
சீனத் திரைப்படமான கெட்டிங் ஹோம் யாங் சாங் இயக்கியது. கடந்த வருடம் வெளியான இத்திரைப்படத்தை கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் கண்டேன். நிழல் என்ற மாற்று சினிமாவுக்கான பத்திரிகையில் கெட்டிங் ஹோம் பற்றி நான் எழுதிய கட்டுரை வெளியாகி இருந்ததையும், இன்னொரு குழுமத்தில் அந்தக் கட்டுரையை பதிப்பித்திருந்ததையும் சிலர் அறிவீர்கள். புதிதாக தொடங்கியிருக்கும் இந்த பக்கத்திற்காக இங்கே பதிவிட்டுள்ளேன்.
யாங் சாங் சீனாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவர். Getting home இவருக்கு ஐந்தாவது திரைப்படம். 1967-ல் பிறந்த யாங் சாங் சீன இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் செண்ட்ரல் டிராமா அகாதெமியில் இயக்கமும் படித்தவர். தற்போது பெய்ஜிங் ஸ்டுடியோவுக்காக இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
ஸாவோவும் லியுவும் ஐம்பதுகளில் உள்ள நண்பர்கள். இருவரும் தங்கள் கிராமத்தை விட்டு பல்லாயிரம் மைல் கடந்து ஷென்சன் நகரில் கட்டிடத் தொழிலாளிகளாக வேலை செய்பவர்கள். ஒரு நாள் அதிகம் குடித்துக் கொண்டிருக்கும்போது லியூ இறந்து போக நண்பன் கொடுத்த சத்தியத்திற்காக அவன் உடலை எப்படி பல்லாயிரம் மைல் கடந்து சொந்த கிராமத்திற்கு ஸாவோ கொண்டு சேர்க்கிறான் என்பதே Getting home.
முதல் காட்சியிலேயே நண்பன் இறந்து போவதால் கதையோட்டத்தில் உருக்கமான காட்சிகளை நாம் இயல்பாகவே எதிர்பார்ப்போம். ஆனால், அடுத்தடுத்த காட்சிகளில் எள்ளலான நடையுடன் அதே நேரம் ஆழமான கேள்விகளுடன் திரைக்கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார்கள். இறந்து போன லியூவிற்கு கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் போட்டுவிட்டு பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமரச் செய்கிறான் ஸாவோ. போதையில் நண்பனின் உடலைப் பார்த்து பேசியபடி வர சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்து ஓரிடத்தில் சாலையோரமாக நிற்கிறது. நடத்துனர், ஆண்கள்லாம் இடதுபுறம்.. பெண்கள்லாம் வலது புறம்.. என உறத்துச் சொல்ல அனைவரும் அவர் சொன்னபடி பேருந்தை விட்டு இறங்குகிறார்கள். லியூ கறுப்புக் கண்ணாடியுடன் ஜன்னலில் சாய்ந்திருக்க ஒரு முறை பார்த்துவிட்டு ஸாவோவும் இறங்கிச் செல்கிறான். ஆண்கள் இடதுபுறமும் பெண்கள் வலது புறமுமாகச் சென்று சிறுநீர் கழிக்கத் தொடங்குகிறார்கள். பெண்கள் போன ஜன்னலின் பக்கம் லியூ தலை சாய்த்திருக்க, அதைப் பார்க்கிற ஒரு பெண் அவன் நம்மைப் பார்க்கிறான் என சத்தம் போடுகிறாள்.
உடனே அனைவரும் கூட்டமாகக் கூடி பேருந்தில் ஏற ஸாவோ பதற்றத்துடன் அங்கு வருகிறான். “நீங்க நினைப்பது போல இல்ல... என் நண்பன் உங்களைப் பாக்க மாட்டான். அவன் தூங்கிக்கிட்டிருக்கான்” என்கிறான். கூட்டத்திலிருந்து ஒரு பெண் முன்னால் வந்து “பொய் சொல்லாத... உன் நண்பன் நான் சிறுநீர் போறதைப் பார்த்து சிரிச்சான்” என்கிறாள். ஸாவோ அதிர்ச்சியடைந்து லியூவைப் பார்க்க அப்பாவியாய் லியூ ஜன்னலில் தலை சாய்த்தபடி கிடக்கிறான். கூட்டத்தினர் தொடர்ந்து கலாட்டா செய்யவும் லியூ அதிகம் குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லி சமாளிக்கிறான். பேருந்து அங்கிருந்து நகர்ந்து செல்கிறது.
வழிப்பறிக் கும்பலொன்று அந்த பேருந்தை மறித்து நகை, பணம், ஆகியவற்றை ஒவ்வொருவரிடமிருந்தும் பிடுங்குகிறது. கடைசியாய் ஸாவோவிடம் வந்து மிரட்டுகிறார்கள். ஸாவோ தன்னிடமிருப்பதைக் கொடுக்க அருகில் இருக்கிற லியூவைப் பார்த்து “தூங்குவது போல நடித்தது போதும்... மரியாதையா இருப்பதைக் கொடுத்துவிடு” என்கிறார்கள். ஸாவோ வேறு வழியின்றி “அவன் விழிக்க மாட்டான். ஏன்னா இறந்துட்டான்” என்று சொல்ல வழிப்பறித் தலைவன் அதிர்ச்சியுடன் லியூவைப் பார்க்கிறான். ஸாவோவின் நிலையைக் கேட்டு மனமிறங்குகிற வழிப்பறிக்காரர்கள் இறுதியில் கொள்ளையடித்த மொத்த பணத்தையும் ஸாவோவிடமே கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். பேருந்து பயணத்தை தொடரவும் மெல்ல ஒவ்வொருவராக வந்து ஸாவோவின் மடியில் கிடக்கிற பர்ஸ், செல்போன் ஆகியவற்றை எடுத்துச் செல்கிறார்கள். சிறிது தூரம் கடந்த பிறகு பிணத்துடன் பயணம் செய்ய முடியாது என சக பயணிகள் நடத்துனரிடம் புகார் சொல்ல ஸாவோவும் லியூவும் நடுவழியில் இறக்கிவிடப் படுகிறார்கள். நண்பனின் உடலை முதுகில் சுமந்துகொண்டு நடக்கத் தொடங்குகிறான் ஸாவோ.
வழியில் ஒரு பயணியர் விடுதியில் இரவு தங்குகிறார்கள். லியூவுக்கு போர்வை போர்த்திவிடுகிற ஸாவோ, லாரி டிரைவர் ஒருவன் தனியாக அமர்ந்திருப்பதைக் கண்டு அவனிடம் சென்று பேச்சு கொடுக்கிறான். தங்களுக்கு லிஃப்ட் தந்து உதவ முடியுமா எனக் கேட்க அவன் முடியாதெனச் சொல்லி மௌனமாகிறான். “ நீ ஏதோ பிரச்சினையில் இருக்கிறாய். இதைக் கொஞ்சம் குடி சரியாகிவிடும்” என தன்னிடமிருந்த மது பாட்டிலைக் கொடுக்க டிரைவர் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்துவிடுகிறான். ஸாவோ டிரைவரை சிறிது நேரம் பார்த்துவிட்டு மெதுவாக மீண்டும் லிஃப்ட் கேட்கிறான்.
டிரைவர் ஸாவோவைப் பார்த்துவிட்டு முடியவே முடியாது என்று சொல்லி போர்வையைப் போர்த்திக் கொண்டு படுக்க “ஒரு பாட்டில் மது வீண்” எனப் புலம்பியபடி தன் படுக்கைக்கு வருகிறான். அன்றிரவு ஸாவோவின் சட்டைப் பையிலிருக்கிற பணத்தை யாரோ திருடி விடுகிறார்கள். காலை இது குறித்து பிரச்சினை எழ போலீசைக் கூப்பிடுங்கள் என்று சத்தம் போடுகிறான் ஸாவோ. யாரோ ஒருவர் முன்வந்து “இந்தா.. கூப்பிடு போலீசை” என செல்போன் கொடுக்க ஸாவோவுக்கு அப்போதுதான் உறைக்கிறது விதிக்குப் புறம்பாக நாம் ஒரு பிணத்தை எடுத்துச் செல்கிறோம் போலீஸ் வந்தால் சிக்கல் என்று. ஸாவோ பின் வாங்க மற்றவர்கள் எங்களுக்குத் திருட்டுப் பட்டம் கட்டப் பார்க்கிறாயா என பிரச்சினையைப் பெரிது படுத்துகிறார்கள். ஒரு வழியாகச் சமாளித்து நண்பன் லியூவை முதுகில் சுமந்தபடி வெளியேறி நடக்க ஆரம்பிக்கிறான். அருகில் ஒரு லாரி வந்து நிற்கிறது. உள்ளே இரவு சந்தித்த டிரைவர் அமர்ந்திருக்கிறான். லியூவைப் பின்னால் ஏற்றிப் படுக்க வைத்துவிட்டு டிரைவருக்குப் பக்கத்தில் ஸாவோ அமர்ந்து கொள்கிறான். வண்டி புறப்படுகிறது. முந்தைய இரவு ஸாவோவின் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்தது அந்த டிரைவர்தான் என்பதை suggestive-ஆகக் காட்டியிருந்தது இங்கே குறிப்பிட வேண்டியது.
ஸாவோ பேசிக் கொண்டே வர ஓரிடத்தில் தன் பழைய காதலியைப் பற்றிச் சொல்லி அழுகிறான் டிரைவர். “இதை நினைச்சுதான் நேத்து உம்முனு இருந்தியா” எனக் கேட்கிற ஸாவோ அவனுக்கு ஆறுதல் சொல்கிறான். டிரைவர் திருடியிருந்தாலும் அவனுக்குள் இருக்கிற மனிதத் தன்மையை அழகாக இந்தக் காட்சியில் வெளிப்படுத்தியிருப்பார்கள். சாலை இரண்டாகப் பிரிகிற மலை சார்ந்த சந்திப்பில் ஸாவோவும் அந்த டிரைவரும் பிரியா விடை பெறுகிறார்கள். மாலை நேரச் சூரியனை நோக்கிச் செல்கிற சாலையில் பிரிவை உணர்த்துகிற பின்னணி இசையுடன் முதுகில் லியூவின் உடலைச் சுமந்து கொண்டு தனியாக நடக்கத் தொடங்குகிறான் ஸாவோ.
கிராமம் ஒன்றின் விவசாய நிலங்களைக் கடந்தபடி அவ்வப்போது கடந்து செல்லும் வாகனங்களிடம் கை காட்டுகிறான். எந்த வண்டியும் நிற்காமல் செல்கிறது. யாரோ ஒரு ஆள் பழுதடைந்த தன் காரின் பானட்டைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்க அவரிடம் சென்று “நீங்க ஸ்டார்ட் பண்ணிப் பாருங்க.. நான் வண்டியைப் பின்னாலிருந்து தள்ளி விடறேன்” என்கிறான். கார்காரன் சம்மதித்து ஸாவோவுக்கு லிஃப்ட் தருவதாகவும் உறுதியளிக்கிறான்.
சிரமப்பட்டு ஸாவோ தள்ளிவிட சிறிது தூரத்தில் கார் ஸ்டார்ட் ஆகிறது. ஆனால் நிற்காமல் சென்றுவிடுகிறது. சோர்வடைந்த ஸாவோ திரும்பிப் பார்க்க சாலையோரத்தில் படுத்துக் கிடக்கிறான் லியூ.
எதிரே கிராமத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் இசைக் கருவிகளை வாசித்துக் கொண்டும் இறுதி ஊர்வலம் ஒன்றிற்கு தேவையான பொருட்கள், விளக்குகள், எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். வயல்வெளிகளில் சோளக் கொல்லை பொம்மைகளைப் பார்க்கிற ஸாவோவுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. லியூவை இழுத்துச் சென்று, ஒரு பொம்மையைப் போல உடையை மாற்றி, வைக்கோல் வைத்து, முட்டுக் கொடுத்து, நிற்க வைக்கிறான். பிறகு அந்த இறுதி ஊர்வலக் குழுவினருடன் அவனும் சேர்ந்து கொள்கிறான். சோளக் கொல்லை பொம்மையாக மாறிய லியூவின் உடல் சாலையை வெறித்தபடி நிற்கிறது.
கிராமத்து பெரியவர் போன்ற தோற்றமுடைய நபர் சவப் பெட்டியில் கிடத்தப் பட்டிருக்க சுற்றிலும் பெண்கள் ஒப்பாரி வைத்து அழுகின்றனர். தலை மாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருக்க கிராம மக்கள் ஒவ்வொருவராக வந்து தீபம் வைத்து வணங்குகிறார்கள். வணங்கியவர்கள் சற்றுத் தள்ளிச் சென்று மண்டி போட்டமர்ந்து தலையால் மண் தொட்டுத் தொட்டு அழுதபடி இருக்கிறார்கள். வரிசையில் வருகிற ஸாவோ கிடத்தப்பட்டிருக்கிற முதியவரை ஒரு முறை பார்த்துவிட்டு தீபம் வைக்கிறான். ஒப்பாரி வைப்பவர்களுக்கு மத்தியில் மெல்லச் சென்றமர்ந்து போலியாக அழ ஆரம்பிக்கிறான். ஒரு கட்டத்தில் ஸாவோவின் துன்பம் மிகுந்த ஒப்பாரியைக் கண்டு சிலர் வந்து ஆறுதல் கூறி அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.
அன்றிரவு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு உணவளிக்கப் படுகிறது. ஸாவோ தனியாக அமர்ந்து பசி வேகத்தில் கிடைத்தவற்றையெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவன் எதிரே யாரோ வந்து அமர்கிறார்கள். வாயில் உணவுடன் நிமிர்ந்து பார்க்கிற ஸாவோ அதிர்ச்சியடைகிறான். அன்று மாலை சவப்பெட்டியில் கிடத்தப் பட்டிருந்த அதே பெரியவர் எதிரே அமர்ந்திருப்பது கண்டு பயந்து போய் சுற்றிலும் பார்க்கிறான். அவரவர் வேலையைச் செய்து கொண்டிருக்க பெரியவர், “பயப்படாத.. நாந்தான்.. நீ ஒப்பாரி வைத்து அழுதது எனக்காகத்தான்.” என்கிறார். தொடர்ந்து, தான் ஒரு தனிக்கட்டை என்றும் நிறைய சொத்துக்கள் இருந்தும் யாரும் தனக்கு இல்லை என்பதால் தானே இப்படி ஒரு ஏற்பாடு செய்து தனக்காக ஊர் மக்கள் அழுவதைப் பார்க்க ஆசைப்பட்டதாகவும் சொல்கிறார்.
ஸாவோ புரியாமல் திகைக்க, “ அங்க சாப்பிட்டிக்கிட்டிருக்கவங்கள்லாம் பணத்துக்காக அழுதாங்க... ஆனா, நீதான் உண்மையா அழுத... உன் ஒப்பாரியைக் கண்டு எனக்கே சங்கடமா இருந்தது” என்கிறவர் அருகில் வந்து “ நீ யாருப்பா... எந்த வகையிலயாவது எனக்கு தூரத்து சொந்தமா” எனக் கேட்கிறார். இல்லை எனத் தலையசைக்கிற ஸாவோ, உணவுக்காகத்தான் அப்படி செய்ததாகச் சொல்லி மன்னிப்புக் கேட்கிறான். பெரியவர் அவனைத் தனியே அழைத்துச் சென்று முழு விவரமும் கேட்டறிகிறார். நண்பனின் உடலை அங்கே எடுத்து வரும்படிச் சொல்கிறார்.
இரவு நேர பூச்சிகளின் சத்தத்துக்கு நடுவே சோளக் கொல்லை பொம்மைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கிறான். எது லியூ என்பதில் அவனுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தேடித் தேடிச் சலிப்புறுகிற ஸாவோ மெல்ல லியூ என கூப்பிட்டுப் பார்க்கிறான். லியூ.. லியூ.. என கூப்பிட்டபடி வரப்பில் நடப்பவனை கதிர்களுக்கு நடுவே சாய்ந்து கிடக்கும் அந்த உடல் இடறுகிறது. “லியூ..” என அழைத்து மெல்லத் தூக்கிக் கொண்டு முதியவர் வீட்டுக்கு வருகிறான். முதியவர் தன் இறுதிச் சடங்கிற்காக வாங்கி வந்திருந்த வாசனைத் திரவியத்தை லியூவின் மீது பூசச் சொல்லிக் கொடுக்கிறார். பிறகு முதியவரின் வேண்டுகோளை ஏற்று இரவு அங்கே ஓய்வெடுக்கிறான் ஸாவோ.
அதிகாலையில் லியூவைப் போட்டு இழுத்துச் செல்ல ஒரு இழுவை வண்டியை தருகிறார் முதியவர். ஸாவோ அவரிடம் விடை பெற்று வண்டியை இழுத்துக் கொண்டு நடக்கத் தொடங்குகிறான். மலை சார்ந்த பகுதிகளில் சிரமப் பட்டு இழுத்துச் செல்கையில் சைக்கிளில் வரும் ஒரு இளைஞன் உதவுகிறான். மலைப் பிரதேசங்களை சைக்கிளில் சென்று பார்ப்பதும் பயணிப்பதும் தனக்கு பிடித்தமானது என்று சொல்கிற அந்த இளைஞன் ஸாவோவுக்கு பிடித்தமானவன் ஆகிறான். இருவரும் ஒரு மலை முகட்டில் அமர்ந்து தேநீர் சுட வைத்து அருந்துகிறார்கள். சற்று தள்ளி தனியே கிடத்தப் பட்டிருக்கிற லியூ சலனமற்றுக் கிடக்கிறான்.
ஒரு கட்டத்தில் சைக்கிள் இளைஞன் “பின்பொரு நாள் சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்” என்று சொல்லி ஸாவோவிடமிருந்து விடைபெற்றுச் செல்ல தனிமையில் தொடர்கிறது பயணம்.
மலை இறக்கம் ஒன்றில் பாலன்ஸ் செய்ய முடியாமல் வண்டியை விட்டுவிட, மரத்தாலான அது பாறை ஒன்றில் மோதி உடைந்து போகிறது. ஸாவோ மெல்லச் சென்று ஓரிடத்தில் அமர்கிறான். சுருண்டு விழுந்து கிடக்கும் லியூவைப் பார்க்கிறான்.
தூரத்தில் புல்டோசர் ஒன்று விபத்தில் நொறுங்கிக் கிடக்க அருகில் அதன் டிரைவர் காயங்களுடன் டயர் ஒன்றின் மேலமர்ந்தபடி புகைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். “ நம்மள விட மோசமால்ல அடி வாங்கிருக்கான்” என முனகிக் கொண்டே அவனை நோக்கி எழுந்து செல்கிறான் ஸாவோ. டிரைவரின் அருகே வந்தமர்ந்தவன் சிகரெட் ஒன்றை கேட்டுப் பெறுகிறான். புகைத்தபடியே “உங்களுக்குப் பயன் படலைன்னா நான் இதை எடுத்துக்கலாமா” என்று பெரிய சைஸ் டயர் ஒன்றைச் சுட்டிக்காட்டித் தயக்கத்துடன் கேட்க, டிரைவர் சில விநாடிகள் மௌனமாகப் பார்க்கிறான்.
லியூவின் உடலை அந்த பெரிய சைஸ் டயரின் உள்பக்கம் வைத்து கயிற்றால் வெளியே விழுந்துவிடாதபடிக் கட்டுகிறான். பிறகு அந்த டயரை சாலையில் உருட்டிக் கொண்டே நடக்கிறான். சரிவுகளில், மேடுகளில் ஸாவோ டயருடன் நடத்தும் போராட்டம் நகைப்புக்குரிய வகையில் படமாக்கப் பட்டிருந்தது. ஓரிடத்தில் பள்ளமொன்று வருவதை ஸாவோ கவனிக்காமல் போகவும் டயர் வேகமாக உருள ஆரம்பிக்கிறது. பின்னால் துரத்திக் கொண்டே ஓடி வருகிறான். இறக்கத்தில் டயரின் வேகம் அதிகரித்து பள்ளத்தாக்கு போல உள்ள சரிவில் உருண்டு விழுகிறது. சிரமப் பட்டு அந்த இடத்தை அடைகிற ஸாவோ டயரிலிருந்து வெளியே விழுந்து கிடக்கிற லியூவைப் பார்த்து, “ நீயா இருந்ததால தப்பிச்ச... வேற யாரும்னா இந்நேரம் செத்திருப்பாங்கப்பா ” என்று சொல்வது எதார்த்தமும் ஆழமும் செறிந்த நகைச்சுவையின் உச்சம். தன் ஷு பிய்ந்து போயிருப்பதைப் பார்க்கிற ஸாவோ, அதைக் கழற்றி எறிந்துவிட்டு, “உனக்கு இது தேவை இல்ல” என்றபடி லியூவின் காலில் இருக்கிறதை உருவி எடுக்கிறான். அப்போதுதான் லியூ தன் ஷூவின் கீழ்ப்பாகத்தில் சில கரன்சி நோட்டுகள் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்கிறான். சிரித்துக் கொண்டே ஸாவோ, “ எனக்குத் தெரியாம மறைச்சு வேற வச்சிருக்கியா.. உன் மேல இருந்த மரியாதையே போச்சு..” என்கிறான்.
கிடைத்த பணத்தை வைத்து எப்படியாவது பேரம் பேசி ஒரு வேன் பிடித்து ஊர் போய்ச் சேரலாம் என்ற முடிவுக்கு வருகிற ஸாவோ அருகே இருக்கிற ஷெட்டிற்குச் சென்று பேரம் பேசுகிறான். இறுதியாக ஒரு தொகைக்கு பேரம் படிய பசியில் இருக்கிற ஸாவோ சாப்பிட சாலையோர கடை ஒன்றிற்குச் செல்கிறான். வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு வேன் வாடகை அளவுக்கு ஒரு பில்லைக் கொண்டு வந்து உணவகத்தின் முதலாளி நீட்ட அங்கே பிரச்சினையாகிறது.
வழியின்றி லியூ தன் குடும்பத்தாரிடம் கொடுத்துவிடச் சொல்லிக் கொடுத்திருந்த பணத்திலிருந்து பில்லைக் கொடுக்க வேண்டியதாகிறது. இருந்தும் கொடுத்தது போலி கரன்ஸி என்று சொல்லி சண்டையிடுகிற உணவு விடுதிக் கும்பல் ஸாவோவை மிரட்டி வாந்தியெடுக்கச் செய்கிறது. தாங்கள் வேலை செய்த கட்டிட முதலாளி கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்றியிருப்பதை ஸாவோ அதன் பிறகே உணர்கிறான். கள்ள பணத்தை தீயிட்டு எரித்தபடியே, ‘லியூ, குடும்பத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பெருந்தொகையை இப்படி ஏமாற்றி விட்டார்களே’ என்ற வேதனையுடன் அழுகிறான். கறுப்புக் கண்ணாடியனிந்த லியூ எந்த சலனமும் இன்றி படுத்திருக்கிறான்.
உடலாலும் மனசாலும் சோர்ந்து போயிருக்கிற ஸாவோ ஒரு முடிவு செய்கிறான். நண்பனின் உடலைப் புதைத்துவிடலாம். இனிமேலும் சுமந்து செல்வதில் அர்த்தம் இல்லை என உணர்ந்து கையில் கிடைத்தவற்றை வைத்து குழி தோண்டுகிறான். ஓரளவுக்கு தோண்டிய பிறகு அளவு சரியாக இருக்கிறதா எனப் பார்க்க தானே படுத்துப் பார்க்கிறான். மேலே வெண் மேகங்களுக்கிடையே நீலவானம் தெரிய, “இங்க படுத்திருப்பது எவ்வளவு நிம்மதியா இருக்கு” என்கிறான். திடீரேனத் தானும் செத்துவிட்டால் என்ன. நாம் இருந்து என்ன செய்யப் போகிறோம் என யோசிப்பவன், பெரிய கல் ஒன்றை எடுத்து கயிற்றில் கட்டி நீளமாக விட்டுக் கயிற்றின் மறுமுனையை மரத்தில் கட்டுகிறான். ஊஞ்சல் போல அதை வேகமாகத் தள்ளிவிட்டுத் திரும்ப வரும்போது எதிரே தலை காட்டுகிறான். கல் அருகில் வரவர பயத்தில் விருட்டென குனிந்து கொள்கிறான். பயத்திலிருந்து மீண்டு பெருமூச்சு விட பின்னால் சென்ற கல் திரும்பி வந்து அவன் முதுகில் பலமாகத் தாக்குகிறது. ஸாவோ மயக்கமடைகிறான்.
கண் விழித்துப் பார்க்கையில் அது ஒரு பண்ணை வீடு போலத் தெரிகிறது. ஒரு ஆணும் முகத்தைத் திரையிட்டு மறைத்துக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் இருக்கிறார்கள். ஸாவோ எழுந்ததைக் கண்டு அவனை உணவுக்கு அழைக்கிறார்கள். “ உங்க நண்பர் இங்கேதான் பின்னால படுத்திருக்கார் ” என்று அந்த பண்ணை வீட்டைச் சேர்ந்தவன் சொல்ல ஸாவோ பார்க்கிறான். அவர்களின் கனிவான உபசரிப்பும் உணவு வகைகளும் ஸாவோவை ஆசுவாசப் படுத்துகிறது. முகத்திரயை விலக்காமலே சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்தப் பெண்ணைப் பார்க்கிற ஸாவோ, தயக்கத்துடன், “ உங்க மனைவி ஏன் முகத்தை மூடியிருக்காங்க” என்று கேட்கிறான். உடனே கணவன் மனைவியிடம் “ பரவாயில்ல.. முகத்திரையை எடு” என்கிறான்.
அவள் தயக்கத்துடன் தன் முகத்திரையை விலக்குகிறாள். முகத்தின் ஒரு பகுதி முழுவதும் தீக்காயத் தழும்புகள். “ ஒரு விபத்துல இப்படி ஆகிடுச்சு.. அதுக்குப் பிறகு யாருக்குமே இவளைப் பிடிக்கலை.. ஊர்ல எல்லாரும் பயந்தாங்க.. ஏன் குழந்தைங்களே அவளைப் பாத்து பயந்தாங்கன்னா பாருங்க... நான் இவளைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னால இவளை விட்டுக் கொடுக்க முடியலை.. அதான்.. சொந்த பந்தம், ஊர்க்காரங்க, எல்லாத்தையும் விட்டுட்டு இங்க தனியா வந்து வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.. இப்ப எங்களுக்கும் தொந்தரவு இல்ல.. எங்களால மத்தவங்களுக்கும் பிரச்சினை இல்ல ”, என்கிறார் அந்தப் பெண்ணின் கணவர். ஸாவோ உணர்ச்சி வசப்பட்டவனாய் அந்தப் பெண்ணைப் பார்க்க, “ சாப்பிடுங்க” என்கிறாள் அவள்.
உணவிற்குப் பிறகு பண்ணை வீட்டைச் சேர்ந்த சிறுவன் சந்தோஷமும் இயற்கையின் மீதான வர்ணனைகளும் கொண்ட ஒரு கவிதையை தன் பாடப் புத்தகத்திலிருந்து வாசிக்கத் தொடங்க ஸாவோ விடை பெற்றுப் புறப்படுகிறான். பண்ணை வீட்டுக்காரன் தன் லாரியில் ஸாவோவை ஏற்றிக் கொண்டு வந்து நகர எல்லையில் விடுகிறான். கட்டாயப் படுத்தி சிறிது பணமும் தருகிறான். ஸாவோ நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க விடை பெற்றுப் புறப்பட்டுச் செல்கிறான்.
தொடர்ந்து வாட்டும் பசியால் துன்புறுகிற ஸாவோ லியூவின் உடலை வைத்துப் பிச்சை பெறுகிறான். இரவில் பெரிய சைஸ் சிமெண்ட் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற ஓரிடத்தில் லியூவைப் பதுக்கி வைக்கிறான். மறுநாள் நடமாடும் மருத்துவமனை ஒன்றில் ரத்தம் கொடுத்துப் பணம் வாங்க முயற்சிக்கிறான். ஸாவோவுக்கு முன்னதாக காச நோய் வந்து போயிருப்பதால் ரத்தம் கொடுக்கத் தகுதியற்றவன் என நிராகரிக்கப் படுகிறான். அங்கிருந்து ஏமாற்றத்துடன் வெளியே வருகிறவனை ஒரு நபர் ரத்தம் விற்க தான் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லி அழைத்துச் செல்கிறார். அது ஒரு நிழல் உலகம். சட்டத்திற்கு புறம்பாக ரத்தம் சேகரித்து விற்கும் இடம். பிச்சைக்காரர்களும் வறுமையில் உழல்பவர்களும் வரிசையாக ரத்தம் கொடுக்க காத்திருக்கிறார்கள். அங்கே ஒரு நடுத்தர வயதுப் பெண்ணைச் சந்திக்கிறான். அவள் சாலையோரங்களில் பிளாஸ்டிக் குப்பைகளைப் பொறுக்கி விற்றுப் பிழைப்பு நடத்துபவள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள். அருவருப்புடன் சற்று தள்ளியே அமர்ந்திருக்கிறான் ஸாவோ. அவன் முறை வரும்போது திடீரென போலீஸ் வந்து அந்த இடத்தையும் நபர்களையும் கைப் பற்றுகிறது.
\சிறுவர் சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை பல்வேறு வயதுகளில் உள்ள பிச்சைக்காரர்களுடன் ஸாவோவும் அந்த நடுத்தர வயதுப் பெண்ணும் நிவாரண முகாம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள். அனைவருக்கும் அங்கே உணவு தரப்படுகிறது. குளித்த பிறகு ஆடைகள் வழங்கப் படுகிறது. இரவு அவர்களாக முன்வந்து சில கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்து தருகிறார்கள். ஸாவோவும் அந்த நடுத்தர வயதுப் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் பல்குரல் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடித்தமானதாகப் போக இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.
அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் முகாமுக்கு வெளியே ஸாவோவும் அந்தப் பெண்ணும் பேசிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்கிறார்கள். தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அவன் தன்னை இப்போது உதாசீனப் படுத்துவதாகவும் அப்பெண் சொல்கிறாள். ஸாவோ அவளைத் தேற்றுகிறான். ஸாவோ பற்றி அப்பெண் கேட்க லியூவைப் பற்றியும் அவன் நோக்கத்தையும் சொல்கிறான். அதுவரை சொல்லிடாத ஓர் உண்மையை ஸாவோ அந்தப் பெண்ணிடம் சொல்ல ஆரம்பிக்கிறான். “ லியூ என் நெருங்கிய நண்பன். ஒருவேளை நான் இறந்து போய்ட்டா என்னை ஊர் கொண்டு போய் சேக்கறது அவன் பொறுப்புன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்திருந்தான். ஆனா, அவன் முந்திக்கிட்டான். இப்போ அவன் இடத்திலேருந்து நான் அவன் சத்தியத்தை காப்பாத்த முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்.. எப்படியாவது அவன் சொந்த கிராமத்துல இறுதிச் சடங்கு செஞ்சிட்டா என் நண்பனோட சத்தியம் காப்பாத்தப்பட்டிரும்..” என அவன் தொடர்ந்து சொல்ல மனசை வருடும் பின்னணி இசை அந்தக் காட்சியை உருக்கமானதாக ஆக்குகிறது. ஸாவோவின் துயரம் கேட்டு அந்தப் பெண் உணர்ச்சி வசப்பட்டவளாகத் தன் சட்டைப் பைக்குள்ளிருந்து எதையோ எடுக்கிறாள். ரத்தம் கொடுத்ததில் தனக்கு கிடைத்த சொற்ப பணத்தை ஸாவோவிடம் கொடுத்து வழிச் செலவுக்கு வைத்துக்கொள்ளுமாறு சொல்கிறாள். அவன் வாங்க மறுக்கிறான். அவள் கட்டாயப் படுத்தவும் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு, “ நான் ஊருக்குப் போய்ட்டு திரும்ப வந்திடறேன்.. எனக்காகக் காத்திருப்பியா” எனக் கேட்கிறான். கண் கலங்குகிற அந்தப் பெண் சம்மதித்து அவன் கரம் பிடிக்கிறாள்.
மறுநாள் லியூவை ஒளித்து வைத்த இடத்தில் போய்த் தேடுகிறான். அங்கிருந்த சிமெண்ட் குழாய்கள் எடுத்துச் செல்லப் பட்டிருக்க கார்பரேஷன் வேலை நடைபெறும் இடத்திற்குச் செல்கிறான்.
லியூவை ஒரு குழாய்க்குள் கண்டுபிடித்து அவ்வழியே செல்கிற டிரக்கில் பயணத்தைத் தொடருகிறான். டிரக்கின் மேல் பகுதியில் அமர்ந்தபடி எதிர்ப்படுகிற காற்றுக்கு கைகள் நீட்டி உரத்த குரலில் பண்ணைச் சிறுவன் படித்த கவிதையைச் சொல்கிறான். சந்தோஷமும் இயற்கையைப் பற்றிய வர்ணனைகளும் கொண்ட அந்தக் கவிதை ஸாவோவின் குதூகலமான குரலில் காற்றெங்கும் கலக்கிறது.
டிரக் வண்டிக்காரன் ஓரிடத்தில் இறக்கிவிட தொடர்ந்து லியூவை முதுகில் சுமந்தபடி நடக்கத் தொடங்குகிறான். வழியில் வரும் வண்டிகளிடம் லிஃப்ட் கேட்க எதுவும் நிற்காமல் செல்கிறது. கடைசியில் பேருந்து ஒன்று ஸாவோவைப் பார்த்து நிற்க, வேகமாக அருகில் செல்கிறான். பேருந்து முழுவதும் பள்ளிக்கூட பிள்ளைகள் இருப்பதைப் பார்க்கிற ஸாவோ லியூவுடன் அதில் ஏறுவது சரியல்ல என உணர்ந்து போகச் சொல்கிறான்.
வேர்த்து வழிய மூச்சு வாங்கியபடி தொடர்ந்து நடக்கவும் ஸாவோவுக்கு லிஃப்ட் கொடுக்காமல் சென்ற வாகனங்கள் எல்லாம் ஓரிடத்தில் போக்குவரத்து தடைப்பட்டு வரிசையாக நிற்கின்றன. அவன் வேகமாக முன்னேறிச் செல்கிறான். கடந்து சென்ற வாகனங்கள் வழிக்காக காத்திருக்க ஸாவோ நடந்து கொண்டே இருக்கிறான். அந்தப் பள்ளிக்கூட பேருந்தைத் தாண்டுகையில் உள்ளிருந்து ஒரு சிறுவன் “அங்கிள்” என அழைத்து தண்ணீர் பாட்டிலொன்றை நீட்டுகிறான். ஸாவோ வாங்கிக் குடித்துவிட்டு நடக்கிறான். முன்னால் அந்த மலைப் பாதையில் நிலச் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தட்டுத் தடுமாறி ஸாவோ அதைக் கடக்க முயற்சிக்கும் போது சோர்வின் காரணமாக மயங்கி விழுகிறான்.
ஸாவோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்க சில போலீஸ்காரர்கள் அவனைச் சுற்றியிருக்கிறார்கள். நினைவு திரும்பியதும் ஒரு மூத்த போலீஸ்காரர் பேச வருகிறார். “ இறந்த உடலை டிஸ்போஸ் செய்வதற்கான சட்ட திட்டங்கள் இருக்கு... நீங்க அதை மீறி இருக்கீங்க.. ஷான்சென் நகரில் நீங்க வேலை பார்க்கிற இடத்தில் உங்க விவரங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டொம்.. விதிக்கு புறம்பா நீங்க நடந்திருந்தாலும் உங்க நோக்கம் நியாயமானது. ஆனா, உங்க நண்பரின் உடலை இப்போ டிஸ்போஸ் செய்துதான் ஆகணும்...” என அந்த போலீஸ் அதிகாரி சொல்ல ஸாவோ மௌனமாக இருக்கிறான்.
ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் அஸ்தி எடுத்துச் செல்வதற்கான பெட்டி வாங்க ஸாவோவும் அந்த போலீஸ் அதிகாரியும் வருகிறார்கள். ஸாவோ தேர்ந்தெடுக்கும் பெட்டிகள் விலை உயர்ந்ததாக இருக்க மலிவான பெட்டிகள் உண்டா என விசாரிக்கிறான்.
அதை விடக் குறைந்த விலைக்கு கிடைக்காது என அங்கிருக்கிற சேல்ஸ் கேர்ள் சொல்ல செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறான். சற்று தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிற போலீஸ்காரர் அருகில் வந்து தானே பணம் கொடுத்து ஒரு பெட்டியை வாங்கித் தருகிறார்.
ஸாவொ சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருக்க அவனுக்குப் பின்னால் மின்சார சுடுகாட்டுப் புகை போக்கியிலிருந்து குபுகுபுவென புகை கிளம்புகிறது. முரம் போன்ற உபகரணத்தில் லியூவின் எஞ்சிய எலும்புத் துண்டுகளையும் சாம்பலையும் புதிதாக வாங்கிய அஸ்திப் பெட்டியில் சேகரிக்கிறான். நண்பன் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற முடியாமல் தோற்றுவிட்டோமோ என்ற கலக்கம் அவனிடம் இருக்கிறது.
போலீஸ் அதிகாரி ஸாவோவை அழைத்துக் கொண்டு லியூவின் கிராமத்திற்கு அஸ்தியுடன் செல்கிறார். போலீஸ் ஜீப்பின் பின் சீட்டில் அமர்ந்திருக்கிற ஸாவோ தன் மடியில் உள்ள அஸ்திப் பெட்டகத்தைப் பார்த்துக் கொண்டே செல்கிறான். அவர்கள் ஒரு நதியைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதால் ஜீப்பை விட்டுவிட்டு படகில் ஆற்றைக் கடக்கிறார்கள். படகோட்டி, “இப்போதான் இந்த ஆறு அமைதியா ஓடிக்கிட்டிருக்கு.. போன மாசம்லாம் இப்ப இருக்கிறதை விட மூணு மடங்கு வெள்ளப் பெருக்கு.. ஆத்தங்கரைல இருந்தவங்கள்லாம் காலி பண்ணிட்டு வேற இடம் போயிட்டாங்க” என்கிறான்.
ஸாவோவும் போலீஸ்காரரும் லியூவின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து வருகிறார்கள். லியூவின் வீடு இடிந்து தரைமட்டமாகி இருக்க நிலை வாசல் மட்டும் யாரையோ எதிர்பார்த்து நிற்பது போல தனியாக நிற்கிறது. ஒன்றும் புரியாமல் ஸாவோ தன் கையிலிருக்கிற அஸ்திப் பெட்டியுடன் அந்த நிலைவாசலைக் கடந்து வருகிறார். சுற்றிலும் பார்த்துவிட்டு கீழே பெயர்ந்து கிடக்கிற நிலைக் கதவைப் பார்க்கிறான். அதில் வாசகங்கள் தென்படவும் துடைத்துவிட்டுப் பார்க்கிறான். ‘அப்பா.. உங்களுக்கு கடிதம் போட்டோம்.. இதுவரை பதில் இல்லை.. நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாது.. வெள்ளத்தால போன மாசம் இந்த வீட்டை காலி பண்ண வேண்டியதாயிட்டுது.. நீங்க வந்தா இந்த முகவரிக்கு வாங்க..’ என லியூவின் மகன் எழுதி வைத்த வரிகள் தெரிய மண்டியிட்டமர்ந்திருக்கிற ஸாவோ திரும்பிப் பார்க்கிறான். போலீஸ்காரர் அந்த வாசகங்களைப் படித்தபடி பின்னால் நிற்கிறார். ஸாவோ எழவும் “ அந்த முகவரில உள்ள கிராமத்துக்கு இங்கிருந்து இன்னும் ஏழு மணி நேரம் பயணம் செய்யணும்.. வாங்க போகலாம்” என ஆறுதலாக அவனைப் பற்றுகிறார்.
இருவரும் லியூவின் குடும்பத்தினர் வசிக்கும் புதிய முகவரியைத் தேடி பயணப்படுகிறார்கள். அருகிலிருக்கிற நதி சலனமின்றி அமைதியாக ஓடிக் கொண்டேயிருக்க Getting Home நிறைவடைகிறது.
சொந்த ஊர்களை விட்டு பிழைப்பு தேடி நகரங்களுக்கு வரும் தற்கால வாழ்வு நிலையையும் அதன் முரண்களையும் நேரடியாக இல்லாமல் மிக எளிதாகவும் ஆழமான கேள்விகளுடனும் யாங் சாங் இயக்கிய இந்த சீனத் திரைப்படம் விளக்குகிறது. பயணப்படுதல் படத்தின் மைய ஓட்டமாக இருப்பதால் சீனாவின் பல் வகை மக்களையும் கலாச்சாரத்தையும் போகிற போக்கில் காட்சிப் படுத்துகிறார்கள்.
ஸாவோவாக நடித்த பென்ஸானின் பக்குவப்பட்ட நடிப்பையும் சீனாவின் பொருத்தமான இடங்களையும் நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் யாங் சாங். Getting Home-ன் இன்னொரு சிறப்பம்சம் அதன் பின்னணி இசை. படம் முழுவதும் வாசித்துக் கொண்டே இல்லாமல் வெகு சொற்பமான இடங்களில் வந்தாலும் பார்வையாளனின் உணர்வைத் தூண்டும் விதமாகவும் அவனைப் படத்தோடு ஒன்றச் செய்யும் விதமாகவும் வாசித்திருந்தார்கள். மனித வாழ்வின் மீதும், இருத்தலியலில் எதிர் கொள்ள வேண்டிய முரண்களின் மீதும் இப்படம் கேலியான தொணியில் கேள்விகள் எழுப்பிச் செல்கிறது. Getting Home படத்திற்குப் பிறகு பல படங்கள் பார்த்த போதும் அது என் நினைவில் இருந்து கொண்டே இருந்தது.

Hi Murali,
ReplyDeleteFirst, congratz for winning national award for your short film "Karna motcham". its really a
master piece.
This is p.manivannan, am working in bangalore as software engineer.
I love cinema. intrested in script writing, acting. so reading many books related to that but only experience can make a man to reach goal.
In this topic "getting home" the way u expressed
every scene was great and it creates running screen infront of my eyes.
have read all your topic..its gud to read about travel to goa. the experience have been given as same what every one feel (eg. going inside tunnel). i feel same when i travelled goa.
many more to discuss.
first i want to be your friend :) accept my invite
Regards,
Mani