https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Saturday, March 26, 2022

’ஆறு மனமே ஆறு’ - சிறுகதை: ச. முரளி மனோகர்

டுக்கையில் கதிரின் இடது கை துழாவிக் கொண்டிருந்தது. உறக்கம் முற்றாகக் கலையாத அவன் கண்கள் மூடியிருந்த நிலையில் அனிச்சையாகக் கை மட்டும் அப்பாவைத் தேடியது. எட்டு வயதான அவனுக்கு அப்பாதான் எல்லாம். நிதம் தகப்பனிடம் கதை கேட்டு அணைத்தபடி உறங்கிப் பழகியவனுக்கு கொஞ்ச நேரமாக அந்த அணைப்பு தட்டுப்படவில்லை. படுக்கையில் தன் இடக்கையால் தேடிச் சலித்த கதிர் ஒரு நிலையில் மெள்ளக் கண் திறந்து பார்த்தான். நீல நிறத்தில் இரவு விளக்கின் சன்னமான ஒளி அந்த அறையில் நிரம்பியிருந்தது. அப்பாவைக் காணாத கதிர் பழக்கமில்லாத அந்தப் புதிய அறையைச் சுற்றி சுற்றி பார்த்தான். “அப்பா...” எனப் பயம் கலந்து மெலிதாகக் கூப்பிட்டான். அறையில் குளிரூட்டியபடி இருந்த ஏர் கண்டிஷனரின் சத்தம் தவிர ஏதும் இல்லை. தயக்கமும் பயமுமாகப் படுக்கையிலிருந்து எழுந்த கதிர் சின்ன தடுமாற்றத்துடன் குளியலறைக்கு அருகில் சென்று கதவில் கை வைத்தான். கதவுத் திறந்துகொள்ள உள்ளே மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்கும் அப்பாவைக் காணவில்லை. 

சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் கதிரவனும் மணிமாறனும் கும்பகோணத்திற்கு ரயிலில் வந்து சேர்ந்திருந்தார்கள். மறுநாள் காலை மணிமாறனின் நண்பனுக்குத் திருமணம். அதற்காகத்தான் சென்னையிலிருந்து அப்பாவும் பிள்ளையுமாகச் சென்னையிலிருந்துக் கிளம்பி வந்திருந்தார்கள். மணிமாறன் கும்பகோணத்துக்காரன்தான் என்றாலும் கல்லூரியில் கணிணி அறிவியல் படிப்பு, தொடர்ந்து கிடைத்த மென்பொருள் நிறுவன வேலை என அவன் பதினைந்து ஆண்டுகளாகச் சென்னைவாசி ஆகியிருந்தான். குறையில்லாச் சம்பளத்துடன் உடன் வேலை செய்து வந்த நிர்மலாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அவர்களுக்கு கதிரவன் பிறந்த பிறகு இந்த எட்டு வருடங்களாக அப்பா பிள்ளை இருவருக்கும் மற்றவர்தான் உலகம். வேலை, பள்ளி, நேரங்கள் தவிர இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்திருந்ததே இல்லை. அப்படியிருக்க நண்பனின் திருமணத்திற்காக கும்பகோணம் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், இப்படி நள்ளிரவு நேரத்தில் மகனைத் தனியே விட்டு மணிமாறன் அப்படி எங்கேதான் சென்றிருப்பான்? 

உறக்கமும் பதட்டமுமாக அறையைச் சுற்றி வந்த சிறுவன் கதிரவன் தொலைபேசியை எடுத்து எண் ஒன்பதை அழுத்தினான். நீண்ட நேரத்திற்கு பிறகு மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது. “எங்க அப்பாவைப் பாத்தீங்களா..?” என ஏக்கத்துடன் கேட்டான் கதிர்.

மேலக்காவேரியின் நான்காம் படித்துறையில் கால் வைக்க முடியாத அளவிற்கு மதுப் புட்டிகளின் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் சிதறிக் கிடந்தது. சூழ்ந்திருந்த நடுநிசியின் பேரமைதியில் செருப்புக் காலுடன் அங்கே நின்றுகொண்டிருந்தான் மணிமாறன். சற்று தொலைவில் ஆற்றங்கரையை ஒட்டினச் சிறு வீடுகளுக்காகத் தெருவில் போடப்பட்டிருந்த மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்தபடியிருந்தது. நின்று நின்று வந்த அந்த வெளிச்சத்தில் காவிரி ஆற்றையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், மணிமாறன். அது சூலை மாதம். குறுவைக்குத் திறக்கப்பட்ட காவிரி, கரையின் இருமருங்கையும் தொட்டுக்கொண்டு ஓட வேண்டிய காலம் அது. மணிமாறன் அப்போது நின்றிருந்த படிக்கட்டில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் எனக் காவிரியோடு கலந்தே வளர்ந்த அவன் நன்கறிவான். ஆனால், அன்று அவன் இமைக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது கீழே இன்னும் பத்து படிக்கட்டுகள் உடைந்த கண்ணாடிச் சில்லுகளும், நெகிழிக் குப்பைகளுமாக இறைந்து கிடந்தது. அதற்கும் கீழே களிமண் தரையில் ஆங்காங்கே சிறுசிறு செடி வகைகள் மண்டி வளர்ந்திருக்க மணல் என்ற மேலாடையின்றிப் பரிதாபமாகக் கிடந்தாள் காவிரித்தாய். ஆம். காவிரி அவனுக்கும் தாய்தான். அதனால்தான் நெடுங்காலத்திற்குப் பிறகுச் சொந்த ஊர் வந்த அவன், எப்போதும் பிரிந்திராதத் தன் எட்டு வயது மகனைக் கூடத் தனிமையில் விட்டுவிட்டுத் தாயைக் காணத் தேடி ஓடி வந்திருந்தான். 

தூரத்தில் எதிர்க் கரையை ஒட்டி மட்டும் கொஞ்சமாக நீர் இருப்பது வெளிச்சத்தில் மினுங்கித் தெரிந்தது. அதிலும் ஓட்டம் இல்லை, தேக்கம்தான். அக்கம் பக்கத்திலிருந்து கழிவு நீர் வந்து கலந்தபடி இருக்க வேண்டும். சாக்கடைத் துர்நாற்றம் சுற்றிலும் வீசியபடியிருந்தது. மணிமாறன் மெள்ளப் படிகளில் இறங்கி ஆற்றில் கால் வைத்தான். நீருக்குள் மணலும் மணலுக்குள் காலுமாகப் பொதபொதவென இறங்கிப் பழக்கப்பட்ட அதே கால்கள், அன்று கட்டாந்தரையாகக் கிடந்த ஆற்றில் பாதங்களை வைக்கையில் அவனுக்கு கூசியது. இனம்புரியாத ஓர் இயலாமையின் அழுத்தமும் இறுக்கமும் அவன் உள்ளமெங்கும் நிறைந்திருந்தது. அவனோடு அந்த ஆற்றில் உருண்டு பிரண்டு விளையாடி வளர்ந்த நண்பர்கள் கூறத் தற்காலக் காவிரி ஆற்றின் நிலையை ஓரளவு அவன் அறிந்திருந்தான் என்றாலும் இத்தனை மோசமாக இருக்கும் எனக் கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை. மெள்ள நடந்து ஆற்றின் மையப் பகுதிக்கு வந்தான். அந்நேரத்திலும் சற்று தொலைவில் நான்கைந்து ஆண்கள் நட்டாற்றில் அமர்ந்துச் சத்தமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மணிமாறன் சில நொடிகள் அவர்களைப் பார்த்தபடி நடந்து வரச் சட்டென அவன் கால்களில் அந்த மாற்றத்தை உணர்ந்தான். அவன் வந்து சேர்ந்திருந்த இடத்தில் காலுக்குக் கீழே ஒரு இருபதடித் தூரத்திற்கு மணல் திட்டு ஒன்று மிச்சமிருந்தது. சோர்வாக உணர்ந்த அவன் சுற்று முற்றும் ஒரு முறைப் பார்த்துவிட்டு அப்படியே அந்த மணல் திட்டில் அமர்ந்தான். குப்பைக் கூளங்களாலும் கழிவுகளாலும் அசுத்தப்படுத்தப்பட்டு, மணல் படிமம் மொத்தமாகக் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு மோசமான நிலையில் இருந்தாலும் அவனைப் பொறுத்தவரையில் காவிரி அவனுக்கு தாய். அதை அவன் மனதார நம்பினான். நீண்டதொரு பெருமூச்சு விட்டு அப்படியே அந்த மணலில் சாய்ந்து வானம் பார்த்துப் படுத்தான், மணிமாறன். மேகங்கள் சூழாத வானில் விண்மீன்கள் சோபையாகத் தெரிந்தன. பக்கத்தில் ஒற்றைத் தவளையொன்று சீரான இடைவெளியில் கத்தியபடி இருந்தது அவனை ஏதோ விசாரிப்பது போல இருந்தது. காவிரி அவன் ஆழ் மனதில் கம்பீரமாக ஓடத் தொடங்கியது. 

ள்ளி நாட்களில் ஜூன் மாதப் பாதியில் தொடங்கி டிசம்பர் வரை மணிமாறனுக்கு காவிரிதான் அளவற்ற களிப்பை அள்ளி அள்ளி வழங்கும். காலை எட்டு மணி வாக்கில் அந்த நான்காம் படித்துறைக்கு வந்தானேயானால் எட்டு மணி வரை நீர் வரத்துக்கு ஏற்ப நீடித்திருக்கும் அவனது ஆனந்தக் குளியல். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் அவனது பெரும்பாலானப் பகல் பொழுதுகள் காவிரியோடுதான் கரையும். ஆற்றங்கரையை ஒட்டிய வீடுகளின் பிள்ளைகளைக் கண்டால் அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருக்கும். அவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து ஆற்றையே அதகளம் செய்துகொண்டிருப்பார்கள். மணிமாறன் தனியன். சிறு வயதிலிருந்தே எவரோடும் எளிதில் பேசிப் பழகிடாதவன். ஆற்றங்கரை வீட்டுப் பிள்ளைகளின் அட்டகாசத்தை உள்ளூர ரசித்தபடியே அவன்பாட்டுக்குத் தனியாகப் படித்துறையின் உச்சி மேடையிலிருந்து குதித்து நீந்தி விளையாடிக் குளித்துவிட்டு மணி ஆனதும் ஆடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பிவிடுவான்.
சனி, ஞாயிறுகளில் வீட்டில் காலை உணவை முடித்துக்கொண்டு காவிரிக்கு வந்தால் மத்தியானம் மூன்று - சில சமயம் நான்கு - என அவன் வீடு திரும்ப மணி ஆகியிருக்கும். காவிரியில் ஊறிய அவன் கண்கள் சிவசிவக்க, உள்ளங்கை கால்களின் வெள்ளைத் தோல்கள் சுருங்கிப் போயிருக்கும். வாரந்தவறாமல் வீட்டில் அதற்காக வாங்கும் திட்டுகளோ, அடிகளோ, அவனுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. அவனது கவலையெல்லாம் சனிக்கிழமையாக இருந்தால் அடுத்த நாள் விடியல் குறித்தோ, ஞாயிற்றுக் கிழமை என்றால் அடுத்தவாரச் சனிக்கிழமையின் வருகை குறித்தேதான் இருக்கும். 

அந்த நாட்களில் கரை புரண்டோடும் காவிரியின் மென் பச்சை நிற நீர்ப் பிரவாகம் காணவே ஆனந்தமாயிருக்கும். நீரோட்டத்திற்கு அடியில் மணல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும் வெள்ளம் பந்து போல வளையம் வளையமாக மேலெழும்பிக் கொப்பளிக்கும். ஆற்றங்கரைப் பிள்ளைகள் படித்துறையின் உச்சி மேடையிலிருந்து போடும் தண்ணீர் எழும்பல் குதியைக் காணவே சிறப்பாக இருக்கும். நீரைப் பிளந்துகொண்டு அவர்களின் உடல் தண்ணீருக்குள் அமிழ்ந்ததும் சுற்றிலும் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முட்டிக்கொள்ளும் வெள்ளம் அருகில் உள்ள அரச மரத்தின் உச்சி வரை நீர்த் திவலைகளாக எகிறும். மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை குருவிக் கூட்டமெல்லாம், எழும்பி மேலே வரும் அந்த நீர்த்திவலைகளோடுச் சிறகசைத்துப் படபடத்துப் பறந்து, மீண்டும் அடுத்த குதியலுக்கு அணியமாகிக் கிளைகளில் போய் அமர்ந்துகொள்ளும். எழும்பியத் தண்ணீர்த் துளிகள், அக்கம் பக்கத்தில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்கள் மேலெல்லாம் ஆலங்கட்டி மழை போலச் சிலுசிலுவென்று விழும். அவர்களில் யாரும் அதற்காக முகம் சுழித்தோ, வசை பாடியோ அங்குள்ள யாரும் எப்போதும் பார்த்ததே இல்லை. யாருடைய குதியால் அதிக உயரம் தண்ணீர் எழும்பியது என ஆற்றங்கரைப் பிள்ளைகளுக்கு இடையே பெரிய போட்டியே நடக்கும். ஏழெட்டு வயதுள்ள சிறுவர்கள் முதல், இருபது இருபத்தைந்து வயதுகளில் உள்ள இளைஞர்கள் வரை, அவரவர் வயதினரோடு நடந்து கொண்டிருக்கும் அந்தக் குதியாட்டத்தைப் பார்த்தபடி இருக்கும் மணிமாறனுக்குத் தானும் அதுபோல ஒரு நாள் குதிக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.

’தண்ணி எம்பல்’ குதிக்க ஒரு தனித்த பயிற்சி தேவை. குதிப்பவனுக்கு உச்சி மேடையில் தான் எம்பியதிலிருந்து ஆற்றுத் தண்ணீரின் மட்டத்தைத் தொடும் கால இடைவெளிக்குள் தன் உடலை ஒரு கவண் போல ஆக்கிக்கொள்ளும் திறமை தேவை. அதாவது, உடம்பின் இடைப் பகுதியைப் புவி ஈர்ப்பு மையத்தின் புள்ளியாக்கி மேலுடம்பையும் கால்களையும் சரியானக் கோணத்தில் கவண் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். அது மட்டுமின்றி முழங்கால்களை மடக்கி ஒன்றின் குறுக்கே மற்றொன்றை வைத்துக்கொள்வது முக்கியம். இதெல்லாவற்றையும் உச்சி மேடையிலிருந்து புறப்பட்டுத் தண்ணீர் மட்டத்தை அடைவதற்குள் ஒருவன் முழுமையாகச் செய்து விட்டானென்றால் அவன் ஒரு வெற்றிகரமானத் தண்ணி எம்பல்காரன். அவன் குதியலின் விளைவாக ஏற்பட்ட வெற்றிடத்தில் மோதி எழும்பியத் தண்ணீர் அரச மரத்தின் உச்சிக் கிளையை நிச்சயம் தொடும். அப்படி நேர்த்தியாக வளைக்கப்பட்ட உடல் ஆற்றில் விழும்போது ஏற்பட்டச் சத்தத்தைவிட நீரைப் பிளந்து அந்த உடல் உள்ளே அமிழ்ந்த பிறகு உருவாகும் வெற்றிடத்தில் மோதும் தண்ணீரின் சத்தமே ஒரு பெரிய வெடிச் சத்தம் போலக் கேட்கும்.

மணிமாறனுக்குத் தண்ணி எம்பல் குதிக்க நிரம்ப ஆசை. ஆனாலும் ஒரு கத்துக்குட்டியான அவன் பெரிய பெரிய வித்தைக்காரர்களாக இருக்கும் ஆற்றங்கரைப் பிள்ளைகளோடு சரிக்கு சமமாகப் போய் குதிக்க கூச்சப்பட்டான். அவர்கள் அதிகமில்லாத நேரங்களாய்ப் பார்த்து தண்ணி எம்பல் பயிற்சியை அவன் விடாமல் செய்து பார்க்க ஆரம்பித்தான். பல நேரங்களில் அவனுக்கு நாசியில் நீர் புகுந்துப் புறையேறியது. வேறு வழியின்றி அவன் தன் இடக்கையால் மூக்குத் துவாரங்களை மூடியபடிக் குதிக்க ஆரம்பித்தான். மற்றவர்கள் குதிக்கும் போது மோதி எழும் தண்ணீரின் சத்தத்தை அவன் கவனமாகப் பார்த்து உள்வாங்கிக் கொண்டான். தான் குதித்து நீருக்குள் அமிழ்ந்ததும் தலைக்கு மேலே மோதி எழும்பும் தண்ணீரின் சத்தத்தை அடியாழத்திலிருந்தே கூர்ந்து கேட்டான். மாதக்கணக்கில் தொடர்ந்த பயிற்சியின் விளைவாக ஒரு நாள், குதித்து அவன் நீருக்குள் மூழ்கிய பிறகு, வெளியே மோதியத் தண்ணீரிலிருந்து வெடிச்சத்தம் போலக் கிளம்பியதைக் கேட்டான். 

பத்தடி ஆழத்திற்குள் காவிரிக்குள் மூழ்கிக் கிடந்த மணிமாறன், பரம திருப்தியோடு அன்று புன்னகைத்தான். அவனைப் பொறுத்தவரையில் அது ஒரு பெரிய சாதனை. அன்று முழுவதும் தனது தண்ணி எம்பல் சாதனை பற்றியே எண்ணியிருந்து வகுப்பாசிரியரிடம் வசமாக மாட்டி வாங்கிக் கட்டிக்கொண்டான்.

தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட மணிமாறன், பின்னாட்களில் தானும் வரிசையில் சென்று ஆற்றங்கரைப் பிள்ளைகளோடுத் தண்ணி எம்பல் போட்டுக் குதிக்க ஆரம்பித்தான். மணிமாறன் தன் பதினான்காவது வயதில் காவிரியில் தேர்ந்த ஆறோடியாகி இருந்தான். நீரின் இழுப்பு அதிகமான நாட்களில் எதிர் நீச்சலும், கரை புரண்டோடும் வெள்ள நாட்களில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச் செல்வதும் அக்காலகட்டத்தில் அவன் மனதிற்கு நெருக்கமான விளையாட்டுகள். 

காவிரி, சாமிமலையைக் கடந்துதான் கும்பகோணம் வரும். சாமிமலையில் ஆற்றங்கரையை ஒட்டிச் செழித்து வளர்ந்திருக்கும், நாட்டுக் கொய்யாத் தோப்புகள். உட்புறம் செக்கச் செவேலென்றிருக்கும் சாமிமலை நாட்டுக் கொய்யாப் பழங்கள், அவற்றின் சுவைக்காகச் சுற்று வட்டாரத்தில் பேர் போனவை. ஆடி மாதத்தின் காற்றடி நாட்களில் கரையை ஒட்டியுள்ள தோப்பு மரங்களிலிருந்து உதிர்ந்து விழும் பழங்கள், ஆற்றில் மிதந்து வந்து நீந்திக் களைத்திருக்கும் மணிமாறனின் பசி போக்கும். 

கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக்குழந்தைகளின் நினைவாகத் தற்போது காவிரி ஆற்றை ஒட்டி பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுப் பூங்கா இருக்கும் இடத்தில்தான் மணிமாறனின் அக்காலப் பள்ளி நாட்களில் நகராட்சியின் காய்கறிச் சந்தை இருந்தது. சாமிமலையிலிருந்தும் சுற்றிலும் உள்ள சிறுசிறு ஆற்றங்கரைக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த மா, வாழை, கத்தரி, வெண்டை, முருங்கை, போன்ற காய்கறிகளைக் கும்பகோணத்தின் நகராட்சி சந்தைக்கு காவிரியாற்றின் வழியாகத்தான் அப்போது கொண்டு வருவார்கள். விளைந்த காய்கறிகளின் பசுமை மாறாமல் கொய்து மூங்கில் கூடைகளில் நிரப்பி, தண்ணீரில் மிதக்கும் விதமாக பெரிய தகரக் குவளைகளைத் அடிப் பகுதியில் வைத்து உருவாக்கப்பட்ட தோணிகளில் ஏற்றிக்கொண்டு காவிரியின் நீரோட்ட வேகத்தில் உற்சாகமாகக் மிதந்து செல்லும் விவசாயிகளை வியந்து பார்ப்பான் மணிமாறான். என்றாவது ஒரு நாள் சாமிமலைக்குப் போய், அவர்களிடம் எப்படியாவது கெஞ்சி அனுமதி பெற்று, இது போலக் கும்பகோணம் வரைத் தோணியில் மிதந்து வர வேண்டும் என அவன் மனதிற்குள் ஆசைப்பட்டதுண்டு. கடிந்தோடிய காலம் அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்கவே இல்லை. 

பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரிப் படிப்பிற்காகச் சென்னை வந்த மணிமாறன், படிப்பை முடித்ததும் வேலை, திருமணம், குழந்தை, குடும்பம், எனத் தொடர்ந்து சென்னையிலேயே வாழப் பழகிவிட்டான். சென்னைவாசி ஆன பிறகு சில மாதங்களுக்கு ஒரு முறை என்றிருந்த அவனின் கும்பகோணப் பயணம், படிப்படியாக ஆண்டுக்கொரு முறை, பின்னர் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஆகிவிட்டது. அரிதாக நிகழும் அவனது கும்பகோணப் பயணம் ஒவ்வொன்றின் போதும் கண் முன்னே வறண்டு சுரண்டப்பட்டு வரும் காவிரியைப் பார்த்து யாரும் அறியாமல் மனதிற்குள் கலங்குவான். காவிரி தனக்குள் கலந்திருந்த அந்தப் பால்ய நாட்களை அவன் தன் ஆயுட்காலம் முழுமைக்கும் மறக்க மாட்டான். 

மூடியிருந்த மணிமாறனின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளியொன்று அவன் படுத்திருந்தக் காவிரியின் மணலில் விழுந்தது. அப்போது சத்தமாக அவன் அலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் கேட்டு அருகிலிருந்து குரல் எழுப்பிக்கொண்டிருந்த ஒற்றைத் தவளைச் சட்டெனத் தன் வாயை மூடிக்கொண்டது. பழைய நினைவுகளில் கரை புரண்டு ஓடியக் காவிரியில் மூழ்கியிருந்த மணிமாறன், பதட்டத்துடன் நிகழ் உலகிற்கு வந்து தன் கால் சட்டைப் பையிலிருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஏதோ புதிய எண்ணிலிருந்து வந்து கொண்டிருந்தது அழைப்பு. ஏற்று காதில் வைத்தான். அவர்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் பேசிவிட்டு இணைப்பை கதிரிடம் கொடுத்தார். மறுமுனையில் “அப்பா... ” என ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டுச் சத்தமாகக் கதறி அழுதான் கதிர். 

சுதாரித்து எழுந்த மணிமாறன், “கதிரு... அழாதடா. அப்பா இங்கதான் பக்கத்துல இருக்கேன். இதோ வந்துடறேன் பார்...” எனக் காதில் அலைபேசியை வைத்திருந்தபடிச் சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஓடத் தொடங்கினான். 

“எங்கப்பா போனீங்க..?” எனச் சற்றே சமாதானம் ஆனவனாக கேட்டான் கதிர். 

“எங்க அம்மா ஒருத்தவங்க உடம்புக்கு முடியாம இருக்காங்கப்பா. அவங்களைப் பாக்கலாம்னு போனேன்...” 

 “ஏன் எங்கிட்டச் சொல்லல? என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாம்ல?” 

“நீ அசதியா தூங்கிகிட்டிருந்த. அதான் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோமேன்னு நான் மட்டும் கிளம்பி வந்துட்டேன்... சாரிப்பா. அப்பா அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன், சரியா...” 

தொலைவில் மணிமாறன் ஓட்டமும் நடையுமாகச் செல்வதைப் பார்த்தபடி அந்தத் தவளை மீட்டும் சத்தமிடத் தொடங்கியது. கிட்டதட்ட விடிய ஆரம்பித்திருந்தது. 

கும்பகோணத்தில் திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு அன்று முற்பகலிலேயே ரயிலில் புறப்பட்டுச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் மணிமாறனும் கதிரும். நீளமானக் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மேல் ரயில் கணத்த சத்தத்துடன் தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது. ரயிலின் சன்னலுக்கு வெளியே பக்கவாட்டில் அதிகச் சத்தத்துடன் கடக்கும் ஆற்றுப் பாலத்தின் பெரிய பெரிய இரும்புத் தூண்களைக் கதிர் வியப்புடன் பார்த்தபடி இருந்தான். மணிமாறன் பாலத்திற்கு கீழே தேங்கியிருந்த தண்ணீரையே பார்த்தபடி வந்தான். சிறு வயதில் மணிமாறன், தன் அப்பாவுடன் அதே கொள்ளிடப் பாலத்தைத் ரயிலில் கடக்கும்போது அவர் சொன்ன தகவல் ஒன்று அவன் நினைவுக்கு வந்தது. அண்ணாத்துரை இறந்த சேதி கேள்விப்பட்டு தஞ்சை மாவட்ட மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக மதறாசுக்கு கிளம்பினார்கள். பேருந்துப் போக்குவரத்து அவ்வளவாகக் கிடையாது. ரயிலுக்கு உள்ளே இடம் இல்லாமல் நூற்றுக் கணக்கானோர் அதன் மேற்கூரையில் அமர்ந்து பயணப்பட்டார்கள். அந்த ரயில், வேகமாக இந்தக் கொள்ளிடப் பாலத்தில் நுழையும்போது அமர்ந்திருந்தவர்களில் பலர் எழுந்து பார்க்க முயன்று பாலத்தின் மேற்பரப்பு தூண்களில் தலை அடிபட்டுச் செத்தார்கள். 

அப்பா தனக்குச் சொன்ன அந்தத் தகவலை மகன் கதிருக்குச் சொல்லலாமா என மணிமாறன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனது அலைபேசி அழைத்தது. எடுத்துப் பேசினான். மறுமுனையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு நீச்சல் பயிற்சி மையத்திலிருந்து அழைப்பதாகவும் கதிரவனுக்கு அடுத்த நாள் காலை முதல் நீச்சல் வகுப்புகள் தொடங்குவதை நினைவூட்ட அந்த அழைப்பு என்றும் ஒரு பெண்மணி நளினமான ஆங்கிலத்தில் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்ட மணிமாறன், நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்தான். 

நீளமாகத் தொடர்ந்த ரயிலின் பெட்டிகளில் மக்கள் நிறைந்து அமர்ந்திருந்தார்கள். மணிமாறனுக்கு எதிர்த்திசையில் சற்று தொலைவில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் தன் கணீர்க் குரலில், ”ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு; ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” எனத் தொடங்கிப் பாடியபடி தன் கையில் பிடித்திருந்த குச்சியால் வழியைத் துழாவிக்கொண்டு மெள்ள நடந்து வந்தார். சற்றும் எதிர்பாராமல் திடீரென அந்தப் பாடலைக் கேட்ட மணிமாறன் உணர்ச்சி வயப்பட்டான். அவனை மீறிக் கண்களிலில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பாடலைக் கேட்டு ரயிலின் சன்னல் பக்கமிருந்துத் திரும்பியிருந்த கதிர், எதேச்சையாகத் தன் அப்பா கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தான். கதிர் தன்னைக் கவனிப்பதை உணர்ந்த மணிமாறன், கைக்குட்டையை எடுத்துக் கண்களை, முகத்தைத் துடைக்கும் விதமாக மூடிக்கொண்டான். என்ன நினைத்தானோ, கதிர் சட்டெனத் தன் அப்பாவைக் கட்டிப் பிடித்தபடி மடியில் சாய்ந்துகொண்டான். தொடர்ந்து பாடி வந்த, நடுத்தர வயதில் வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்த அந்த பார்வையற்ற நபர், மணிமாறன் அமர்ந்திருந்த இடத்தருகே வரும்போது, 

 ’ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் 
 அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
 இதில் மிருகம் என்பது கள்ள மனம் 
 உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த 
ஆறு கட்டளை அறிந்த மனது 
 ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் 
 ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’  எனப் பாடியபடியே கடந்தார்.

தொடர்ந்து அவர், ’ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு; சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு, தெய்வத்தின் கட்டளை ஆறு’ எனப் பாடியபடி மெள்ள நடக்க, அந்த ரயில் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை விரைந்து கடந்துகொண்டிருந்தது. 

 - ச. முரளி மனோகர்.

Tuesday, November 16, 2021

Murali Manohar As an Associate of Director Shankar!

Murali Manohar Receiving National Award from Honorable President of India

'Karna Motcham' is a Tamil short film which has won National Award in the year 2008 for Best Art and Cultural Film. Karna Motcham has also won 3 Tamil Nadu State Awards Including Best Direction and Cinematography.


THE CITATION (for national award)
"Using powerful imagery and ironical juxtaposition, the film depicts the life of a KOOTHU artist. With subtlety, it captures the frustration and the hopelessness of a performer, whose art is a misfit in a changing cultural world."


While Receiving Best Arts / Cultural Film,
National award from Honorable President Of India for Karna Motcham.


 

The Certificate for Best Arts/Cultural Film, National Award.



The Prestigious National Film Award Medal.

Video of Murali Manohar Receiving National Award from President Of India


Karna Motcham, Tamil Short Film With English Subtitles.

Murali Manohar Receiving Best Director Tamil Nadu State Award from former Chief Minister of Tamil Nadu

'Karna Motcham' is a Tamil Short Film which has won 3 Tamil Nadu State Awards Including Best Direction and Cinematography.


While receiving Best Director Tamil Nadu State Award from former Chief Minister of Tamil Nadu.


The Certificate for Best Director, Tamil Nadu State Award with Former Chief Minister of Tamil Nadu's Signature.


Sunday, July 16, 2017

நினைவாறு

சர்ரட் சர்ரட், எனத் தன் இழைப்புள்ளியால், கண்டியூர் மகாலிங்கம் ஆசாரியின் உறவினர் தாராசுரத்தில் எங்கள் புதிய வீட்டுக் கதவை இழைத்துக் கொண்டிருந்தபோது பார்த்துக் கொண்டேயிருப்பேன். தாடியும் மீசையுமாக இருபத்தைந்து வயசில் இருந்திருப்பார். மினி டேப் ரெக்கார்டரில் தி.மு.க. கூட்டங்களில் பேசிய கலைஞரின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டும், இடையிடையே அலுப்பு தட்டாமலிருக்கத் தன் உதவியாளரிடம் அதைச் சிலாகித்துப் பேசிக்கொண்டும் இருப்பார். புதிதாய்க் கட்டப்பட்டுக்கொண்டிருந்த வீடு அது. ராஜராஜன் நகரில் ஒன்னாம் நம்பர் ப்ளாட். ரெண்டாம் வகுப்பிலிருந்தேன். வீட்டுக்கு எதிரே மிட்டாய்கடை தனபால் வீட்டிலிருந்து கடலை மிட்டாய், குலோப் ஜாமூன்களை ஆவி குறையும் முன் அதனதன் வார்ப்புகளில் வார்க்கும் வாசனை வந்துகொண்டே  இருக்கும்.

களிமண்ணைக் காலால் மிதித்து வார்த்துக் கட்டிக்கொண்டிருந்த வீடு. மேலே ரயில் ஓடுகள். பக்கத்தில் ஒதியமரம். சொனைப் பூச்சி, வீட்டுக்குள்ளும் சாப்பாட்டுக்குள்ளும் ஏறிப் பயமுறுத்தும். தாத்தா மண்ணெண்ணெய் ஊற்றிய பந்தமேற்றி அவற்றைக் கருக்கிவிட்டுப் பின் எங்களைப் பார்த்துச் சிரிப்பார். மற்றபடி, மின்னிணைப்பு, மின் விளக்கு இல்லாத, அந்த வீட்டின் பெரியவர்கள் உறங்கிவிட்ட, நடுநிசியில் கனவிலும் நனவிலும் ஏராளமாய் என்னை மொய்த்திருந்த மொசுக்கட்டைகள்.

அப்பா, குடவாசல் பக்கத்தில் அடவங்குடிக்கு அருகில் கண்டியூர். வெட்டாறுச் சுழித்துக்கொண்டோடும். ஆற்றில் குளித்துக் கரையேறுகையில் மூன்று முறை ஆற்றுத் தண்ணீரைக் கையால் மோந்து வாயில் ஊற்றுவார்கள்! கோடையில் வெட்டாற்று மணலில் ஊற்றுப் பரித்துப் பித்தளை, செம்பு குடங்களில் குடிநீர் கொண்டு வருவார்கள். ஊற்று நீரைக் கோதி அள்ள எல்லோர் வீட்டிலும் 'ஊத்துப்பட்டை' என்ற பித்தளை உபகரணம் இருக்கும். முத்துச் சிப்பியின் ஓட்டில் ஒரு பாகத்தை ஒத்திருக்கும் அதன் வடிவம்.

ஆடி பதினெட்டுக்குச் சப்பரம் இழுப்போம். ஊரே கூடி ஒன்று மாபெரியதாயும் பிள்ளைகள் நாங்கள் சின்னச் சின்னதாயும். பக்கத்து வீட்டு மாரியம்மாள் மகன் பிரபாகரன்தான் லீடர். கணேசன் பெரியப்பா வீட்டிலிருந்து செல்வ குமாரும் முருகானந்தமும் உடன் இருப்பார்கள். திருவிழாக் காலங்களில் கண்டியூர் முருகன் கோயில் ஒளி விளக்குகளால் மின்னும். வீட்டிற்கு சற்று தொலைவிலிருந்த புளிய மரத்தின் உச்சியிலிருந்து ரேடியோ (அப்போது எங்களுக்கு அது ரேடியோதான்) ஒலிக்கும்.

"ஒலி ஒளி ஏற்பாட்டைத் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கிக் கொண்டிருப்பது, முருகேசன், பரகதாபாத்" என சுருட்டை முடித் தலையர் ஒருவர் முருகன் கோயில் வாசலிலிருந்து மைக்கில் சொல்வது தொலைவில் உள்ள புளியமரத்துக் குழலிலிருந்து ஊரே கேட்கும்படி ஒலிபரப்பாவதை வியந்து பார்த்துக்கொண்டே இருப்போம்.

கேப்டன் பிரபாகரன் படம் குடவாசலில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்து, எல்லாரும் போகலாம் என அழைத்தார் பக்கத்து வீட்டு மாரியம்மா அத்தை. அப்போதெல்லாம் குடவாசலுக்குப் போவதென்றால் பெரும்பாடு. கும்பகோணத்திலிருந்து 56 என்ற எண் கொண்ட பேருந்து அடவங்குடி வரை வரும். அடவங்குடியிலிருந்து வெண்ணாற்றங்கரை ஒட்டி காட்டுக்குள் நடந்தால் கண்டியூர்.

தம்பி பிரபாகரனை மாரியம்மாள் அத்தை இடுப்பில் சுமந்து நடக்க, உடன் நாங்களும் நடந்து சென்றோம், கேப்டனைப் பார்க்க.

தியேட்டரில் கூட்டம் அலைமொதியது. அடித்துப்பிடித்து ஒண்ணே முக்கால் ரூபாய் டிக்கட்டில் எட்டு பேருக்குமாக வாங்கியபின் உள்ளே போனால் உட்கார இடமில்லை. திரைக்கு முன்னால் முன் வரிசை இருக்கைக்கும் முன்னால் தரையில் அமர்ந்து படம் பார்த்தோம். 'தீ' என எழுதப்பட்டு, வரிசையாக முன்னால் தொங்கிக்கொண்டிருந்தன சிவப்பு நிறத்தில் இரும்பு வாளிகள்.

ஆவி போனவர்களாக வேர்வையில் நனைந்த ஆடைகளுடன் நடந்தே வீடு திரும்பினோம். வழியில் மாரியம்மா பரோட்டா வாங்கி எங்கள் அனைவருக்கும் சாப்பிடக் கொடுத்தார். பின் மீண்டும் நடை தொடர்கையி உறக்கம் வந்தது மட்டும்தான் நினைவு. விழித்துப் பார்க்கையில் வீட்டில் இருந்தோம்.

அப்போதெல்லாம் ஆற்றுக்கும் மணமுண்டு. கண்டியூர் போனால் போதும் பசுமை வாசம் வீசும். பின்னாட்களில் கரை புரண்டோடிய காவிரியின் நாலாம் படித்துறையிலும், மெலட்டூர் வெண்ணாற்றிலும் அந்த வாசனை எனக்குக் கிடைக்கவேயில்லை.

அதிகாலைச் சூரிய வெளிச்சத்தின் தை மாசப் பனித்துளி தாவரமெங்கும் மினுங்கும். சத்தமில்லாமல் வருடும் எங்கள் கால்களில் ஒட்டிக்கொள்ளும் பனிக்குமிழ்கள். இடையே சிணுங்கிச் சுருங்கிக்கொள்ளும் தொட்டாற்சிணுங்கிகள்.

அப்பெரும் பசுமையும் வளமையும் கொண்டிருந்த கண்டியூருக்கும் வந்தது ஒ.என்.ஜி.சி. திடீரெனத் தார்ச் சாலைகள் அமைத்தார்கள். ஏதேதோ எந்திரங்களைச் சுமந்தபடி புழுதி கிளப்பிக்கொண்டு நூற்றுக்கணக்கில் லாரிகள் கடந்து செல்வதை வியந்து பார்த்துக்கொண்டிருந்தோம். 'இனி நம்ம ஊருக்கு நிறைய பஸ் விடுவான். நல்ல காலம் வந்திருச்சு', என ஊர்ப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அந்த தொட்டாற்சிணுங்கிகளின் மடல்கள் புழுதிக்குள் தம்மை இறுக்கிக் கொண்டதன் வலி அவர்களுக்கும் எங்களுக்கும் அப்போது தெரிந்திருக்கவும் புரிந்திருக்கவும் இல்லை.

எதேச்சையாக, சில மாதங்களுக்கு முன் கண்டியூர் நினைவுகளை பேசிக்கொண்டிருக்கையில் அந்த அதிர்ச்சித் தகவலை ஆத்தா சொன்னார்.
"மாரியம்மா புத்து நோய் வந்து போய்ட்டாப்பா". தலையில் இடி இறங்கியது போலிருந்தது. இன்றைய நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களின் அவசியம் புரிந்தது.

அண்மையில் அறிமுகமான ஒரு சாலையோர பிரியாணி கடைக்குச் சென்றிருந்தேன். பார்சல் கட்டியபடியே தன் செல்பேசியின் யூடியூபில் யாரோ ஒருவரின் உக்கிரமான தமிழ்ப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான், செந்தில்.

"டேய் பார்சலை முடிச்சுட்டு ஃபோனைப் பார்றா..." எனக் கூட்டத்தில் எனக்குப் பின்னாலிருந்து வந்த குரலை அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மெள்ள அவன் செல்ஃபோனை எட்டிப் பார்த்தேன். கதிராமங்கலத்திலிருந்து அவர் பேசிக்கொண்டிருந்தார்!

Wednesday, March 5, 2014

நாலு பேரை ஈர்த்த விசை




எதிர்பாரா விதமாக இன்று மதியத்திற்கு மேல் கிடைத்த விடுப்பை கிராவிட்டி (Gravity) படம் பார்க்கப் பயன்படுத்திக்கொள்ள அலுவலக நண்பர்கள் திட்டமிட்டார்கள். 3-Dயில், அதுவும் திரையரங்கில் ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்து வெகு நாட்கள் ஆனதாலும் கிராவிட்டி பற்றிக் கேள்விப்பட்டவை, இணையத்தில் படித்தவை, நினைவுக்கு வந்ததாலும் எனக்கும் படம் பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்ட்து. உதவி படத்தொகுப்பாளர் - சத்தீஷ், உதவி இயக்குநர் - பாலா, தயாரிப்பு மேலாளர் - சரவணன் சாருடன் எனக்கும் ஒரு டிக்கெட் சொன்னேன்.

மாலை 4.20 மணிக்கு சத்யம் எஸ்கேப்பில் ஒரே ஒரு ஷோதான் ஓடிக்கொண்டிருக்கிறது கிராவிட்டி. சில தினங்களுக்கு முன் ஏழு ஆஸ்கர்களை வாரிக் கொண்டதால் புதிதாக வேறு கிராக்கி வந்திருக்கும் போல. இணையத்தில் ஹவுஸ் ஃபுல் காட்டியது. எங்கள் ஆர்வத்தையும் சூழ்நிலையையும் புரிந்துகொண்ட நண்பரும் அலுவலக நிர்வாகியுமான யோகேஷ் மிதுன், தனக்கு சத்யம் திரையரங்கில் உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி நான்கு டிக்கெட்டுகள் புக் செய்து கொடுத்தார்.

சத்யம் எஸ்கேப் மல்டிப்ளக்ஸ் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் டூ வீலர் பார்க்கிங் கட்டணம் மணிக்கணக்கில் போடுவார்கள். எப்படியும் ஒரு வண்டிக்கு அறுபது ரூபாய்க்கு மேல் ஆகிவிடும் எனக் கணக்கிட்டு சாமர்த்தியமாக சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நானும் புரொடக்ஷன் மேனஜர் சரவணன் சாரும் நடந்தே எக்ஸ்பிரஸ் அவென்யூவுக்குச் சென்றோம். முன்னதாக வந்திருந்த சத்தீஷும், பாலாவும் புக் செய்திருந்த டிக்கெட்டுகளை வாங்கி வைத்திருந்தார்கள். திரையரங்கிற்குள் நுழையும் முன் எங்கள் நால்வரையும் ஏற இறங்கப் பார்த்தபடி ஒரு ஆள் 3D கண்ணாடிகளைக் கொடுத்தார். “டேமேஜ் ஆனா பே பண்ணணும் சார்” என வார்னிங் வேறு.

கிராவிட்டி எதிர்பார்த்தது போலவே புது அனுபவமாக இருந்தது. படம் பற்றின எனது தனிப்பட்ட அனுபவத்தை ஒரு காட்சியை வைத்துச் சொல்லலாம். வின்வெளியில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சாந்த்ரா புல்லக்கிற்கு அவர் வைத்திருக்கும் ஆக்ஸிஜனின் சதவீதம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து கடைசியில் தீர்ந்தே போய்விடும். ஜார்ஜ் க்ளூனேயின் வழிகாட்டலில் ஆக்ஸிஜனுடன் உள்ள வேறொரு விண்கலத்தைக் கண்டுபிடித்து, போராடி ஒரு வழியாக அதன் ஏர் லாக் செக்ஷனின் கதவைத் திறந்து உள்ளே வந்துவிடுவார் புல்லக். அதுவரை ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திணறிக்கொண்டிருந்த சாந்த்ரா புல்லக் சட்டெனக் கிடைத்த ஆக்ஸிஜனால் கடுமையாக மூச்சு வாங்கிக் கொஞ்சம் கொஞ்சமாக ரிலாக்ஸ் ஆவார். தன் உடலோடு பொருத்தியிருந்த ஹெல்மெட், விண்வெளிப் பாதுகாப்பு உடைகள், கவசங்கள், உபகரணங்கள், அனைத்தையும் கழட்டிப் போடுவார். கிராவிட்டி இல்லாததால் அவை அங்கங்கே மிதந்து போய்க்கொண்டிருக்கும். குறைந்தபட்ச உடைகளுடன் காற்றாட சற்றே சோம்பல் முறிப்பார். 

சாந்த்ராவின் தற்காலிக நிம்மதியைக் குலைக்கும் விதமாக விதி தீ வடிவில் வரும். விண்கலத்தின் ஒரு பகுதியில் தீப் பிடித்துக்கொண்டதாக மானிட்டர் அலறும். சாந்த்ரா புல்லக் பரபரப்புடன் எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்கு மிதந்து மிதந்து விரைவார். அங்குள்ள fire extinguisher-ஐப் பயன்படுத்தித் தீயை அணைக்க முயல அது மேலும் மேலும் தீவிரமடையும். விண்வெளியில் தன்னந்தனியாக, நிராயுதபாணியாக, இப்படி ஒரு பெண் வின்கலத்தில் மாட்டிக்கொண்டு போராடுவது என்னைப் பதைபதைக்க வைத்தது. தீ படுவேகமாகப் பரவி வர நிலைமையைப் புரிந்துகொண்ட சாந்த்ரா மீண்டும் முன்பிருந்த கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து, தீப்பிடித்த பகுதிகளை தான் இருக்கும் பகுதியிலிருந்து ஒவ்வொன்றாகக் கழட்டிவிட பட்டன்களைத் தேடி தேடி அழுத்துவார். “ஏம்மா... ஏற்கனவே கொழுந்து விட்டு எரியுது... மொதல்ல அத விட்டு வெளியே போம்மா... நீ வேற ஸ்பேஸ் டிரஸ்ஸு, ஹெல்மெட்டுன்னு, எல்லாத்தையும் கழட்டிப் போட்டுட்டு உக்காந்துனுக்கிற... அதெல்லாம் வேற காத்துல மிதந்துனு போச்சு... இருக்கா எரிஞ்சிடுச்சான்னு தெரில... சாதாரணமா ஒரு பேண்ட் சட்டை போடவே ரெண்டு நிமிஷம் ஆவும்... நீ அவ்வளோ வெய்ட்டையும் எடுத்து மாட்டிகினு, ஜிப்பெல்லாம் போட்டுட்டுக் கதவைத் திறந்துட்டுப் போவணும். நெருப்பு வருதும்மா யம்மா... எரியுதும்மா... மொத ஸ்பேஸ் டிரஸ்ஸைத் தேடி எடுத்துப் போட்டுட்டுக் கிளம்பும்மா... அங்க வேற எதனா வண்டி நிக்கும்... புடிச்சி ஊர் போய்ச் சேந்துடலாம்... போம்மா...” இப்படியாக சாந்த்ரா அந்த தீப்பிடித்த விண்கலத்திலிருந்து வெளியேறும் வரை மனசு கிடந்து தவியாய்த் தவித்தது. நல்லவேளையாக வேறு யாரோ வைத்திருந்த ஸ்பேஸ் டிரஸ்ஸை மாட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார். 

உதாரணத்திற்குதான் இந்தக் காட்சியைச் சொன்னேன். மற்றபடி, படம் முழுக்கவுமே நம்மை இருக்கை முனையில்தான் அமர வைக்கிறார்கள். தொழில்நுட்ப ரீதியில் கிராவிட்டியை விவரித்து எழுத ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் சுருக்கமாக, ‘இன்னைக்கு எங்க ஆஃபீஸ்லருந்து நாங்க நாலு பேர் கிளம்பிப் போய் ஒரு படம் பாத்துட்டு வந்தோம்...’ என்ற அளவில் மட்டும் இந்தப் பதிவு. 

படம் முடிந்து வெளியேறுகையில் “பாத்துக்கப்பா... நாங்க ஒன்னும் டேமேஜ் பண்ணிடல...” என மனசில் நினைத்துக்கொண்டே அந்த 3D கண்ணாடியைப் பொறுப்புடன் ஒப்படைத்தோம். 

நானும் சரவணன் சாரும் எக்ஸ்பிரஸ் அவென்யூவீலிருந்து வெளியேறி, டிராஃபிக்குக்கிடையே சாலையைக் கடந்து, சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் உள்ள வண்டியை எடுக்க நடக்க ஆரம்பித்தோம். எங்களைப் போல வேறு சிலரும் சத்யம் தியேட்டர் பார்க்கிங்கில் வண்டி எடுக்கப் பின்னால் வந்துகொண்டிருந்தார்கள். ஏழெட்டு நிமிட நடையில் எங்களுக்கிடையேயான பேச்சு இப்படிப் போனது.

“இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தமிழ்ப் படத்துக்கு விடற மாதிரி இடைவேளைல்லாம் விடக் கூடாது சார்... இண்டர்வெல்லுக்கப்புறம் flow பிரேக் ஆகுது...” என என் ஆதங்கத்தை சரவணன் சாரிடம் வெளிப்படுத்தினேன்.

அதை ஆமோதித்தவர் சிறிது நேர யோசனைக்குப் பின், “படம் பிகினிங்லாம் கொஞ்சம் ஸ்லோதாம்மா... த்தா இங்கிலீஷ் படம்னா மட்டும் ஸ்லோவா இருந்தாலும் மூடினு பாக்கறானுங்க... தமிழ்ல கொஞ்சம் ஸ்லோவானாலும் லபோதிபோன்னு கத்துவானுங்க...” என அவர் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

“நீங்க சொல்றது சரிதான் சார்... ஆனா, ஆடியன்ஸ் இந்த மாதிரிப் படத்துக்கெல்லாம் பிரிப்பேராதான் வர்றாங்க... தமிழ்ல அப்படி இல்லேல்ல சார்... மாஸ் ஆடியன்ஸ்... எல்லாரையும் திருப்திபடுத்த வேண்டியிருக்கு... கிராவிட்டி இங்க மட்டுந்தான ஓடுது... அதுவும் ஒரே ஒரு ஷோ... இதே படம் உதயத்துலயும், தேவி கருமாரிலயும் நாலு ஷோ ஓட்ட முடியுமா சொல்லுங்க...”

மீண்டும் நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளும்விதமாகத் தலையசைத்தபடி நடந்தார். ஒயிட்ஸ் ரோடின் மாலை நேர டிராஃபிக்கில் வாகனங்கள் இரைச்சலுடன் எங்களைக் கடந்துகொண்டிருந்தன. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம். 

“ஒரு பத்து நாள் கொடுத்திருப்பானா சார், ஜார்ஜ் க்ளூனே இந்தப் படத்துக்கு கால்ஷீட்டு..?”

திடீரென இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காதவர், சமாளித்தபடி, “பத்து நாள் எதுக்கு... ரெண்டே நாள்ல முடிச்சிருப்பானுங்கம்மா... புளூ மேட் போட்டு ரூமுக்குள்ளயே சுத்த வச்சி எடுத்திருக்கப் போறானுங்க... இதுக்கு இன்னாத்துக்கு பத்து நாள்..!” எனத் தனக்கே உரிய அலட்சியத்துடன் சொன்னார்.

அதற்குள் சத்யம் பார்க்கிங்கை அடைந்திருந்தோம்.

அருகில் வந்த சரவணன் சார், “கயிறைத் தாண்டி குறுக்குல போவாத... வண்டியை இங்க விட்டுட்டு அங்க போய் படம் பாத்துட்டு வர்றோம்னு கண்டுபிடிச்சிடப் போறானுங்க... வா... அப்படி சுத்தியே போவோம்...” என எச்சரித்தார். அவர் சொல்படியே சுத்திக்கொண்டு போய் வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகம் திரும்பினோம்.

Thursday, February 13, 2014

உன் நினைவில் என் கனாவே..!




“தமிழை மறந்துடாத… தாத்தாவை மறந்துடாத…” தான் இயக்கி, ஒளிப்பதிவு செய்து, தொகுத்து, நடிக்கவும் செய்த தலைமுறைகள் படத்தின் இறுதிக் காட்சியில் அவர் பேசின வசனம். 

பாலு மகேந்திரா சார்!

1989ல் தாராசுரம், கோவிந்தசாமி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்னாவது படித்துக்கொண்டிருக்கும்போது எங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை. டி.வி. அதிசயம்! ஊரில் சில பணக்காரர்கள் வீட்டில் அதை வைத்திருப்பார்கள். சனி ஞாயிறுகளில் கூட்டம் கூடும். வயசாளிகள், பெரியவர்கள், வீட்டுப் பெண்கள், இளந்தாரிகள், என வயசு பேதமிருக்காது. டி.வி. ரசிகர்களில் சிறுவர்கள் கூட்டம் தொலைக்காட்சி முதலாளிக்கு எப்போதுமே தொந்தரவாகத்தான் இருக்கும். பேசிக்கொண்டே இருப்பார்கள். புழுதி நாற்றமடிக்கும். மேல் சட்டை அணிந்திருக்கமாட்டார்கள். படம் முடிந்து விளக்கு போடுகையில்தான் தெரியும், ஒன்றிரண்டு பேர் கோட்டுவாய் ஒழுகத் தூங்கியிருப்பார்கள். இப்படி எங்களை டி.வி. பார்க்க, உள்ளே அனுமதி மறுக்க அவர்களுக்கு அநேகக் காரணங்கள். இருந்தாலும் தளராமல் வீடு விட்டு வீடு கூட்டத்தில் கடைசி ஆளாகப் பேசாமல் நிற்பேன். 

வாரா வாரம் சனிக்கிழமை மாலை தூர்தர்ஷனில் இந்திப் படம் போடுவார்கள். ஒட்டகம் மார்க் சிகைக்காய்த் தூளுக்கு கும்பகோணம் ஏஜெண்டாக இருந்த ஒருவர் வீட்டு டி.வியில்தான் பின்னாளில் கூட்ட நெரிசல் இல்லாமல் இந்திப் படங்கள் பார்க்க முடிந்தது. சித்திதான் (அம்மாவுடன் பிறந்த தங்கை) அழைத்துப் போவார். இந்தியோ, தமிழோ, தான் பார்த்த படங்களின் கதையைச் சொல்லிக்கொண்டே இருப்பார் சித்தி. தாத்தா, ஆத்தா, மாமா, அத்தை, சித்தி என இருந்த கூட்டுக் குடும்பத்தில் பெற்றோரைப் பிரிந்திருந்த எனக்கு அந்த நினைவு வராமல் பாத்துக்கொண்டவர் சித்தி.

கும்பகோணம் அரசு கல்லூரியில் முதுகலைப் பயின்று வந்த சித்திக்கும் எனக்குமான சனிக்கிழமைகள் இப்படி அமையும். உதாரணத்திற்கு “Peacock” என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கைப் பிழையில்லாமல் சொன்னால்தான் அன்றைய ஹிந்திப் படம். புத்தகத்தைப் பார்த்துவிட்டு நேரமெடுத்துக்கொள்ளாமல் உடனே ஸ்பெல்லிங் சொல்வேன். சித்தியும் உடனடியாக வெரிகுட் சொல்லிவிட்டு சுவர்க்கடிகாரத்தைப் பார்ப்பார். ஐந்தரையை நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம். மிச்சத்தை நாளைக்குப் பார்க்கலாம் எனக் கழிந்த ஹிந்திப் படங்களின் சனிக்கிழமை மாலைகள், நினைவுகள். டி.வி. எங்களை ஈர்த்தது. தூர்தர்ஷனில் ஞாயிறு மாலை தமிழ்ப்படம் ஓடும். அப்படி ஒரு ஞாயிறு மாலை, சித்தி சொல்லி தாராசுரம், ராஜ ராஜன் தெருவிலிருந்து உடையார் வீடு பஸ் ஸ்டாப்பிங் தாண்டி ஒரு வீட்டில் நான் பார்த்ததுதான் பாலு மகேந்திராவின் வீடு. பாட்டு இல்லை. டான்ஸ் இல்லை. ரொம்பவும் விரும்பும் மந்திர தந்திர மாயாஜாலக் காட்சிகள் இல்லை. ராமாயணத் தொடரில் வந்த அம்புகளோ, போர்க்களக் காட்சிகளோ எதுவும் இல்லை. என்றாலும் ‘வீடு’ பிடித்திருந்தது. மனசுக்கு நெருக்கமாகவும் இருந்தது. தாராசுரம் மெயின் ரோட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படுத்தப்பட்டு ராஜ ராஜன் தெருவில் நாங்கள் குடிபெயர்ந்தது; புது வீடு கட்டுவதற்குள் தற்காலிகக் குடிசைக்குள் வாழ்ந்தது; காற்றடிக் காலத்தில் வளையும் பனைமரம் எங்கள் குடிசை மேல் விழுமோ என்றெண்ணித் தூக்கம் வராமல் தவித்தது; கற்களால் ஆன ஒரு வீட்டைக் கட்ட நடந்த போராட்டங்கள்; என பாலு மகேந்திராவின் வீட்டோடு என் வீட்டைத் தொடர்புபடுத்திப்பார்க்கக் காரணங்கள் ஏராளம். ‘வீடு’ கதையை என்னை சொல்லச் சொல்லி சித்தி கேட்டுக்கொண்டிருந்தது இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது.

“இன்னதெல்லாம் நல்லது. இதுவெல்லாம் கெட்டது. நீ பார்த்த 'வீடு'தான் நல்ல சினிமா… நம் வாழ்க்கையைப் பிரதிபலித்திருக்கிறது பார்த்தாயா…” என சித்தி சொன்னதுதான் எனக்கான முதல் சினிமாப் பாடம். 

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்த புதிதில் மூன்றாம் பிறை டி.வி.டி.யைத் தேடித் தேடி வாங்கியது போன்ற நடவடிக்கைகளைச் சித்தி ஏதும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தன் பின்னணி எனக்கும் சித்திக்கும் பாலு மகேந்திராவுக்கும் மட்டுமே தெரியும். 

‘கர்ண மோட்சம்’ டி.வி.டி.யாக வந்தவுடன் நானும் நண்பன் கீர்த்தியும் பாலு மகேந்திராவைச் சந்தித்துக் கொடுக்க அவர் அலுவலகம் சென்றிருந்தோம். தேநீர் கொடுத்து உபசரித்தவர் நாங்கள் கொடுத்த டி.வி.டியைப் பெற்றுக்கொண்டு, கதைச் சுருக்கத்தைக் கேட்டபின் ஒரு வெள்ளைக் குறுஞ்சீட்டைக் கிழித்து, அதில் என் கைப்பேசி எண்ணைக் குறித்துக்கொண்டு அந்த டி.வி.டி. உறைக்குள்ளே வைத்துக்கொண்டார். எங்கள் எதிர்காலம் பற்றி விசாரித்தார். நான் உதவி இயக்குநராக வாய்ப்பு தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னென். என்னிடமிருந்து அதை அவர் எதிர்பார்க்கவில்லை போல. சில நிமிடங்கள் மௌனமாயிருந்தார். நான் பதைத்துப் போய் கீர்த்தியைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்க்காதது போன்ற பாவ்லாவுடன் தொடர்ந்து மௌனமாயிருக்கும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். “You’re a professional film maker… Already you’ve chosen that film making is you’re profession… You’ve proven that with your short film… Then why you want to be assisting someone else..?” என இன்றுவரை விடை காண முடியாத அந்தக் கேள்வியைச் சற்றுக் கோபமாகவே எங்களிடம் கேட்டார். குருவின் முன் சரணாகதி அடைந்த சீடர்களாக நாங்கள் மௌனித்திருந்தோம். எங்களின் இயலாமையை உணர்ந்த அவர் தன் பேச்சை மாற்றும் விதமாக, “என்ன படம் பாத்தீங்க..?” என்றார். சற்றே நம்பிக்கை வந்தவனாக, “‘பருத்தி வீரன்’ சார்… எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” என்றேன். மீண்டும் அமைதி. “ஏம்பா… அந்தக் கதை நடக்கிற ஊர்ல, அன்பா, தணிவா, பேச ஒரு ஆள் கூட இல்லையா… ஏம்பா எல்லாருமே இவ்வளோ கோவக்காரங்களா இருக்காங்க” எனச் சொன்னவர் இறுதியாக எங்களை வாழ்த்திவிட்டுக் குறும்படத்தைப் பார்த்துவிட்டுத் தொலைபேசியில் அழைப்பதாகச் சொல்லி அனுப்பி வைத்தார். நான் ரொம்பவும் எதிர்பார்த்திருந்த அந்த அழைப்பு வரவேயில்லை.

அதன் பிறகு மக்கள் தொலைக்காட்சியின் பத்து நிமிடக் கதைகளில் சிறந்த பத்துக் குறும்படங்களில் கர்ண மோட்சமும் ஒன்றாக வந்தது. அதை அவர்தான் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்கள். அந்த பத்துப் படங்கள் பற்றின தொலைக்காட்சி நிகழ்வில் கர்ண மோட்சத்தை நிரம்பப் பாராட்டினார். நானும் கீர்த்தியும் கொண்டு போய்க் கொடுத்த டி.வி.டி. பற்றின நினைவு அவரிடம் இல்லை. புதிதாகப் பார்த்ததாகத்தான் பேசினார். பத்து குறும்படங்களின் இயக்குநர்களுக்கும் அந்நிகழ்வில் கலந்துகொண்ட நிழல் பத்திரிகை ஆசிரியர் திருநாவுக்கரசிடம் தன் செலவில் ஓராண்டுக்கு நிழல் இதழ் அனுப்பி வைக்கச் சொன்னார். 

‘கர்ண மோட்சம்’ திரையிடப்படும் இடமெல்லாம் அவரே உடனிருப்பது போலத்தான் இருக்கும். மௌனத்தின் இசையைக் கற்றுக்கொடுத்தவரல்லவா அவர்!

‘பாலு மகேந்திராவை ஒருமுறையேணும் சந்தித்துப் பேசிவிட வேண்டும்’ என ஊருக்குப் போகும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார் அண்ணன் மணி.செந்தில். அழியாத கோலங்களின் தீவிர ரசிகர். அந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லிச் சொல்லிக்கொண்டே இருப்பார். இன்றுவரை அழியாத கோலங்களைப் பார்க்கவில்லை. அவரும் பாலு மகேந்திராவைப் பார்த்தாரா தெரியவில்லை. இன்று (13.02.2014) அவரிடம் அதுபற்றிக் கேட்க எனக்குத் திராணியுமில்லை. 
பாலு மகேந்திரா சார்..! ஒரு தீர்க்கதரிசி. தான் கற்ற சினிமாவைத் தான் நேசித்த சினிமாவுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்ட சமரசமில்லாக் கலைஞன். ஸ்டோன் வாஷ் ஜீன்ஸ் சட்டை, தொப்பி, கழுத்தில் கர்ச்சீஃப், கையில் ஒரு சிறிய தோல் பை, எனத் தனக்கிருந்த பொதுப்பிம்பத்தை களைந்துவிட்டுக் கடைசி காலத்தில் தன் தலைமுறைகள் படத்தில் ஒரு நடிகனாகவும் சேதி சொல்லிவிட்டுப் போய்விட்டார். 

“தமிழை மறந்துடாத…
தாத்தாவை மறந்துடாத!”
 அய்யன் பாலு மகேந்திராவுக்குப் புகழஞ்சலிகள்!


-    ச.முரளி மனோகர்.





Share