
ஒரு புல் ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு ஜென் கவிதை இருக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்பது போலத் தோன்றினாலும் புல் எவ்வளவு வளர்கிறது, எப்படி வளர்கிறது என்பது அறியாத ரகசியமே. அது ஒரு விந்தை. அத்தோடு வளர்ச்சி என்பது ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதையே இக்கவிதை வெளிப்படுத்துகிறது.
விதையைப் பார்த்து அதில் ஒளிந்தும்ள விருட்சத்தின் பிரம்மாண்டத்தை நாம் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் எல்லா விதைகளும் விருட்சமாகி விடுவதில்லை. வீரியத்தோடும், மண்ணோடு போராடும் குணமுடைய விதைகள்தான் விருட்சங்கள் ஆகின்றன.
கலைகளும் அப்படித்தான். இலக்கியம், நாடகம், சினிமா என கலையின் ஊடகங்கள் மாறலாம். கலைஞர்களின் அடிப்படை இயல்பு ஒன்று போலதானிருக்கின்றன. எல்லாக் கலைகளும் கற்றுக்கொள்வதில்தான் துவங்குகிறது. கற்றுக்கொள்வதற்கு திறந்த மனதும், ஆர்வமும், விடாத உழைப்பும் வேண்டும்.
சினிமா வெறும் பொழுதுபோக்குச் சாதனம் மட்டும் அல்ல. அது ஒரு உயர்ந்த கலை வடிவம். சினிமாவைக் கற்றுக் கொள்வதும், அதில் தனது விருப்பங்களை முழுமையாகச் சாதித்துக் காட்டுவதும் எளிதானதில்லை. அதே நேரம் சாத்தியமற்றதுமில்லை.
சினிமா ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கனவை உருவாக்கியுள்ளது. அக்கனவினை நிஜமாக்குவதற்குத் தேர்ந்த பயிற்சியும், நல்ல வழிகாட்டுதலும், யாவையும்விட அடுத்தவர் மீதான அன்பும், நட்பும் முக்கியம் என்று கருதுகிறேன்.
எனது நண்பரும், திரைப்படக் கல்லூரி மாணவருமான முரளி மனோகர் சினிமாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். இக்கட்டுரைகளில் தான் முதன்முதலாக கலந்துகொண்ட 2005 ஆண்டு கோவா உலகத் திரைப்பட விழாவைப் பற்றிய மனப்பதிவுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எழுத்து இவருக்கு கைவந்திருக்கிறது. அதிலும் மிக நுட்பமான உணர்ச்சிகளைக் கூட வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடிய மொழி சாத்தியமாகியிருக்கிறது. இவரது முன்னுரையில் வரும் பிக்குவும் சலீமும் இரண்டு தனி சிறுகதைகளைப் போல எழுதப்பட வேண்டியவர்கள்.
தான் பார்த்த படங்களில் இருந்து சிறந்த படங்களாக இவர் தேர்வு செய்த 21 திரைப்படங்களின் பட்டியலே இவரது விருப்பத்தையும் மன அமைப்பையும் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மிக ஆச்சரியமான நிஜம் இதே படங்களைத்தான் நானும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் பார்த்து பிடித்த படங்களாக எனது குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன்.
சினிமா ஒரு காட்சிக் கலையாக இருந்தாலும் அதில் இசைக்கும், நுட்பமான உணர்ச்சிகளுக்கும் மௌனத்திற்கும் முக்கிய இடம் இருக்கிறது. இவரது அவதானிப்பு மௌனங்களையும் ரசித்திருக்கிறது என்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களுக்குச் சென்று வந்தபோதும் இத்தனை நுட்பமாகவும், அழகாகவும் ஒரு இளைஞர் உலக சினிமா பற்றி தன் மனப்பதிவுகளை ஒரு சிறு தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளதை இப்போதுதான் முதன்முதலாகப் பார்க்கிறேன்.
முரளி மனோகருக்கு வருங்கால சினிமாவில் ஒரு தனியான இடம் இருக்கும் என்பதற்கான அத்தாட்சியாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
மிக்க அன்புடன்,
எஸ். ராமகிருஷ்ணன்.

No comments:
Post a Comment