https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Thursday, October 31, 2013

நகர மேனிலைப் பள்ளி நாட்கள்


கர மேனிலைப் பள்ளி (Town Higher Secondary School), கும்பகோணம். 1997, 98, ஆண்டுகளில் இங்குதான் என் ஒன்பது, பத்தாம் வகுப்புகள் படித்தேன். நேற்று எதேச்சையாக முகநூலின் ஏதொ ஒரு சுட்டியில் போய்ப் பார்த்தால் பள்ளிக் கூடத்தின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா நடைபெற இருப்பது குறித்துச் செய்தி இருந்தது


கணித மேதை ராமாநுஜம் பயின்ற பள்ளிக்கூடம் என்ற பெருமையெல்லாம் சொல்லி என்னை ஆறாம் வகுப்பிலேயே இந்தப் பள்ளியில் சேர்க்க வீட்டில் முயற்சித்தார்கள். நமக்குதான் கணக்கென்றாலே பிணக்காச்சே! நுழைவுத் தேர்வில் தேர்வாகவில்லை. பிறகு மீண்டும் ஒன்பதாம் வகுப்பில் சேர இன்னொரு நுழைவுத் தேர்வு. அடித்துப் பிடித்துத் தேர்வாகி பள்ளிக்கூடத்தில் எனக்கு இடம் கிடைத்தது.

2014 ஜனவரியில், நகர மேனிலைப் பள்ளி நூற்றைம்பதாவது ஆண்டு விழா காணப் போகும் செய்தி பார்த்ததும் நினைவுகள் பின்னோக்கிப் போவதைத் தவிர்க்க முடியவில்லை. அட்மிஷன் போடும்போது, ‘ஒன்பதாம் வகுப்பில் ஒழுங்காகப் படிக்கவில்லையென்றால் பத்தாம் வகுப்புக்கு அனுப்பமாட்டேன். டி.சி. வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்என தலைமை ஆசிரியர் ஆர்.விஸ்வநாதன் (ஆர்.வி.) கறாராகச் சொன்னதும் அதற்கு அப்பா பணிவுடன் தலையசைத்துக்கொண்டே என்னைப் பார்த்த பார்வையும் ஞாபகத்துக்கு வருகிறது.

இன்றைக்கு எப்படியோ, நான் படிக்கும்போது பிரேயர் என பள்ளி மாணவர்கள் அனைவரும் காலையில் கூட வேண்டியதில்லை. எல்லா வகுப்பறைகளிலும் ஆசிரியர் அமரும் நாற்காலிக்கு மேல் ஸ்பீக்கர் ஒன்று இருக்கும். அது தலைமை ஆசிரியர் அறையோடு இணைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்தே இறைவணக்கப் பாடல்களை மைக்கில் மாணவிகள் பாடுவார்கள். வகுப்பறைகளின் ஸ்பீக்கரில் அந்தப் பாடல் ஒலிக்க, இறை வணக்கம் நடைபெறும். முடிந்ததும் அன்றைய நிகழ்ச்சிகள் தொடர்பான செய்திகளோ, குறிப்புகளோ இருந்தால் தலைமை ஆசிரியர் மைக்கில் சொல்வார். வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் போது ஆசிரியர்கள் யாரையேனும் அழைத்துப் பேச வேண்டியிருந்தால்கூடத் தலைமை ஆசிரியரிடமிருந்து ஸ்பீக்கரில் அழைப்பு வரும். “ஆசிரியர் பி.ஆர்.எம். உடனடியாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு வரவும்என்பதாக இருக்கும் அந்த அழைப்பு. பின்பொரு நாள் எனக்கும் வகுப்பில் எப்போதும் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நண்பன் இசக்கி முத்துவுக்கும் இந்த ஸ்பீக்கரின் வழியாகத் தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு வந்தது. அது பற்றிப் பின்னால் சொல்கிறேன்


நகர மேனிலைப் பள்ளியில் வேறெங்கும் பார்த்திடாத இன்னொரு விநோதம் இருந்தது. மதிய உணவுக்கு முந்தைய பிரிவேளையிலோ, மாலை கடைசி பிரிவேளையில் வகுப்பெடுக்க வேண்டிய ஆசிரியர் வரவில்லை என்றால் சொல்லிவிட்டுக் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் வீட்டுக்குக் கிளம்பி விடலாம். மாணவர்களின் அந்த உரிமைக்குஅவுட் பாஸ்என்று பேர். ரெண்டாவது, ஆறாவது, பிரிவேளை ஆசிரியர்களில் யாராவது வரவில்லை என்றால் கூட கடைசி பிரிவேளை ஆசிரியர்களிடம் கிளாஸ் லீடரைத் தூதனுப்பி முன்னதாக வகுப்பெடுக்கச் சொல்வோம். கடைசி பிரிவேளைக்கான மணி அடித்ததும் நாங்கள் கிளம்பிவிடுவோம். கேட்டில் வாட்ச் மேன் கேட்டால், ‘டென்த் ஜி... அவுட் பாஸ்...’ என்போம். அவர் மறு பேச்சில்லாமல் கேட்டைத் திறந்துவிடுவார். குறித்த பருவத்துக்குள் சிலபஸ் முடிக்காத ஆசிரியர்களிடம் தெரியாமல் போய் முன்னதாக வகுப்பெடுக்கச் சொல்லிப் பின்அவுட் பாஸ்பீரியடையும் சேர்த்து அவர்களே எடுத்துக்கொண்ட துன்பியல் சம்பவங்களும் நடந்திருக்கிறது. நகர மேனிலைப் பள்ளியில் இதெல்லாம் எனக்கு ஆச்சர்யமான விஷயங்களாக இருந்தன.

பதின்பருவத்துக்கே உரிய சேட்டைகள், குறும்புகள், என்னிடமும் இருந்தன என்றாலும் மற்ற மாணவர்கள் அளவுக்கில்லாமல் ஒரு குறுகிய நட்பு வட்டத்துக்குள் மட்டுமே என்னை அப்படிப் பார்க்க முடியும். அதில் முக்கியமானவன் இசக்கி முத்து. நாச்சியார் கோவிலிலிருந்து பஸ்ஸில் வருவான். தாராசுரம் டி.ராஜா, பெரிய கடைத்தெரு சேகர், ஆகியோர் அடங்கிய குழு எங்களுடையது.  நான் சோலையப்பன் தெரு, மாமா வீட்டிலிருந்து பள்ளிக்கு சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். வார இறுதி நாட்களில் வாசு, விஜயா, செல்வம், காசி, எனத் தியேட்டர்கள் பக்கம் எங்களைப் பார்க்கலாம். இசக்கி முத்துவின் அப்பாதான் எங்களுக்குப் படம் பார்க்க, போக்குவரத்துச் செலவுகளுக்கெல்லாம் காசு கொடுத்தனுப்புவார். மற்றபடிஅவுட் பாஸ்நேரங்களில் காகிதப் பந்து செய்து காந்தி பார்க்கில் கிரிக்கெட் நடக்கும். சொக்கலிங்கம் தலைமையில் இருட்டும் வரை தொடரும் ஆட்டம்.

தேர்வு முடிந்த விடுமுறைகளில் அப்பா, தம்பிகளைப் பார்க்கத் திண்டிவனம் அருகே உள்ள பெரமண்டூருக்கு பஸ் பிடித்துத் தனியாக வருவேன். என் தேவை உணர்ந்து அப்பா, வீட்டில் அசைவம் சமைக்க ஏற்பாடு செய்வார். ஆத்தா சிரமப் பட்டு எனக்குப் பிடித்த இடியாப்பம் தேங்காய்ப் பால் செய்து பரிமாறுவார். தம்பிகள், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி நாட்கள் கரையும். விடுமுறை நாட்கள் முடிந்துத் திரும்பக் கும்பகோணம் புறப்பட்டு வரும் நாள் மிகக் கொடியது. கலங்கும் கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொள்வேன். திண்டிவனத்திலிருந்து கும்பகோணம் வந்து மறுநாள் பள்ளி செல்லும் வரைத் தொடரும் வீட்டு நினைப்பு. ஆனால், வகுப்பில் நுழைந்தவுடன் மெல்ல என் மனநிலையை மாற்றிவிடும் பள்ளிக்கூடம்.

ஒன்பதாம் வகுப்பில் நான் ஒரு சராசரி மாணவனாக இருந்தேன். கணக்குப் பாடம் கசந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு கணிதத் தேர்விலும் தேர்ச்சியடைவது முடியாத காரியமாக இருந்தது. ஆசிரியர்கள் நான் பத்தாவது போகப்போவதில்லை என்பார்கள். பொதுத் தேர்வின் போது பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு குறைந்து கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கவிருக்கும் மாணவர் பட்டியலில் எப்போதும் என் பெயர் இருப்பதாகச் சொல்வார்கள். ஆர்.வி. சார் சொன்னதுவேறு அடிக்கடி நினைவில் வந்து கிலியூட்டும். வகுப்பாசிரியையாக இருந்த பத்மா மிஸ்ஸைச் சமாளித்துவிடலாம். சமூக அறிவியல் பாடமெடுத்த ஆசிரியர் டி.வி.விதான் சிம்ம சொப்பனமாக இருந்தார். தமிழ்ப் பாடமும் அதை நடத்திய ஆசிரியர், கே.டி.எஸ்ஸுமே அக்காலத்தில் எனக்கிருந்த ஒரே ஆறுதல்

தப்பித் தவறி பத்தாவது போய் இடைத் தேர்வுகளில் ஒழுங்காகத் தேறவில்லை என்றால் கோச்சிங் கிளாஸ் வைப்பார்கள். இரவெல்லாம் பள்ளிக்கூடத்திலேயே தங்கிப் படிக்க வேண்டும். காலை ஆறு மணிக்கெல்லாம் கோச்சிங் கிளாஸ் தொடங்கும். சனி, ஞாயிறு விடுமுறையின்றி வகுப்புகள், டெஸ்டுகள் நடக்கும், என்றெல்லாம் மாணவர்களுக்கிடையே பேசிக்கொள்வார்கள். கல்வியாண்டின் இறுதி நேரத்தில் அப்படி கோச்சிங் கிளாஸுக்கு வரிசை கட்டிப் போகும் பத்தாம் வகுப்பு மாணவர்களை, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களாகிய நாங்கள் ஒருவித கலவரத்துடன் பார்த்ததுண்டு. நகைச்சுவையாகச் சொல்ல வேண்டுமானால்,  சில வருடங்களுக்கு முன் வந்த மெல் கிப்சனின் அபோகலிப்டோ படத்தில் வரும் ஒரு காட்சியை ஒப்பிட்டுச் சொல்லலாம். அதில் பழங்குடி இன மக்களை நரபலிக்காக வரிசைகட்டி அழைத்து வருவார்கள். அங்கே ஏற்கனவே அடிமையாக இருக்கும் வேறொரு இன மக்கள் அவர்களைக் பீதியுடன் பார்ப்பார்கள். இரண்டு காட்சிகளுக்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும் ஆசிரியர்களின் ஒழுக்க விதிகளும் பள்ளிக்கூடக் கட்டமைப்பும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அவ்வளவு கடுமையாக இருந்தன என்பதைச் சொல்ல வருகிறேன். இல்லையென்றால் என் போன்ற சராசரி மாணவர்களின் வாழ்க்கை திசை மாறித் தறிகெட்டுப் போயிருக்கும்.

பத்தாம் வகுப்பின் தொடக்கத்திலேயே பொதுத் தேர்வு இலக்காக நிறுத்தப்பட்டது. பத்தாவது ஜி பிரிவின் வகுப்பாசிரியையாக சாந்தா மிஸ் இருந்தார். பி.ஆர்.எம். அறிவியலும், எஸ்.ஜி.என். சார் சமூக அறிவியலும், .பி.எஸ்., கே.வி.எஸ் இருவரும் கணிதமும் சொல்லித் தந்தார்கள். எஸ்.ஜி.என். சாரின் சமூக அறிவியல் வகுப்பென்றால் எங்களுக்கு சர்க்கரை. வெறும் புத்தகப் பாடம் மட்டுமின்றி, வாழ்க்கை குறித்தும் பேசுவார். அந்த வயதில் மாணவர்களுக்கு வரும் உளவியல், உடலியல் சிக்கல்கள் குறித்துச் சொல்வார். அவற்றை எதிர்கொண்டு சமாளிக்கத் தேவையான உபாயங்களையும் சொல்லிக் கொடுப்பார். நகைச்சுவை மிகுந்த அவரின் அணுகுமுறை மாணவர்கள் அனைவரையும் அவர் பக்கம் ஈர்க்கும். அவ்வப்போது அவர் உதிர்க்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு வகுப்பறைச் சுவர்கள் அதிரச் சிரிப்பொலி எழும். நாங்கள் சில மாணவர்கள் டெஸ்கைத் தட்டி ஆரவாரம் செய்வதும் உண்டு. யாருடனும் அதிகமாகப் பழகாத, சிரித்துப் பேசிடாத நான்  என்னை மறந்து உரத்துச் சிரிப்பேன். அம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அருகே அமர்ந்திருக்கும் நண்பர்கள் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள்.  இசக்கி முத்து, டி.ராஜா, இருவர் மட்டும் எனது அந்தச் சிரிப்பு அவர்களுக்குப் பிடித்திருந்ததாகப் பல வருடங்கள் கழித்து ஒருமுறைச் சந்திக்கையில் சொன்னார்கள்.

ஒரு நாள் காலை முதல் வகுப்பு சாந்தா மிஸ் எடுத்தார். அவர் இயல்பாக ஏதோ சொல்ல, நானும் இசக்கி முத்துவும் பெரிதாகச் சிரித்தபடி டெஸ்கைத் தட்டிவிட்டோம். எஸ்.ஜி.என். வகுப்பைப் போல எல்லோரும் எங்களுடன் சிரித்தபடி ஆரவாரம் செய்வார்கள் என்ற நினைப்பில் நாங்கள் அவசரப்பட்டிருந்தோம். ஒட்டுமொத்த வகுப்பும் அமைதியாக எங்கள் இருவரைப் பார்த்துக்கொண்டிருந்தது. கடுங்கோபமடைந்த சாந்தா மிஸ் எங்களை எழுந்து நிற்கச் சொல்லிவிட்டு விருவிருவென வகுப்பைவிட்டு வெளியே சென்றுவிட்டார். அருகிலிருந்த மாணவர்கள், “ஏய்... மாட்னீங்கடா...” என்று பயமுறுத்த, வேறு சில அபிமானிகள், “சாந்தா மிஸ் நல்லவங்கடா... சும்மா உங்களை பயமுறுத்தப் போயிருக்காங்க... வார்ன் பண்ணிட்டு விட்ருவாங்க பாரேன்...” என்றார்கள். அவர்கள் சொல்லி முடிக்கவும் போன அதே வேகத்தோடு திரும்பி வந்தார் சாந்தா மிஸ். கோவம் குறையாதவராக எங்களை முறைத்துப் பார்த்துவிட்டு, “சிட் டௌன்...” என்றார்.  நாங்கள் பயம் குறையாதவர்களாகத் தயக்கத்துடன் அமர்ந்தோம். சாந்தா மிஸ் தன் வகுப்பைத் தொடர்ந்தார். ஒரு ஐந்து நிமிடங்கள் இருக்கும். வகுப்பறையின் கரும்பலகைக்கு மேலுள்ள ஸ்பீக்கர் கரகரக்கத் தொடங்கியது. தலைமை ஆசிரியர் ஆர்.வி. சார் பேசினார். “டென்த் ஜி, முரளி மனோகர், இசக்கி முத்து, ரெண்டு பேரும் ஹெட் மாஸ்டர் ரூமுக்கு வாங்க...” இன்னொரு முறைத் திரும்பவும் அழைத்தார். வகுப்பறையே பயம் படர்ந்த அமைதியில் எங்களைப் பார்த்தது. நானும் இசக்கி முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எச்சில் விழுங்கியபடி மெல்ல எழுந்தோம். “கூப்பிடுறாருல்ல... போங்க...” என்றார் சாந்தா மிஸ். “மிஸ்... இனிமே இப்படிப் பண்ண மாட்டோம் மிஸ்... சாரி மிஸ்...” என அழும் தொணியில் கெஞ்சினோம். “ஹெட் மாஸ்டர் கூப்பிட்டார்ல... போங்க... நோ மோர் எக்ஸ்கியூசஸ்...” என்றார். ‘விதி வழிப் பயணம் என்றெண்ணி இருவரும் செய்வதறியாது வகுப்பறையை விட்டு இறங்கி வராண்டாவில் நடந்தோம். அக்கம் பக்கத்து வகுப்புகளிலிருந்தெல்லாம் மாணவர்கள் வெளியே எட்டி எங்களை வேடிக்கை பார்த்தார்கள். அவர்களுக்குள் ரகசியமாக எங்களைப் பற்றி ஏதேதோ பேசிக்கொண்டார்கள். மறுபடியும் இங்கே அபோகலிப்டோ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நீண்ட வராண்டாக்களைக் கடந்து அந்த அறையின் வாசலை அடைந்தோம். உள்ளிருந்து தலைமை ஆசிரியரின் குரல் கேட்டது. ஆர்.வி. உரத்த குரலில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். வியர்த்துக் கொட்ட நான் இசக்கி முத்துவைப் பார்த்தேன். அதிகமாகச் சிரித்து ஆரவாரம் செய்து டெஸ்க் அதிரத் தட்டி ஆர்ப்பாட்டம் செய்தது நான்தான். என் உற்சாகம் அவனை உசுப்பேற்றியிருக்க அவனும் உணர்ச்சிவசப்பட்டு டெஸ்கைத் தட்டியிருந்தான். குழப்பமும் பயமுமாக என்னை அவன் பார்க்க, நான் அவனைப் பார்க்க, “யாரது..?” எனத் திரைக்குப் பின்னிருந்து தலைமை ஆசிரியரின் குரல் கேட்டது. பதறிப் போய் இருவரும் உள்ளே நுழைந்தோம். வழக்கம் போல அடர் நீல நிற சஃபாரியில் இருந்தார் தலைமை ஆசிரியர் ஆர்.வி. வேலைகளுக்கிடையே தான் இரண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களை அறைக்கு வரும்படி அழைத்ததை மறந்திருக்க வேண்டும். எங்களை எதற்காக வந்திருக்கிறோம் எனப் புரியாமல் பார்த்தார். வேறு வழியின்றி நாங்களே எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டோம். கால்கள் நடுங்க, “சார் நான் முரளி மனோகர், சாந்தா மிஸ் கிளாஸ்...” எனச் சொன்னதுதான் தாமதம். ஆக்ரோஷமாகத் தன் இருக்கையிலிருந்து எழுந்தவர் என் தலை முடியைப் பிடித்து இழுத்து, “ஏன்டா... பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வந்திங்களா ரௌடித்தனம் பண்ண வந்தீங்களா...” என்றபடி குனிய வைத்து, முதுகில் கின்னென்று ஒன்று வைத்தார். என் கண்களில் மின்னல் வெட்டியது போல் பளிச்சிட்டது. இசக்கி முத்துவின் தலையையும் பிடித்துக் குனிய வைத்து முதுகில் ஒன்று போட்டார். “சாரி சார்... இனிமே அப்படிப் பண்ண மாட்டோம் சார்...” என அடியின் வலியில் முகம் சுளித்தபடிச் சொன்னான். என் பக்கம் திரும்பிய ஆர்.வி. கண்களை மறைக்குமளவு நீளமாகக் கலைந்து படர்ந்திருந்த என் தலைமுடியைப் பார்த்தார். காதல் தேசம் படம் வந்த காலம் அது. ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப நானும் அப்போது அப்பாஸ் கட்டிங் வைத்திருந்தேன். மாசக் கணக்கில் வளர்த்த முடி. ஒரு பக்கமாக ஒதுக்கி வெட்டிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முடி. லியோனி சொல்வது போல மழையில் நனைந்தபடி சென்றால் தலையிலிருந்து ஒரு பக்கமாகத்தான்  ஒழுகும். ஆர்.வி. சார் பிடித்த பிடியில் மொத்த முடியும் கலைந்து அலங்கோலமாயிருந்தது. மீண்டும் என் தலையைப் பற்றியவர், “என்னடாத் தலை முடி இது... ரௌடியாடா நீ... ரௌடியா நீ...” என்றபடி கத்தையாகப் பிடித்த முடியை இங்கும் அங்கும் இழுத்து வட்டம் போட்டார்.  நன்கு வளர்ந்திருந்த நீள முடி அவர் செய்கைக்கு லாவகமாய் இசைந்துகொடுத்தது. மேசையிலிருந்த மர ஸ்கேலால் எனக்கும் இசக்கிக்கும் மாறி மாறி வைத்தார். கோவத்தின் உச்சத்தில் மூச்சு வாங்க, “இன்னொரு தடவை கம்ப்ளெய்ண்ட் வந்தது... டி.சி.யக் கிழிச்சுக் கைல கொடுத்துடுவேன்... கெட் லாஸ்ட்...” என்றார். நாங்கள் வலியில் முதுகைத் தேய்த்துக்கொண்டு அறையைவிட்டு அவசரமாக வெளியேறினோம். மீண்டும் வகுப்பறைக்குத் திரும்பிய போது சாந்தா மிஸ் உட்பட அனைவரும் எங்களை ஒருவிதக் கலவரத்துடன் பார்த்தார்கள். நாங்கள், ‘வலிக்கலையே... வலிக்கலையே...’என்ற பாவனையுடன் பயத்தையும் வலியையும் மறைத்தவர்களாக இருக்கைக்குச் சென்று அமர்ந்தோம். சொல்லிச் சொல்லிச் சிரித்துக்கொள்ளும் சம்பவமாக இது எங்கள் நினைவில் தங்கிப்போனது.

வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்ததும் பஸ் பிடித்து மெலட்டூரில் உள்ள சின்ன மாமா வீட்டுக்குப் போவேன். வெண்ணாற்றில் கொண்டாட்டமாய் சனி, ஞாயிறுகள் கழியும். திரும்ப திங்கட்கிழமை அதிகாலை முதல் பஸ் பிடித்து வந்து, சோலையப்பன் தெருவிலிருந்து சைக்கிளில் நேரத்துக்குப் பள்ளிக்கூடம் வந்து சேர்வதற்குள் மூச்சு முட்டிவிடும்.

வழக்கம் போல என்னால் ஒரு தேர்வில் கூட கணக்கில் தேற முடியவில்லை. சிவப்பு மையில் அடிக்கோடிடப்பட்ட மதிப்பெண்களுக்கு வீட்டில் பதில் சொல்லி மாளவில்லை. வீரமணி, விக்னேஷ், என்ற இருவர் மட்டும் நானூற்றுக்கும் மேல் போட்டி போட்டு மதிப்பெண்கள் வாங்கி கே.வி.எஸ்.ஸின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள். ‘பத்தாம் வகுப்பில் பாஸ் ஆவேனா..?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வியின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அரையாண்டுத் தேர்வு வரை பொறுத்துக்கொண்ட நகர மேனிலைப் பள்ளி நிர்வாகம் மெல்லத் தன் கரங்களில் இரும்புக் கவசம் அணிந்து கொண்டது. அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சியடையாத பத்தாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பி.எஸ். சாரைச் சந்தித்த பிறகே வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவர் என்ற உத்தரவு வந்தது. அப்பா இதற்காக ஊரிலிருந்து வர முடியாது என்பதாலும், என் ரேங்க் கார்டில் கார்டியனாகக் கையெழுத்திடும் உரிமை பெற்றதாலும் பெரிய மாமாவை அழைத்துக்கொண்டு பி.எஸ் சாரிடம் போனேன். ஏற்கனவே அவர் கைகளில் எனது மதிப்பெண் பட்டியல் இருந்தது. வீட்டு நிலவரம் பற்றியும் பள்ளி முடிந்து வந்து படிக்கிறேனா என்றும் பி.எஸ். விசாரிக்க மாமா பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நான் ஒரு அடி தள்ளி, பவ்யமாக நின்றுகொண்டிருந்தேன்.  பாஸாக மாட்டான் போலருக்கே சார்...” எனத் திடீரென மாமா அடித்த சேம் சைட் கோலைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘இல்ல சார்... நான் பாத்துக்கறேன்... படிக்க சொல்றேன்... இனிமே சரி ஆகிடுவான் சார்...’ இப்படி ஏதாவது நம்பிக்கையாகச் சொல்லிப் பிரச்சினையிலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பார்த்தால் மனுஷன் அவரைக் காப்பாற்றிக்கொள்ள நம்மைப் போட்டுத் தாக்குகிறாரே என திகைத்துப் போய் மாமாவைப் பார்த்துக்கொண்டிருக்கையில், “பாஸ்லாம் ஆகிடுவான்... நாங்க பொறுப்பு... நல்ல மார்க் வாங்கணும்ல... அதுக்கு நீங்கதான் கேர் எடுத்துக்கணும்!” என்றார் பி.எஸ். சட்டெனத் திரும்பி சாரைப் பார்த்தேன். ‘எந்த நம்பிக்கையில் இவர் இப்படிப் பேசுகிறார். எனக்கே என் மேல் நம்பிக்கையில்லை. இதுவரை ஒரு தேர்வில் கூட கணிதத்தில் தேறியதில்லை. அரையாண்டில் வெறும் 28 மதிப்பெண்கள். பாஸாகி விடுவேன் என பி.எஸ் சாரே சொல்கிறாரே.’ வியப்பின் சரித்திரக் குறியீட்டை முகத்தில் தாங்கி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் கோச்சிங் கிளாஸில் பெண்டு நிமிர்த்தும் போதுதான் தெரிந்தது எந்த நம்பிக்கையில் பி.எஸ். அன்று அப்படி சொல்லியிருப்பார் என்று. அந்தச் சந்திப்பின் முடிவில் வீட்டாருடன் வந்து பி.எஸ். சாரைப் பார்த்ததற்கு ஆதாரமாக ஒரு சீட்டு எழுதிக் கொடுத்தார்கள். வகுப்பில் அதைக் காட்டினால்தான் அனுமதி.

கோச்சிங் கிளாஸுக்கான பட்டியல் தயாரானது. மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் சிறப்புக் கணித முகாம் தொடங்கும். இரவு எட்டு மணிவரை கூடத் தொடரும் வகுப்புகள். ஆரம்பத்தில் டியூப் லைட் வெளிச்சத்தில் வகுப்பறையைப் பார்க்க வித்தியாசமாக இருந்தது. பிறகு அதுவே பழகிப் போனது. .பி.எஸ். கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போலச் சொல்லிக் கொடுப்பார். எந்த இடத்தில் புரியவில்லை என்றாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அதை அதை அந்தந்த மாணவனுக்கு விளங்க வைத்த பிறகுதான் மேற்கொண்டு தொடர்வார்.  வாரம் ஒரு முறை டெஸ்ட் நடக்கும். செய்த தவறுகளுக்கேற்றபடிகவனிப்பும் இருக்கும். .பி.எஸ். ரொம்பவும் மென்மையானவர் என்பதால்கவனிப்புத் தேவைப் படும் மாணவர்களை வேறு ஆசிரியர்களிடம் ஆட்டோ வைத்து அனுப்பி விடுவார். .பி.எஸ்ஸின் அணுகுமுறையாலும் கற்பிக்கும் விதத்தாலும் மெல்ல மெல்ல என்னையும் அறியாமல் கணிதம் கற்கத் தொடங்கியிருந்தேன். பாஸ் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கைத் துளிர்விட்டது

நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் அரையாண்டுக்குப் பிறகு வந்தது இடைப் பருவத் தேர்வு. எதிர்பாராவிதமாக (இதில் எதிர்பார்க்க என்ன இருக்கிறது) ஆங்கிலத்திலும் ஃபெயில். ஆங்கிலத்தில் தேறாதவர்களுக்கான சிறப்பு முகாமின் D.S.P. வேறு யாருமல்ல, தலைமை ஆசிரியர் ஆர்.வி. சார்தான். கேட்டதுமே வயிற்றில் புளியைக் கரைத்தது. எப்போதும் ராமநுஜம் ஹாலில்தான் எங்களுக்கான முகாம். பெரும்பாலும் காலை ஏழு மணிக்கு வகுப்பு தொடங்கும். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்கள் எதுவும் கிடையாது. பள்ளி நாட்களில் சஃபாரியிலும் விடுமுறை நாட்களில் வேட்டியிலும் கோச்சிங் கிளாஸ் எடுக்க வருவார் ஆர்.வி. சார். பரபரப்பின்றி ஒரு பட்டத்து யானை போல அழுத்தமும் கம்பீரமும் மிக்கது அவரின் நடை. வெற்றிலை, சீவல், எப்போதும் உடன் இருக்கும். அவற்றால் நாக்கும், சரியாகக் கவனிக்காத, கேள்விக்குப் பதில் சொல்லாத மாணவர்களால் அவ்வப்போது கண்களும் சிவக்கும். ஆங்கிலத்தைக் கிட்டதட்ட ABCD-யிலிருந்து தொடங்கிச் சொல்லிக் கொடுப்பார். சிலபஸுக்கு வெளியேயும் அடிப்படையாக அறிந்திருக்க வேண்டிய be verb போன்ற இலக்கண இத்யாதிகளைத் தாய் தன் பிள்ளைக்கு ஊட்டுவது போலக் கற்க வைப்பார். அவர் வகுப்புகளில் நூறு சதவீத கவனமும் ஒன்ற வைத்திருப்போம். மெல்ல மெல்ல ஆங்கிலப் பாடத்திலும் ஒரு ஈர்ப்பு வரத் தொடங்கியிருந்தது. பொதுத் தேர்வும் நெருங்கி அருகில் வந்திருந்தது


ஆர்.வி. சார் நினைத்திருந்தால் யாரையாவது வகுப்பெடுக்கச் சொல்லிவிட்டு ஓய்வில் இருந்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. நகர மேனிலைப் பள்ளியின் நற்பெயருக்காவும் மாணவர்களின் எதிர்கால நலன் குறித்த அக்கறையாலும் தன்னலமின்றி நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்தார்.  

கோச்சிங் கிளாஸ்கள் எங்கள் அனைவரிடமும் நாங்கள் இழந்திருந்த தன்னம்பிக்கையை மீட்டுக் கொண்டு வந்தது. விடைத் தாட்களை நூலில் எப்படிக் கோர்த்துக் கட்டவேண்டும் என்பதுவரை அனைத்து மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. சாந்தா மிஸ் தன் வகுப்பு மாணவர்கள் நல்லபடியாகப் பொதுத் தேர்வு எழுத, பெரிய கடைத்தெரு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து வந்து எங்களுக்கெல்லாம் பிரசாதம் கொடுத்தார். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீதான அக்கறை அந்த அளவுக்கு இருந்தது. பொதுத் தேர்வு தொடங்கியது. என்னதான் பயம் இருந்தாலும் கணிதத் தேர்வுக்கு முந்தைய நாள், நள்ளிரவு வரை ஷார்ஜாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வைத்திருந்தார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கட் மீது அப்போதிருந்த ஆர்வமும் வெறியும் துளிகூட இப்போது இல்லை என்பது வேறு விஷயம். ஒரு மாதிரியாகக் கணக்கைச் சமாளித்து எழுதியிருந்தாலும் தேர்வு முடிவுகள் குறித்த கிலி இருக்கத்தான் செய்தது. கடைசியாக சமூக அறிவியல் பொதுத் தேர்வு. நன்றாக நினைவிருக்கிறது அன்று ஏப்ரல் 24ம் தேதி. விஜயாவில் ஜீன்ஸ் ரிலீசாகி இருந்தது. தேர்வு எழுதிய கையோடு போய் அடித்துப் பிடித்து டிக்கட் வாங்கிப் படம் பார்த்தோம். அன்றிரவு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டி. சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாள் வேறு. சச்சினின் செஞ்சுரி விளாசலில் இந்திய அணி கோப்பையை வென்றது பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதி முடித்திருந்த எங்களுக்கு moral support-ஆக இருந்தது. ஒரு மாதம் கழித்து வந்த தேர்வு முடிவுகளை என்னால் நம்ப முடியவில்லை. என் அப்பாவுக்கும் அதே மனநிலைதான். கணக்கில் 68 மதிப்பெண்கள்! மொத்தமாக 65 சதவீதத்துடன் தேறியிருந்தேன். கோச்சிங் கிளாஸ் முகாம்கள் செய்த மகத்துவம்தான் அது

குடும்பச் சூழலால் நகர மேனிலைப் பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு திண்டிவனம் செய்ன்ட் ஆன்ஸ் பள்ளியில் பதினோறாம் வகுப்பு சேர வேண்டியதானது.

நகர மேனிலைப் பள்ளியில் பயின்ற அந்த நாட்கள், ஆசிரியர்கள், குறிப்பாகத் தலைமை ஆசிரியர் ஆர்.வி., எஸ்.ஜி.என்., கே.டி.எஸ்., .பி.எஸ்.,  ஆகியோர் பசுமையாக நினைவில் தங்கிவிட்டார்கள்.

ஆண்டுகள் உருண்டோடின. ஆர்.வி. சார் ஓய்வு பெற்றதாகக் கேள்விப் பட்டேன். பி.எஸ். தலைமை ஆசிரியர் என்றார்கள். ஒரு முறை கும்பகோணம் வந்த விடுமுறை நாளில் பள்ளிக்கூடத்திற்குப் போய் யாருமில்லாத வேப்ப மரத்தடியில் சற்று நேரம் உட்கார்ந்திருந்தேன். ஒன்பதாம் வகுப்பின் போது சுதந்திர தின நிகழ்ச்சிக்காக சலங்கைகளுடன் ஒத்திசைவுப் பயிற்சி செய்தது நினைவுக்கு வந்தது. பறவைகள் கூடு திரும்பும் வேப்ப மரங்களும் நானும் மட்டுமே இருந்த அந்த மாலைப் பொழுதில், அன்று நூற்றுக்கணக்கான எங்கள் சலங்கைகளிலிருந்துஜல் ஜல்லெனப் பேரிரைச்சலாய் வந்த சத்தம் மீண்டும் என் காதுகளில் ஒலித்தது. கணித மேதை ராமாநுஜமும் இன்னும் பல அறிஞர்களும் நடமாடிய மண்ணைக் கையில் அள்ளிச் சிறிது நேரம் வைத்திருந்துப் பின் மீண்டும் கொட்டிவிட்டு மனமின்றி அங்கிருந்து எழுந்து வந்தேன்.

சென்னை வந்த பிறகு அவ்வப்போது இசக்கி முத்துவைச் சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு சந்திப்பிலும் பழைய நினைவுகளைப் பேசும்போது நகர மேனிலைப் பள்ளியும், தலைமை ஆசிரியர் அறைக்குப் போய் வாங்கின அடிகளும் தவறாமல் வந்துவிடும். பேச்சின் முடிவில், “கும்பகோணம் போனா ஆர்.வி. சாரை ஒரு தடவைப் பார்த்துப் பேசிட்டு வரணும்டாஎன்பேன். அவனும் அதை ஆமோதிப்பான். ஆனால், இன்றுவரை அந்தப் பேச்சு பேச்சாகவே இருக்கிறது.

இந்நிலையில்தான் நேற்று நகர மேனிலைப் பள்ளியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு விழா குறித்தச் செய்தியும் படங்களும் முகநூலில் பார்க்க நேரிட்டது. ஒவ்வொரு படமாகப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சி. ஆர்.வி. சாரும் அந்தப் படங்களில் இருந்தார். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அந்தப் படத்தில் tag செய்யப்பட்டோரில் அவர் பெயரும் இருந்தது. கிளிக் செய்ததும் அவர் புரொஃபைல் வந்தது. நம்ப முடியாமல் friend request கொடுத்தேன். சிறிது நேரத்தில் ‘Viswanathan Rajagopalan Accepted your friend request’ என அப்டேட் வந்தது
  •  


இக்கட்டுரையில் சம்மந்தப் பட்டோரின் முகநூல் இணைப்புகள்:

ஆர்.வி. சார்.

இசக்கி முத்து

முரளி மனோகர்

5 comments:

  1. ஸ்பெஷல் கிளாஸ் எனக்கும் RV எடுத்திருக்கிறார்.
    நான் GK sirட்ட தான் அடி வாங்கிருக்கேன். என்னா அடி....
    :(
    :)
    -முருகராஜ்

    ReplyDelete
  2. உங்கள் ஆசிரியப் பெருமக்களுக்கு எங்கள் வணக்கங்கள்.

    ReplyDelete
  3. I was a student in THSS in 6th to 10th...1988 - 1992 An average student. Settled in Chennai. Seeing your words in FB it made me run back to my school days and even childhood and made me shed tears. Thanks for the out let you have given here. keep in touch Murali Manohar.

    ReplyDelete
    Replies
    1. thanks for reading everyone... yea sure Devi P K...

      Delete

Share