் நின்ற பிறகு அந்த ஐம்பது பேரும் அலறியபடிக் கீழே விழவும்தான் ஷங்கரின் கண்ணுக்குத் தொழில் நுட்பம் தெரிகிறது...

அமீர் கானுக்கோ, சிறுவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் தான் பிடித்த மீன் குஞ்சுகளைத் தன் வாட்டர் பாட்டிலில் பிடித்து விட்டுக் கொண்டு ஸ்கூல் பஸ்ஸில் டிரைவருக்குப் பக்கத்தில் உள்ள பஸ் எஞ்சின் மேல் அமர்ந்த படி அவற்றைப் பார்த்துக்கொண்டு நகர வெளிகளில் பயணிக்கும் போதும், சராசரிக்கும் கீழ் உள்ள அந்த எட்டு வயது சிறுவன் பள்ளியில் தனக்கான ஓவியப் போட்டியில் வண்ணங்களை இழைக்கும் போதும்தான் தோழில் நுட்பம் தேவைப் படுகிறது.
என்ன வித்தியாசம் பாருங்கள்... கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு, இசை என சினிமாவுக்கான பங்களிப்புகளை உண்மையான சினிமாவுக்கான தளத்திலிருந்து பெற்றிருக்கிற அமீர்கான் எளிய நல்ல சினிமாக்களும் வெகுஜனங்களைச் சென்றடையும் என நிரூபித்திருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்குமே புத்துயுர் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல..
இங்கொரு நட்சத்திரம் வேண்டும்படம் பார்த்த நண்பர்கள் அப்படத்தில் அவரவரைக் கவர்ந்த கூறுகளை இங்கே பதியவும்.. இதுவரை பார்க்காத நண்பர்கள் உடனடியாகப் பார்க்கவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

குறிப்பு: எந்த ஒரு படத்திற்கும் விமர்சனப் பத்தி எழுதும் போது அதன் கதையோட்டத்தை விவரிப்பதில் எனக்கு உடன் பாடில்லை என்பதால் நான் கதை சொல்லவில்லை.. காரணம், சினிமா ஒவ்வொரு பார்வையாளனுக்கும் தனித்தனி அனுபவம் தரும் வல்லமையுள்ள ஓர் அதிசய கலை ஊடகம். கதை சொல்வதால் பொதுவழியென்ற ஒன்றைப் பின்தொடர்ந்த மாதிரியான, மேலோட்டமான ஒரு பொது சினிமா அநுபவத்தை நான் தர விரும்பவில்லை.. நன்றி!

1 comment:

Share