https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Thursday, February 25, 2010

கோவா 983 கி.மீ.



திரைப்படத்தைப் பயிலத் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதென்பது பெரிய கனவாகவே இருந்து வந்தது. அவ்வப்போது கல்லூரியில் காணும் சில படங்களைத் தவிர வேறு எங்கும் நல்ல திரைப்படங்களைக் காண வாய்ப்பற்றவனாகவே இருந்தேன். புத்தகங்களில் வாசிக்கும் கதைகள்தான் மனதிற்குள் சினிமாவாகப் பல நேரங்களில் ஓடிக்கொண்டிருந்தது.

அடித்துப்பிடித்து இரண்டாமாண்டு வந்தபிறகு அந்தக் கனவுப் பயணம் கிட்டத்தில் வந்த உணர்வு. சர்வதேச திரைப்பட விழா இவ்வாண்டு கோவாவில்தான் என முடிவு செய்யப்பட்டு, தேதிகளும் குறிக்கப்பட்டன. என்ன ஆகி என்ன செய்ய! உறுமீன் வரும் வரை என்னால் வெறுமனே காத்து நிற்க முடியவில்லை. மீன் வருவதற்குள் அலகைக் கூர்மையாக்க வேண்டும். ஆசிரியர்களும், நண்பர்களும், கோவா புகழ்பெற்ற சுற்றுலா மையம், அங்கே டாலர்கள்தான் விலைபோகும் என்றெல்லாம் பயமுறுத்தியபடி இருந்தார்கள். கோவா எனக்குள் பணம் திண்ணியாக உருவேற்றப்பட்டது.

கடந்த 2005 நவம்பர் 25ம் தேதியன்று கலை 11.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பயிலகத்தின் 30 மாணவர்களும், ஒரு ஆசிரியர் துணையுடன் புறப்பட்டோம்.

எங்கள் ரயில் பெட்டி மாணவர்களின் உற்சாகத்தில் நிரம்பியது.

மறுநாள் காலை 5.30 மணியளவில் மங்களூரை அடைந்தது ரயில். லேசான பனி பெய்துகொண்டிருக்க, சில்லென்று வீசியது காற்று. தேநீர் அருந்திக் கதகதப்பாக்கிக் கொண்டு கோவா செல்லும் ரயிலுக்காகக் காத்திருக்கத் தொடங்கினோம். ரயில் வண்டிகளின் வருகை நேரம் குறித்த தகவல்கள் கன்னடம், ஹிந்தி, ஆங்கிலத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.

6.30
மணிக்கு கோவா செல்லும் ரயில் மங்களூரில் இருந்து புறப்பட்டது. எங்களைப் போலவே அந்த ரயிலில் மாணவிகள் கூட்டமாக தங்கள் ஆசிரியைகளுடன் பயணம் செய்தார்கள். அவர்களும் தமிழர்கள்தான். கோவாவில் போர்த்துக்கீசியர்கள் காலத்தில் கி.பி. 1585ல் கட்டப்பட்ட பழமையான, பஸிலிகா ஆஃப் போம் ஜீசஸ் தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த, 500 ஆண்டுகளுக்கு முன் இறந்த, சேவியரைக் காணச் செல்கிறார்கள் என்பது அவர்கள் சேர்ந்து பாடிவந்த கிறித்தவப் பாடல்களால் தெரிந்தது.

கர்நாடக மாநிலத்தின் செழிப்பான விளைநிலங்களையும், தோட்டங்களையும், ஆறுகளையும், குளங்களையும் கடந்து வேகமாகப் போய்க்கொண்டிருந்தது ரயில். அந்த மலையோரக் கிராமங்களின் காட்சிகள் மனதில் பதிவானபடியே தொடர்ந்தது பயணம்.

நீண்ட குகைகள் ரயில் பாதைகளுக்காக மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டிருந்தன. குகைளினுள் செல்லும்போது பக்கவாட்டில் பாறைகளில் மோதிய ரயிலின் சத்தம் திரும்பவும் ரயிலுக்குள்ளேயே புகுந்து எங்கள் காதுகளை அடைத்தது. கசிந்து ஊறிய சுனைநீர் சாராலாய் முகத்தில் தெறிக்க, நண்பர்கள் உற்சாகக் குரலெழுப்பினார்கள். எண்ணிக்கை முடிவின்றி மலை வரும்போதெல்லாம் வந்த குகைகள், கிலோ மீட்டர் கணக்கில் நீண்டன. இதனால் பகல்நேரப் பயணமானாலும் எப்போதும் ரயிலின் விளக்குகள் எரிந்தவண்ணம் இருந்தன.

ரயில் குகைக்குள் நுழையும்போது வெளியே எட்டிப்பார்க்க எழுந்த ஆர்வம் எனக்குள் அதிகமாக, செய்துபார்க்கத் துணிந்தேன்.
நீளமான எங்கள் ரயிலின் முன்பகுதி ஏற்கனவே குகை ஒன்றில் நுழைந்தபோதும் நான் நின்ற பெட்டி இன்னும் குகைக்கு வெளியேதான் போய்க்கொண்டிருந்தது. அருகில் வர வர திகிலாக இருந்தது. கதவின் அருகில் இருந்த கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டேன். சரியாக குகைக்குள் எனது பெட்டி நுழைந்ததும், பலமடங்கு வேகமாக காற்றடிக்கச் சூழ்ந்தது இருள். என்ன ஒரு வித்தியாசமான அனுபவம்! இருட்டு ஒரு திடப்பொருளைப் போலல்லவா வந்து மோதுகிறது!

மதியம் மர்மகோவா ரயில் நிலையத்தில் இறங்கி, நாங்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு பஸ்ஸைப் பிடித்தோம். கோவா நகரெங்கும் 35வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு வரவேற்கும் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிந்தன. வீடுகளும், சாலையும் வித்தியாசமாக இருந்தது. அறைக்குச் சென்றதும், குளியலைப் போட்டுப் புத்துணர்ச்சி பெற்று, நகரவீதிகளில் இரவு வரை சுற்றித் திரிந்தோம்.

எங்களுக்கு பாஸ் கிடைப்பதில் தாமதமானது. கோவாவின் எழில்மிகு கடற்கரைகளுக்குப் போவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மண்டோவி ஆற்றங்கரையின் விடுதி ஒன்றில் தங்கியிருந்த நாங்கள் படகில் ஆற்றைக் கடந்து வந்து பாஸ் நிலவரத்தைத் தெரிந்துகொண்டு ஏதோ ஒரு கடற்கரைக்குச் சென்றுவிடுவோம். மூன்று தினங்கள் இப்படியே கழிந்தன.

திரைப்பட விழாவின் தொடக்க நாளான நவம்பர் 29ம் தேதியன்று மதியம் ஒருவழியாக பாஸ் கிடைத்து விட, மாலை ஆரம்ப விழாவில் கலந்து கொண்டோம். சுபாஷ் கைய் அறிமுகப்படுத்த, அவரின் கிஸ்னா படத்திலிருந்து .ஆர். ரஹ்மான் இரண்டு பாடல்களை மேடையில் இசைத்தார்.

விழா நடந்த கலா அகாதெமி அரங்கம் முழுவதும் பாலிவுட் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களால் நிரம்பியிருந்தது. அமீர்கான், திலிப் குமார் சிறப்பு விருந்தினர்களாகவும், மணிரத்னம் ஜூரிகளின் தலைவராகவும் மேடையில் அமர்ந்திருந்தார்கள். எட்டரை மணிக்கு விழா முடிந்து ஆரம்ப படமாகத் திரையிடப்பட்டது மீரா நாயரின் வேனிட்டி ஃபேர்.


அடுத்த நாள் முதல் காலை ஐந்தரைக்கெல்லாம் எழுந்து காலைக் கடன்களுக்காக வரிசையில் காத்திருந்து, குளிரக் குளிரக் குளித்து, எட்டரைக்கு ஐனாக்ஸ் மல்டிப்ளக்ஸ் திரையரங்க வளாகத்தில் இருப்போம். ஒன்பது மணிக்குத் தொடங்கும் காலைக் காட்சிகளுக்குப் பெரும்பாலும் கூட்டம் குறைவாகவே இருக்கும்.

திரைப்படங்கள் ரத்தத்தில் கலக்கத் தொடங்கின. நாங்கள் நிறம் மாறினோம். சினிமா எப்போதும் தன் எல்லைகளுக்குள் அடங்குவதே இல்லை. ஒவ்வொரு நல்ல திரைப்படமும் சினிமாவின் எல்லையை ஏதாவதொரு கோணத்தில் விரிவுபடுத்திச் செல்கிறது. காட்டுத்தீயைப்போல புரொஜக்டர்களில் எரிந்து கொண்டிருக்கும் கார்பன் துண்டுகள், படைப்பின் சாத்தியத்தை விஸ்தாரமாக்கும் தொழில்நுட்பம் மேலோட்டமாகப் புரியத் தொடங்கியது. ஒன்றரை ஆண்டுகள் சொல்லிக் கொடுக்கப்பட்ட பழமையானப் பாடத்திட்டத்திற்கும், நவீன சினிமாவிற்கும் உள்ளூரப் பெரிய இடைவெளி உருவானது.

தினசரி ஐந்து படங்கள் பார்த்தபின் விழாக்குழுவினரால் எங்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் நள்ளிரவு அறை திரும்பி அடுத்த நாள் காண வேண்டிய படங்களைத் தேர்வு செய்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு படுக்கைக்குச் செல்லும்போது மணி ஒன்றாகி இருக்கும். மறுபடியும் ஐந்தரைக்கு எழ, அடுத்த நாள் விருந்தை எதிர்பார்த்து மனம் தன்னியல்பாக உற்சாகம் பெறும்.

இப்படி, பத்து நாட்கள் போனது தெரியவில்லை. டிசம்பர் 9ம் தேதியன்று மாலை கலா அகாதெமியில் நிறைவு விழா. வரும் ஆண்டிலும் நாம் இங்கே சந்திப்போம் என்ற மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, திரைப்பட விழா அடுத்த ஆண்டும் கோவாவில்தான் நடக்கும் என்பதை உறுதி செய்தார்.

ஜூரிகளின் தலைவர் மணிரத்னம் எதிர்பாராதவிதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட, அவர் சார்பில் ஆசிய திரைப்படங்களுக்கிடையேயான போட்டியின் முடிவுகளை வேறு சிலர் அறிவித்தார்கள்.

http://static1.orkut.com/img/b.gif

Beautiful Boxer, Old Women திரைப்படங்கள் வெள்ளி மயில் விருதைப் பெற்றன. Beautiful City திரைப்படத்தில் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்திருந்தவருக்குச் சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது. 35வது சர்வதேச திரைப்பட விழாவின் தங்க மயில் விருதும் Beautiful City ஈரானியப் படத்திற்கே அளிக்கப்பட்டது. விழாவின் நிறைவுத் திரைப்படமாக திரையிடப்பட்டது ஆலிவர் ஸ்டோனின் அலெக்ஸாண்டர்.

திரைப்பட விழா முடிந்த மறுநாள் பனாஜி நகரமே வெறுச்சோடிக் கிடந்தது. சர்வதேச கனவுகளை ஒருசேரக் கண்ட மனிதர்களெல்லாம் ஊருக்குப் புறப்பட்டிருந்தார்கள். பத்து தினங்களிலும் நிறைந்திருந்த உற்சாகம் சாலைகளின் ஓரங்களில் ஒதுங்கி இருந்தது. நாங்கள் மதிய உணவிற்காகச் செல்லும் விடுதியில் ஆட்கள் மூலைக்கு ஒருவராய் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடமும், உணவு பரிமாறுபவரிடமும் முந்தைய நாள் இருந்த உற்சாகம் கொஞ்சமும் இல்லை. தினமும் அந்த வீதியில் சுற்றுலாப் பயணிகளிடம் புல்லாங்குழல் விற்கும் சலீம், எங்களுக்கு நண்பராகி இருந்தார். தமிழ் பேசும் சலீம், தன் குடும்பத்தோடு கோவாவிற்கு வந்து ஆறாண்டுகளை நகர்த்தி இருந்தார். அவரிடமிருந்து விடை பெற்று புறப்பட்டோம்.



திரைப்பட விழாவில் மொத்தமாக நான் கண்டது 43 முழுநீளத் திரைப்படங்கள், 2 குறும்படங்கள், ஒரு ஆவணப் படம். ஐனாக்ஸ் மல்டிப்ளக்ஸில் நான்கு திரையரங்கங்கள், கலா அகாதெமி திரையரங்கம் ஆகிய ஐந்திலுமே இருக்கை வசதிகளும், ஒலி அமைப்பும் உலகத் தரத்தில் இருந்தன. இந்த அரங்கங்களில் சினிமா பார்ப்பது சுகானுபவமாக இருந்தது.

டிசம்பர் 11ம் தேதி காலை துவங்கி அன்று முழுவதும் கோவாவைச் சுற்றினோம். கோல்வா கடற்கரையின் சிறிய, எளிமையான, விலை குறைந்த உணவு விடுதியொன்றில் பிக்கு என்ற ஏழாம் வகுப்புச் சிறுவன் என்னால் பயணத்தில் மறக்க முடியாத ஒருவன். விடுதியில் யாருமே ஆங்கிலம் தெரிந்தவர்கள் இல்லாமல் இருக்க, அவன்தான் எங்களுடன் அன்பாக ஆங்கிலத்தில் பேசி, ஓடியாடி உணவு பரிமாறினான். பிக்குவின் சுறுசுறுப்பும், வேகமும் எங்களைக் கவர்ந்தது.

Top of Form

எங்களுக்கு எல்லாம் கிடைக்கச் செய்துவிட்டுக் காணாமல் போனான் பிக்கு. வயிறாரச் சாப்பிட்ட பிறகு, பிக்கு எங்கே என நாங்கள் கேட்டது ஒருவழியாக அவர்களுக்குப் புரிந்துவிட மேலே படித்துக்கொண்டிருக்கிறான் என சைகை கலந்த மொழியில் பதிலளித்தார்கள். வெளியே வந்து மாடியைப் பார்த்தோம். ஜன்னலருகே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவன் எங்களைப் பார்த்தான். நாங்கள் கையசைத்தோம்.



நள்ளிரவு 12.30 மணிக்கு மங்களூர் செல்லும் ரயில் புறப்பட்டது. நாள் முழுக்க சுற்றியலைந்த களைப்புத் தீர உறங்கிப் போனோம். மங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் ரயிலுக்கு ஐந்து மணிநேரம் இருந்ததால், மங்களூரின் கடைவீதிகளை நடந்து சென்று நண்பர்களோடு பார்த்தேன். சுகாதாரத்திலும், நாகரிகத்திலும் சென்னையைவிட ஒருபடி கீழே இருந்தது மங்களூர்.

டிசம்பர் 12ம் தேதியன்று மதியம் 12.15க்கு மங்களூரில் புறப்பட்டது நாங்கள் சென்னை திரும்பிய ரயில். கோவா செல்லும்போது இரவுநேரத் தூக்கத்தில் கடந்துபோன கேரளா, சென்னை திரும்பும்போது பகலில் காணக் கிடைத்தது. நிலையங்களில் இறங்கி மலையாளக் காற்றைச் சுகித்தோம்.

டிசம்பர் 13ம் தேதி காலை 7.00 மணியளவில் அதுவரை மறந்து போயிருந்த சென்னை மீண்டும் கண்முன்னால் விரிந்தது. பரபரப்பபு உடனே தொற்றிக்கொள்ள, வீடு திரும்பித் தயாராகி அன்றே பயிலகம் புறப்பட்டேன்.

நினைவில் உறைந்துபோன இந்தத் திரைப்பட விழாப் பயணம் நான் எதிர்பார்த்துச் சென்றதை விட அதிகமாகவே என்னை பாதித்தது. சினிமாவின் மீதான பார்வையைத் தெளிவடையச் செய்து, படைப்புக் கோணத்தை விரிவாக்கியது. உற்சாகமும், நம்பிக்கையும் இந்தப் பயணத்தில் தொழில்நுட்பங்களோடு எனக்கு இலவசமாகக் கிடைத்த பரிசுகள்.

கனவுகளைத் தேடிய இந்தப்பயணம் சாத்தியப்பட நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாயிருந்த என் நலவிரும்பிகள் அனைவரையும் அன்போடும், நன்றியோடும் நினைவு கூர்கிறேன்.

திரைப்பட விழாவில் எனது அனுபவங்கள் பற்றிய இத்தொகுப்பில் தன் கருத்துக்களை பதிவு செய்த என் ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், இத்தொகுப்பை வடிவமைத்துத் தந்த செல்வி இந்திரா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!



மிக்க அன்புடன்,


. முரளி மனோகர்.


kalaiyalan@gmail.co
m

1 comment:

Share